நீருக்கு முளைத்த பாதங்கள்
*********************************
ஒரு சூழல் ஒருவனை முட்டாளாக மாற்றும்
அறிவாளியாக நடிக்கச் செய்யும்..
மரம் வெட்டத் துணிபவனுக்கு
அமர்ந்து வெட்ட இடம் தேடுவது முக்கியமாகிறது
கணுவோடும் தூரோடும் விளையாடும் அளவிற்கு
வயது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது…!
ஒரு கல் எறிந்த ஆற்றில்
நீர் செல்லும் வழி எல்லாம் கல்லின் நகர்வு இருக்கத்தான் செய்கிறது
நீர் மேல் பரவளையங்களின் தடயம் முடியும் வரை…!
நிலாவை சுமந்தபடி நகரும் நீருக்கு
அவ்வப்போது இடை கிள்ளி சலசலப்பைத் தருகிறது காற்று…!
காற்றுக்காகப் பல கயிறு திரிக்கப்பட்டுப்
புல்லாங்குழல் துளைக்குள் நுழைத்து
சிறை வைக்கின்றன இராகங்கள்…!
யாருக்குத் தெரியும்
அந்த நதியும்
சிறு கல்லும்
சில் காற்றும்
மரம் உடைந்து கீழ் விழுந்த முட்டாளும்
வழி தவறி புவி விழுந்த வான் வழிப்போக்கர்கள் என்று…..!
கொஞ்ச நேரம் இரு
***********************
கொஞ்ச நேரம் இரு
மெல்ல வருட மழை வரும்
கொஞ்ச நேரம் இரு
இன்றும் நாளையும் நல்லது நடக்கும்
கொஞ்ச நேரம் இரு
உண்மையில் வந்துவிடுகிறேன்
கொஞ்ச நேரம் இரு
தூரிகையேந்தி தும்பி வரும்…..
கொஞ்ச நேரம் இரு
அறுவடைக்கு மழை நின்றுவிடும்
கொஞ்ச நேரம் இரு
வறுமையில் பசி தானாக மறந்துவிடும்
கொஞ்ச நேரம் இரு
பசியை மறைக்க நட்சத்திரம் தோன்றும்
கொஞ்ச நேரம் இரு
அம்மா அப்பா வானில் வருவார்
கொஞ்ச நேரம் இரு
கூரை கிழித்து சூரியன் வருவான்
கொஞ்ச நேரம் இரு
குளிர்ச்சி பொங்க நிலா வருவாள்
கொஞ்ச நேரம் இரு
கிரகரணம் மறைந்து போகட்டும்
கொஞ்ச நேரம் இரு
புவிஈர்ப்பு பரவலாகட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஆதாமும் ஏவாளும் உறங்கச் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மலைப்பாம்பு பயமுறுத்தாமல் செல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஆப்பிள் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கட்டும்
கொஞ்ச நேரம் இரு
ஏதேன் திட்டம் உறங்கிப் போகட்டும்……!
கொஞ்ச நேரம் இரு
நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பக்தனுக்கும் புரியட்டும்
கொஞ்ச நேரம் இரு
பசிக்காக அழும் குழந்தைக்கும் இயற்கை
சமாதானம் சொல்லட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையின் அருகே நாய்க்குட்டி துள்ளட்டும்
கொஞ்ச நேரம் இரு
மழலையிலே மனிதம் பிறக்கட்டும்
கொஞ்ச நேரம் இரு
பார்வையில் பட்ட
அனைத்தும்
கவிதையாய் உருவெடுக்கட்டும்……
கவிஞர் சே கார்கவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.