இப்போதும் நீ எனக்கு
*************************
மழலைப் பாதப் பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம்
அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமின்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

தாழிட்ட இதயவாசல்
*************************
காதலர் தினமன்று மட்டுமே
சிலாகித்துப் பரிமாறும் நமது அன்பு..
இதுவரை காதல் என்பது போலவே
தான் உச்சிமுகர்கிறேன்..

தொலைவில் நின்று கொண்டு
நலத்தை மட்டுமே சம்பிரதாய காதலாக முன்வைக்கும்
உனது பிரியங்களை
காதலர் தினத்தின் அர்த்தராத்திரிகள்
எனது செவிகளைச் சன்னமாகச் சொல்லி விட்டுப் போகும்..

அந்த ஒற்றைத் திளைப்பிற்காக
ஆண்டு முழுமையும்
தவமிருக்கிறேன் …
விழியும் வழியும் மொழியும் பூக்க……..

இன்றும் நீ தாழிட்ட
இதய வாசல் திறக்கப்படாமல் தான் இருக்கிறது…
சாவியை கையிலேந்தியே..

ஞாயிறில் ஞாயிற்றின் மெத்தனம்
***************************************
முன்னிரவும் பின்னிரவும் பிரிந்து
கற்கலின் கடன் தீர்க்க
ஜன ஜந்துக்கள் ஒன்றும்
காடுகரை
களப்புமேடு
யாவும் தேடித்திரிய
நீலம் பாரித்த வானவள்
அங்கசுத்தி முடித்து
உடுப்பு மாற்ற பரிதவிக்கிறாள்…
வசந்தக்குளிரின் சுகவாசியாக
பஞ்சணையில் கதகதக்கும் கரும்போர்வை நீக்காது
சோம்பல் முறிக்கும் ஆதவனின் நிலைக்கதவு திறக்க வேண்டியே..

பாலியல் பரிசுத்தம்
*************************
பாலியல் பேதமற்ற பரிபாஷணை
இடைமறியாத இங்கிதத்தில்
மாடிமுகப்பிற்கு மகனை விரட்டுகிறாள் அன்னை…

கொஞ்சமும் சூதற்ற சம்பாஷணை
சற்றும் வாதமற்ற மொழியில்
தோழியிடம் அன்பைப் பரிமாறுகிறான் பிள்ளை..

உணர்வு புனிதம்போற்ற
உரிமைநம்பகம் சிறக்க
பாலியல் பரிசுத்தம் பறைசாற்ற
பக்கத்து அறைக்குப் பெயர்கிறாள்
அலைபேசி மகளின் மாற்றாந்தாய்..

கைம்பெண் கடன்
*********************
வாழ்வதையில் வதங்கி
மொழி தொலைத்து
மௌனம் தரித்து
உற்றார் நழுவி
உறவு உதிர்ந்து

அடுக்களை கூடாரவிருந்தாகி
அறுசுவை உணவில் கசப்பாகி
விழிகளுக்கு மட்டிலும் உவர்ப்பாகி
புதியன கழித்து
பழையன புகுத்தும்…
மனிதவிலக்கான..
அவளின் பற்றறுந்த கூடு தான்..
எங்ஙனம் வேகும்…?

இப்போதும் நீ எனக்கு….
***************************
மழலைப் பாதப்பயிலகம்
தடுமாறி வீழும் போதெல்லாம் அள்ளியெடுத்து ஆரப்புதைத்து
தழுவுவாய் அம்மாவாக…

உனது ஆறுதல் வெப்பத்தைச்
சுவைக்கவே
மீண்டும் அடி வைப்பேன்
ஆசையாய்..

துளிக் கண்ணீரையும் சகிக்காத
உனது பேரன்பில்
எனது வலியும் கூட வலுவிழக்கும்…

இன்றும் நீ இப்படித்தான்..
எட்ட நின்று காட்டிக் கொடுக்கும்
உனது விழிவழி..
பளிங்கு பாசாங்கு ஒவ்வொன்றையும்

துள்ளித் திரியும் வாலிப முறுக்கு
அசட்டையாய் வன்மம் செய்யும்
சறுக்கல் மட்டுமே புலப்படும்..
மீதம் வீழ்த்திய பின் புலம்பும்

விசனமான்றி கைகொடுப்பாய்…
நொடிந்திடும் என் பாதங்களுக்கு..
அதே விசேஷ சாயல்
உனக்கே உனக்கான…
பிரத்யேக முறுவலுடன்..

பரிச்சயம் தான் எனக்கு
விழிகள் உதிர்க்கும்
கண்ணீர் வரிகளைத்
துடைத்துத் தூர்வாரும்
ஒரு அப்பாவாக..

து.பா.பரமேஸ்வரி
சென்னை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *