மலர் வளர்ப்போம்
**********************
யுத்தங்களின்
அபாய சங்கொலியில்
உலகத்தின்
அடிவயிறு கலங்குது
அணு குண்டு சத்தத்தில்
கருவும் சிதையுது .
பெண்டு பிள்ளைகள் பதறி
இரத்தம் தெறிக்க ஓடுது
வீடின்றி வாசலின்றி
நாதியற்று
ஆளுக்கொருதிசையில்
சிதறுது குடும்பம்
பாரினில் மூளும்
போரில்
நாடு துறந்து
தூக்கம் தொலைத்து
துக்கம் கனக்க
துப்பாக்கி ஏந்தும்
இராணுவத்தினர்
கண்ணீராறு ததும்புது நாற்புறம்
மனிதம் தொலைத்த
மனிதர்கள்
மரணப் பீதியில்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுச் சாகுது
பூமியில்
மனிதரற்ற
நிலத்தை
வளத்தை என்னசெய்யப்போகுது
வாய்க்கரிசிப் போடக்கூட
யாருமற்ற நாடுதான் எதற்கு
ஒரு மரத்தில்
பறவையினம் பல வாழுது
அன்பொழுக
பாரினில் எட்டுத்திக்கும்
உலாப்போகுது
சமாதானமாக
பிரபஞ்சத்தில்
ஐம்பூதங்கள்
யாவருக்கும் பொதுவே
எல்லையின்
முள் வேலியைப் பிடுங்கி
செடிகளை நடுவோம்
இருபுறமும்
அன்பெனும் நீரைப் பாய்ச்சுவோம்
சமத்துவ மலர் வளர்ப்போம்
முஷ்டியை உயர்த்துவோம்!
********************************
இந்தியாவில்
பிந்தி வந்தேறிய நீ,.
மந்தி ராஜ்யமென பல்டி அடிக்கிறாய்,
குடியானவர்களை ,
குடிபெயர திருத்தம் செய்கிறாய்.;
சட்டத்தை…
உன் இஷ்டம் போல!
மகளிர் இடஒதுக்கீட்டை
ஒப்புக்குக் கூடப் பேச மறுக்கிறாய்!
நண்பகலில் நண்பனோடு நடக்கையில்
நடுவீதியில் நாரடிக்கிறாய்.!
காதலனை மணமுடித்தால்.,
முச்சந்தியில் கருமாதி நடத்தி
கெளரவம் என்கிறாய்!
கிராமத்தின் முக்கு ரோட்டில் மூனு கடை
குடிப்பதற்கு.,!
படிப்பதற்கு பள்ளிக்கூடம்…
கடக்கணும், காததூரம் .!
கல்வியில் காவியை
மழலையர் பள்ளியிலே தூவுகிறாய்!
கட்டணங்களை,பொட்டணமாய் அள்ளுகிறாய்.
ஒரு சாரார் மொழியை,
தேசத்தின் மொழியாக்கத் துடிக்கிறாய்!
தட்டிக்கேட்கும் மாணவர்களின்,
முட்டியை உடைக்கிறாய்.
எதிர்த்து எழும்பும் குரல்களை,
திரித்து வழக்குப் பதிவு செய்கிறாய்!
பூதக்கண்ணாடியில் தேடுகிறாய்,
படைப்பாளர்களை,
காமாலை கண்ணில் பார்க்கிறாய்.!
வழக்காறு நூல்களை.!
குரூரமாகத் தாக்குகிறாய்.,
மண்ணின் மைந்தர்களை.!
கருப்பையைக்
கிழித்து எறிகிறாய்
மதத்தின் அடையாளத்தை, ,
கல்லறையிலும்
காவிச் சாயம் பூசுகிறாய்.
மாட்டுக்கறி உண்பவனை
தீட்டுக்காரனெ
சாட்டையெடுக்கிறாய்,
நாட்டிலிருந்து விரட்டியடிக்கத் தீட்டுகிறாய்
திட்டத்தை!.
உலக சபையில்;
தமிழில் உரையாடி;
வள்ளுவன் உறவுக்காரென,
பூணூல் மாட்டுகிறாய்!.
உன் சந்நியாசி நாடகத்தை ;
வெள்ளாவி வைத்த இளைஞர்களை…
குல்லா அணிந்து தாக்குகிறாய்,…
எழுத, படிக்கச் சொன்ன
நேரு மாமா பல்கலைக்கழகத்தில்
கலகம் செய்கிறாய்,..
கலவரத்தைத் தூண்டி,
நாட்டை கோமாவாக்க துடிக்கிறாய்.
உன் அதிகார சம்மட்டி
அடிக்க, அடிக்க.,…
எஃகாக உருமாற்றம் அடைவோம்,
ஒரு போதும் துருப்பிடித்து உதிர்ந்திடமாட்டோம்.!
குறி சொல்லும் ஜக்கம்மா
*******************************
வம்ச விருத்திக்கு
பத்துக்கு பாக்கியம்
நெறைஞ்சிருக்குனு
ரேகை சொல்லுது
மகமாயி உனக்கு
மொட்டு , பூ பிஞ்சுனு
கழிஞ்சது போக
ஐஞ்சுக்கு அம்சமுனு
ஜக்கம்மா சொல்லுறா
தலைச்சம் மகவு
கனியாகுமுன்னே
கயித்துல தொங்கிட்டா
காத்து கருப்பு அடிச்சதுல
நாலுல ஒன்னு
பரதேசம் போன தகப்பனை தேடியவன் திரும்பவே இல்ல
வீட்டுக்கு
சாதிஜனம்
அங்காளி பங்காளி
ஊருச்சனம் ஆயிரமிருந்தாலும்
கருமாயப்பட்ட மக உன் கண்ணீர் துடைக்க நாதியில்லை.
சொத்துசொகத்துல
வளர்ந்த மக
இன்னைக்கு
அண்ட இடமின்றி
அரவணைக்க யாருமத்து
மூனு ஜீவன்கள் ஆளாக்க
அரும்பாடுபட்ட மகராசி
மூக்கை சிந்தி
மூலையில் உட்காராமா
வம்பாடுபட்ட மக
நீ ஆணா பிறந்திருந்தா
அரசனாகிருப்பே
வளர்ந்த மக்கள் மூன்றில் ஒன்னு மனசுக்கு பிடிச்ச வாழ்வை தேடி ஓடிருச்சு
இரண்டுல ஒன்னு
அப்பன் நெனைப்புல
சீக்காலியா கிடக்கு
சொச்சம் இருக்கும் ஒன்னாவது கரைசேருமா
கரை சேர்க்குமானு
நெரிஞ்சு முள்ளாய் குத்தும் கேள்வி ஒன்னு
நெஞ்சுக்கு குழியில் வாட்டுது ஒன்னை
இதுவரை பிடிச்ச பீடையும் ஏவலும் தூந்துபோக
துணையிருப்பா ஜக்கம்மா
இந்த மனையில்
வயித்துபுள்ளையோட மனசு நெறைஞ்சு வாக்கு கொடுக்கிறேன்
அவளுக்கு காணிக்கையாக
உன் கையில் உண்டானதை கொடு
அப்படியே பழைய கஞ்சியும் சேலை தந்தா சந்தோஷப்படுவா ஜக்கம்மா.
நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது
குறி சொல்லும்
ஜக்கம்மாக்களுக்கு
என்று பிறக்கும் நல்ல காலம்?
க.பாண்டிச்செல்வி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

