1.
எனை நேசிப்பது
கடினம்
வெறுப்பது
எளிது.
அரிதானவள் நீ
எளிதானதை ஏன்
தேர்ந்தெடுக்க வேண்டும்
சகியே!
2.
எனக்கு
உன்னைப் பிடிக்கும்
என்பது
உனக்கு புரியாதது
போலவே
எனக்கும் புரியாமல்
இருந்திருக்கலாம்!!
3.
பறித்த பூக்களுக்காக
செடிக்கு
நன்றி சொன்னேன்.
பறிக்காமல் விட்ட பூக்களுக்காக
எனக்கு
நன்றி சொன்னது!!
4.
வீட்டில் ஒரு
குழந்தை பிறந்ததும்
தாய் தந்தைக்கு
வயது கூடிவிட்டது,
தாத்தா பாட்டிக்கு
வயது குறைந்துவிட்டது…
5.
கவலையில்
இருக்கும் போது
எழுதிய கவிதைக்கு
கிடைத்தது
ஆறுதல் பரிசு!
6.
திருவிழாவில்
இப்போதெல்லாம் யாரும்
காணாமல் போவதில்லை.
திருவிழாக்கள்
காணாமல் போய்க்
கொண்டிருக்கின்றன.
7.
எல்லோரும்
நடிக்காமலிருப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான்
வேடிக்கை பார்ப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறேன்.
8.
எனை யாரும்
தெரிந்து கொள்ளவேண்டாம்.
எல்லோர்க்கும் எனைத்
தெரிந்து விட்டால்
எனக்கு என்னைத்
தெரியாமல் போய் விடும்.
எழுதியர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஒவ்வொரு கவிதையுமே ஒன்றையொன்று விஞ்ச முனைவதாகப் படைக்கப்பட்டு உள்ளது. எளிமையான வார்த்தைகளால் மிக எளிமையாகத் தன் மனதில் பட்டதை அழகாகக் கவிதை படைக்கும் வல்லமை கொண்டவர்.
மிக அருமை.