காத்திருத்தல்
தமிழ் தெரு: 2011
பேருந்து நிலையம்..
முழம்போடும் பூக்காரி ..
கூவிப் பழம் விற்கும்
மூதாட்டி
ஈரோட் .. ஈரோட் .. ஈரோட் ..
இரையும் கண்டக்டர் குரல்
டீ ஆற்றும்
முண்டா பனியன்
முதியவரின் நெற்றியிலும்
செம்பு (B)பாய்லரிலும்
திருநீற்றுப் பட்டை
குட்டிகள் பின்தொடர
இரை மேய்ந்து
முன் செல்லும்
பால் மடி கனத்த
தாய் நாய்
முதுகு யேனையில் உறங்கும் மழலை சுமந்த
தாயின் தாள வாத்திய
பின்னணியில்
அந்தரத்தில்
கயிற்றில் நடக்கும்
சிறுமி
இரைச்சல்கள் ஊடே
தூரத்தில் மெலிதாய் ஒலிக்கும்
ராசாத்தி மனசுல
சிமென்ட் பென்ஞ்சில்
ஸ்மார்ட் ஃபோனில்
கிசு கிசு குரலில்
தீயாய் காதல் வளர்க்கும்
இளைஞீ
குப்பை அருகில்
தலை சொரிந்து
பேன் குத்தும்
நடுவாந்தர வயது
மனப்பிறழ்வுக்காரிக்குள்
ஓர்
தொலைந்த காதல் இருக்கலாம்
சுற்றமும் நட்பும் சூழ
பேருந்திலேறும்
கிராமப் புதுமணத் தம்பதி
அண்ணாச்சிப் பழ
துண்டுகள் அடுக்கிய
மூங்கில் கூடையுடன்
லாவகமாய்
பேருந்தில் தாவும் சிறுவனுக்கு
வயது
பன்னிரண்டிருக்கலாம்..
நடமாடும் பேனா ஸ்டேண்ட்டாய்
பேனா வியாபாரி
பேருந்தினுள்
இடம் பிடிக்க
கர்சீஃப் போடும்
சிகரெட் வாய்
இளைஞன்
கல்லூரிப் பேருந்திலேறிய மகளுக்கு
கையசைக்கும்
தகப்பன்
மெலிந்த தேகமாய்
பசிக்காய் கையேந்தும்
ஊனப் பெண்
மாணவர்கள் தொங்கி வழியும்
மாநகரப் பேருந்து
நடை பாதைக் கடையில்
நாய் பொம்மை கேட்டு
அழும் குழந்தை
எவர்சில்வர் ஃபிளாஸ்கில்
சுக்கு காபி விற்கும்
சைக்கிள்காரர்
அறுந்த செருப்புக்காய்
தவமிருக்கும்
கூன் முதுகுக் கிழவன்
தன்
உளவுப் பார்வையால்
தேடித் தேடி
இரை பொறுக்கும்
ஒற்றைக்கால் காகம்
மற்றும்
எனக்கான பேருந்துக்காகவும்
ஓர் புதிய கவிதைக்காகவும்
காத்திருக்கும் நான்
கடமை
கடமை'' என்பது... - LifeStyleTamil Duty, Roal ...
அதிகாலை ..
பச்சை  பூசிய
வயல் கரையில்
பனி சுமக்கும்
புல் வரப்பில்
பாதம் பதித்து
மேனி சிலிர்த்து நடந்து
அமர்கிறேனந்த
சம்பங்கி மரத்தடியில்
அருகில்..
பூபாளம்  வழியும்
ஓர்
சின்னக் குயிலிசை
உயிர் நிறைக்கிறது
வண்ணத்திகள்
தேன் பருக
குலுங்கும் பூக்களின் சுகந்தம்
உயிர் நிறைக்க
மென் குளிர் கலந்து
மேனி துவட்டி
சுகமூட்டுகிறது
காலைப் பனிக் காற்று
தாள லயம் கூட்டி
பாய்கிற நீரிசையில்
கமழ்கிறது வயல் வாசம்
பறவையொலிகளின்
ஸ்வரக் கூட்டில்
பிறக்கிறது
ஓர் புதிய
கிராமத்து சிம்பொனி
தங்கம் பூசிய
கீழ்வான வயிறு கிழித்து
பிறக்கிறது
சூரிய மகவு
அடடா…போதும் இது
பொறுக்குமா என் கவி மனம்
இதோ …
களிப்பு மேலிட
கவியெழுதும் நிமித்தம்
அவசராய்
பேனாவை எடுக்கிறேன் நான்
அதோ…
கோமணம் அணிந்த
உழவனொருவவன்
கழனியில் இறங்குகிறான்
… தன் வேலை நிமித்தம்
                                  – துருவன் பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *