கூடுதலாய் ஒரு பிணைப்பு
*******************************
எப்போதும் விரலொட்டியே கிடப்பாய்…
விறகு வெட்டி கோடாலியின்
மீள்புனைவு எடுப்பாய்..
கொஞ்சமுமாய் கரங்கள் உரச
காமாலையில் மிளிர்ந்து சிறப்பாய்..
மீண்டும் புணர்வு கொண்டு புத்தாக்கம் பெற்று ஒளிர்வாய்..
புதுமகளாய் நீ பூப்பெய்தினாலும்
பாமாலை சூட வக்கற்று நிற்கின்றேன்..
மயங்கொலிப்பிழையாய் மசக்கையில் கிடந்தாலும்..
உனதெழிலின் செழிப்பில்
சரணடைந்து கிடக்கிறேன்..
காற்புள்ளி சிலதும்..
முற்றுப்புள்ளி முழுதும்…
தரித்த வெண்சீலை நாயகியே,..
உன் திருமுகம் தீக்ஷைத் தாங்கி
திருமேனியில் தீர்த்தமாடினாலும்
தெவிட்டாது உன் மோகம்
உனை கொள்ளவே மனம் தினமேங்கும்..
கோட்டோவியமாய் ஒரு முகமும்
கூடுதலாய் கோலம் தீட்டிய சித்திரம் மறுசாயலிலும்..
ஆங்காங்கே தொக்கும்
மழலைப்பாதம் நடையழகிலும் ..
உச்சிமயிர் பிடுங்குகிறதே..
உயிர் மொத்தமும் மிச்சமின்றி உறைகிறதே..
மெய் விதிர்ந்து நிற்கின்றேன்..
மெய்யாக உனை தரிக்க விழைகின்றேன்..
டாவின்சியின் உயிர்ப்பே..
மோனோலிசாவின் சிரிப்பே..
தூரிகை பலதுகளின் முகப்பில் முடிசூடி உயர்கிறாய்.
ஒருமித்த மைக்கோல்களின் உளிச் சிலையாகி சிவக்கிறாய்
மானுட முகங்களில் வசிக்கிறாய்.
மனித மனோநிலையையும் வாசிக்கிறாய்…
மாதர் விளிம்புநிலையையும் பேசுகிறாய்..
மூன்றாம் பாலினரையும் கொண்டாடியே தீர்க்கிறாய்
வீணாக்கும் பொழுதுகளைக் கூட வீணையாய் மீட்டி அசத்துகிறாய்…
நீயில்லா பொழுதுகளின் நனவுகள் கூட நினைவில்லை…
நீயற்ற கனவுகளில் எனை நனைக்க கூட மனம் விழைவதில்லை…
பிரிவின் ஒற்றிலும் உன் அருகாமை வேண்டும் எனக்கு..
வாழ்துயரின் நிமித்தத்திலும் உனை பிரியாத வரம் கொடு எனக்கு…
இறந்துய்த்து வாழோம்
****************************
குலப்பெருமைப் போற்ற
வெற்றிக்களம் காணும் விரலொன்றை வேண்டி நின்றாய்..
வீழ்த்த யுக்திகள் பல இருப்பின்..
அத்துனையும் விடுத்து
ஒற்றை விரலில்
சாமர்த்தியம் கண்டாய்..
உணர்வொற்றில்
கலை பயின்றோம்…
நினைவாற்றில் கற்றுத்தேர்ந்தோம்..
இளவட்டத்தை பாதமாக்கி
முதிர் சிந்தையை சாதமாக்கிய
சாணக்கிய ஓரங்கத்தை சடுதியில் சிதைத்திட அறியேனோ யான்..?
ஆயப்பனுக்குப் பின் குலசாமி முன் கூடி சிரமது கொடி சாய்ந்ததில்லை இதுகாறும்…
கரையோரத்து நிலத்தை
கற்சிலையாக்கித் துதித்தேன்
பக்தியின் சித்தி செப்பனிட்ட…
வணங்கா குடியின் முடி…
வணங்கவே விழுந்தது நின்னை…
ஒப்பற்ற நின் வித்தையை
ஒப்பனையின்றி ஒப்பேற்ற…
பெயர்ந்து நின்றன புலன்கள்
நின்னிரு கமலபாத முன்னம்…
உபகாரமாய் ஏனோ
எமது ஆதார உபகரணமதை வீணே
இறந்து நின்றே..
உடன் உடுத்திச் சென்றாய்..
உயிர்மெய்யற்ற சிலையே அறிந்தும்
மெய்ஞானம் ஏற்று மானசீலமே சூடி மூச்சடைத்து நின்றேன்…
இறந்தாய் இருகரம் தயவின்றி
நாளமறுந்து கரைந்த மானமதை களையறுத்துப் பறித்தாய் தாட்சண்யமின்றி..
இரத்தவாடைத் தாங்கிய எமது குலப் பெருமையை உறிஞ்சி குடித்தாய் நின் குலம் சிறக்க…
அசலில்..
இறந்த குடிக்கு மூத்தோனானாய் நீர்..
உனக்குத் துறந்து உச்சிகனத்து நிமிர்ந்தோனானேன் யான்..
துளியும் வெட்கித் தலைசாயாது
பிச்சைப் பாத்திரம் நிறைத்து
நடைப்பயின்றாய்..
போதிக்கும் தகுதியும் இழந்தாய்..
நீதிக்கு முன்பு நீச்சனுமானாய்..
தட்சணை வேண்டி குனிந்துக் கொடுத்தேன் எம் வீரத்தை அன்று
இன்றோ….
நுனி நகம் மட்டும் கேட்டுப்பார்…
முடிக்கும் முன்னம்
களமிறங்கும் எம் கேடில்கோஷ்டம்…
இறந்துண்டு மாள்வோம்
நின் போல் இறந்துய்த்து வாழோம்..
மீண்டும் ஒரு யாத்வஷேம்
******************************
பாறையின் பளிங்கில்
பாசாங்குச வெண்சிறையில்..
பனித்துளி குமிழில் பச்சைமெத்தை அரவணைப்பில்
நிதம் விடியலை விளித்திடுவேன்..
அடர் விருட்சங்கள் துப்பித்தீர்க்கும் குளிர்வாடையில்
அப்பிய சுவாச அரிதாரத்தில்
உயிர்வளி வாதையின்றி விரியப் பெற்றேன்.
ஆதவனின் ஆர்பாட்டமோ..
அந்திமாலையின் அல்லாட்டமோ..
அர்தராத்திரியின் அறிதுயில் மட்டும் எனக்கே எனக்காய் வாரியணைத்திடுவேன்
எல்லாம் சுகமே
எதுவும் நலமே..
அன்னை பூமிக்கிங்கு அவஸ்தைகள் இல்லையே..
சிலாகித்த கணங்கள் தான் எத்தனை…
இன்றோ…
கயவனின் கட்டுத் தறி முழுதும்
விலங்கிட்ட மனிதபரிதாபம்
பரிதவித்தும் பராமரிப்பற்றும்
பட்டித்தொட்டி எங்கும் விலங்குமனிதரானோம்
சவக்கோப்பையிலே..
கூனிட்ட உயிர்என்புகள்..
சதை தடவிவிட்ட கதை
தசை திருத்திக்காட்டுகிறது
அப்படமாய் ஊடுகதிரின்றி..
முகாந்திரமோ ரத்தத்தில் குழம்பிக் கிடந்தது..
நரம்பு புடைத்து பிக்காலி
போல கண்டமேனிக்கு சுற்றி வருவதை கதைத்துக் தானே வருகிறது வரலாறு ஒன்றும்..
விடியும் நாள் நோக்கி…
தாயகப் புலமும்
நாவதன் புலமையும்…
இந்த நரகக்குவளைக்குள் மசிந்துப் போயின..
சைகையொற்றில் மட்டுமே இங்குள்ள ஊமைகள் உறவாடின..
வன்ம புணர்விற்கு உயிர் தந்து..
உயிர்மூச்சை முடிஞ்சு விட
எத்தனிக்கும் உனது பெரும் தந்திரம்..
மழுங்கிடும் நாளொன்றிலும்
மிச்சமாய் மன்றாடி நிற்கும் எனது கடும்பிரயத்தனம்…
வம்பாய் அடித்தாலும்..
வசைகளால் சபித்தாலும்..
மனிதகழிவால் புரட்டினாலும்..
வலசை போய் தான் கிடப்பேன்
உனது துஷ்டவிளி
என் அங்கவெளியை விழுங்கிய கனத்திலும்..
வெட்கம் கெட்டுப் தான் கதைக்கிறேன்..
புழுத்துத் தடவிய உனது நீச்சக்கறையை
துடைத்து வருவேன்
துண்டு ரொட்டிக்காக நாளொன்றிலும்..
அம்மையை பிரிந்த அன்று அம்பலமானேன்
உனது இச்சைக்கு….
ஐயனைத் தொலைத்து இன்றே
மீதமும் நிர்மூலமானேன்
உயிர் பிச்சைக்கு..
ஒட்டியுள்ள உறுப்பொன்றையும்
செத்துப் போன புலனைந்தையும்
தானியங்கியாய் தனதாக்கினாய்..
எனக்கானதாக மட்டுமே எதை வழியனுப்புவாய் உயிர்பிரியும் கணத்தில்..
விட்டுவிடு என மெய் விதிர்ப்பதில்லை இப்பொதெல்லாம்..
கொன்று விடு என்றே உயிராவி ஒலித்துக் கிடக்கிறது
நீ புணரும்போதெல்லாம்..
கருநீலம் பூத்த ஈரபூப்பனல்
**********************************
புனல் என்பதாலோ என்னவோ
எப்போதும் நீர் குவிந்து நிற்கிறாய்…
உவர் நீர் சொறிந்து
உலர்தீயை அணைக்கிறாய்..
துவண்ட சுவரைத் துப்புரவும் செய்கிறாய்..
திரைச்சீலை தானே என
கண்மூடி அயர்ந்தால்
நீரலையின் நினைவு கூட நிர்வாணப்படுகிறது
நனவு வலிந்து வரிந்து
தனையே நிர்மூலமாக்குகிறது.
கலக்கம் போக்க கனவொன்று கண்டெடுத்தால்
அதுவும் கூட கலவரம் கக்கி கதிகலங்கச் செய்கிறது…
கதவடைத்து நின்றால் கரை புரண்டு கடைவாசல் கூட்டுகிறது..
கொடிது கொடிது என நனவுகளைக் கொட்டடித்தால்.
அங்குமொரு கதறல் கண்சிமிட்டிக் கனக்கிறது..
போதும் போதும் என
முகம் திருப்பி வந்தால்..
நான்முகப் பேயொன்று
தலை தட்டித் தரைமட்டமாக்குகிறது..
கடத்தலோ கடந்தவையோ வேண்டாமே இனி..
காண்பவையேனும் கைக்கூடட்டும் நனி..
என..
இருகரம் நீட்டி வழிவிட்டால்..
கலகலவென கள்ளிச்செடி கத்தியே கொக்கரித்துச் சிரிக்கிறது…
கைதட்டியே கும்மாளம் கூட்டுகிறது..
அடடா… ஆர்பாட்டம்..
ஆட்டிப் படைப்பது அதன் நாட்டம்..
புதுமையும் வேண்டாம்..
ஈரப்புனலும் வேண்டாம்…
கருவிழிப்பூ எப்போதும் போல உயிரற்றே இருக்கட்டும்..
கொஞ்சமேனும் காய்ந்து தனை கத்தரித்துக் கிடக்கட்டும்.
இப்போதும் கூட…
வசந்தத்தின் வரவு தூரத்தை அல்ல
மீள்துரிதத்தைத் தேடி காத்துத் தான் நிற்கிறது..
காட்சிப் பிழைகள்
**********************
இயல்பாய் நிகழும் பிம்பம் ஒன்றும்..
கணநேர பயண அசைவு
ஆழ்மன திரைகதம்பம் ஒன்றோடொன்று
திக்விஜயமாய் தோன்றி நிற்கும்..
திக்பிரமையை உண்டும் பண்ணும்..
உளத்தின் உணர்வுகள்
திடுமெனத் தோன்றிடும்..
சடாரென மறைந்திடும்…
மெலிதாய்க் கடக்கும் மேகம் போல..
தொலைநோக்குப் பார்வையோ அசைந்தாடும் பிழைகள்
துரிதமாய் ஊசலாடும் காட்சிகள்..
நினைவிலும்
நனைவிலும்..
நிகழ்காலத்திலும்
தொலைந்த நொடிகளிலும்
சிலநேரம் மனதிற்கு நெருக்கமாய்
பலசமயம் ஏதோ தொலைந்த தூரத்தில்
நமக்குவப்பானதா.
அல்லாததா..
சிந்தனைச் செப்பனிடும் முன்
காட்சி சீலைகள் கலைந்தே போகும்..
காட்சிப்பிழையாய் மறைந்தும் போகும்..
இது ஏது…
அது எவ்வாறு
என்றெல்லாம் குளறும் எண்ணம்.
இதுகாறும் கொண்ட கனமா..
இப்போது மட்டுமே இருண்ட மனமா..
ஆராயும் முன்னம்..
நிகர்த்தியே தொண்டு செய்யும்..
மனம்….
அதுவொரு மாமேதை..
உடன் காலனும் தேவையில்லை.
நிதம் காக்க கடவுளின் அவசியமுமில்லை..
செல்லுமிடங்கெங்கிலும்
உடனிருக்கும் மருத்துவம்..
அதுவே மனம் எனும் மஹாஉன்னதம்..
எங்களுக்கும் வாழ வழியுண்டோ இப்புவியில்…
*****************************************************
குரலற்ற உயிர் வாழும் தேசம்.
ஏனோ…
இறைக்கிங்கே பாரபட்சம்…
மனிதர் மட்டும் ஒலிக்க
மனிதரல்லா உயிர்க்கிங்கே பெரும்கஷ்டம்..
அடித்து உதைக்கவும்..
சுருக்கி வதைக்கவும்
இழுத்து நொடிக்கவும்
விரட்டியே அடிக்கவும்
இரக்கமற்ற மனிதக் கூட்டம்.
வலி உணர மானுடர்க்கோ
வழியேதும் விளங்கவில்லை
வதையுண்ட அவன் செவிக்கோ
விடையேதும் ஒலித்திடவில்லை
இவர் தம் மொழியறிய
அவற்றிற்குப் போதிக்கவில்லை..
அவைதம் இசைவு உணர
இவனுக்கோ மனமது இறங்கி வழிவிடவுமில்லை.
ஏனோ மனிதன் விஞ்சியே நிற்கிறான்
நாங்கள் கெஞ்சியும்
தவிர்க்கிறான்..
இயற்கையை மிஞ்சியே உதறுகிறேன்..
கிஞ்சித்தும் அசைய மறுக்கின்றான்
நீ மட்டும் வாழ..
எமது வாழ்வை ஏன் குலைக்கிறாய்..
உனக்கிங்கு வாழ உரிமை எத்தனையோ..
எமக்கும் உண்டு அத்தனையும்..
மறவாதே மானிடா..
மறந்தும் துன்புறுத்தாதே மனிதா..
எமக்கு மட்டும் ஏனிந்த வாழ்வு?
*************************************
வனக் குயிலே..
உனக்கும் கூட தனித்து வாழ இங்கு வழியுண்டு..
மனிதர் எமக்கோ எம்மினம் தவிர்த்துத்
தவித்து வாழவே மொழியுண்டு…
அன்பு நேசம் மனிதம்
போக..
தாய்மை மெய்யை வாய்மை..
அன்றி..
வேறென்ன வேண்டும் இங்கு
மகிமை சமைக்க…
ஆயினும்..
ஒருசாரார் மட்டுமே சுகித்திருக்க..
ஒடுங்கிய எமக்கோ நிதம் வலித்திருக்க..
புவியும் கூட ஒரு புறம் தாழ்த்தியே தான் படைத்திருக்க..
எங்குதான் போவோம் நீதி கேட்டு விழித்திருக்க…
களங்கமும் நிலவில் உண்டு
கலக்கமும் எமக்குள்ளும் உண்டு
சுட்டெரிக்கவும் சூரியனுக்கு வலிமையுண்டு..
இருள் சூழ்ந்து நிற்க
கருத்த மேகக் கூட்டத்மதற்கு
அதிக வாய்ப்புண்டு..
நிலமாந்தர் எமக்கோ
உயிர் நிறுத்தி வைக்கக்கூட
வக்கற்று ஒதுங்குகிறோம்
உடல் காத்து நிற்கவும்
அலைகின்றோம்…
என்று விடியும் எங்கள் புலம்பல்?..
உழைப்பின் வாழ்வாதாரம்
*********************************
உழைத்துப் பிழைக்க….
கரமிரண்டும் கூட அனாவசியமே..
உழைப்பின்றி இருகரமும் இங்கு அனாயாசமே..
உழைக்க வழி எப்போதும் முன் தோன்றுமே…
வாழ்ந்திடலாம் மீப்பெரும் வாழ்வதனை…
கடத்திடலாம் கலகமூட்டும் இப்பெரும் கவலை தமை..
உண்மை நிலைத்திருக்க.
வாய்மை மொழிந்திருக்க
பொய்மைத் தவிர்த்திருக்க
நேர்மை கைகோர்த்தே நிற்க
பேரச்சமூட்டும் யாவையும் சகித்திடலாம்
சகதியில் கிடத்தியும் விடலாம் நொடி ஒவ்வொன்றிலும்…
வேண்டும் இவையாவும்..
***************************
சீரிய மதிகொண்ட மானிடர் மாநிலமெங்கும் உண்டாகிட வேண்டுமம்மா..
கொஞ்சும் மழலையோடு குலாவிடும் மனமொன்றும் வேண்டுமம்மா..
குளிர்ந்த மழையை கொண்டாடவும் மாநிலம் ஒன்று தேவையமம்மா..
கூசும் கதிர்களை ரசிக்க விழியிரண்டும் தேடுதம்மா…
புலர்காலையில் பூக்கும் புஷ்பங்களை சுவாசித்தல் வேண்டுமம்மா..
அதில் கொஞ்சிடும் நாசியின் மகிழ்கூத்தாடிட வேண்டுமம்மா..
நீல வானம் அகன்று விரிந்தாடுதம்மா..
கரிய மேகக் கலைக் கூத்தோ விந்தையம்மா…
மொழிகள் அனைத்தும் வேண்டுமம்மா
தமிழ் மொழி அவற்றில் தலைமையாகுமம்மா.
து.பா.பரமேஸ்வரி
சென்னை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.