1.
காதலோ
கோபமோ
எது வந்தாலும்
யார் மீதும் மறந்தும்
கை வைத்ததில்லை,
கவிதை வைப்பதோடு சரி!
2.
உன்னை மறக்காதிருக்க
உன்னைப்பற்றியே
எழுதுகிறேன்.
உன்னை மறக்கவும்
உன்னைப்பற்றியே
எழுதுகிறேன்.
யாரோ என் கரங்களிலிருந்து
உன்னைப் பிரித்துவிட்டு
இந்த எழுத்தைக்
கொடுத்துவிட்டனர்.
3.
கடலளவு பொறுமை
வேண்டுமென
போதித்தவன்
அலைகளே இல்லாக்
கடலை எங்கு
கண்டிருப்பான்?
கடவுள் சிலையைப்
படைத்த சிற்பி
கோவில் தர்மகர்த்தாவிடம்
கையேந்தி நிற்கின்றான்..
கல் கடவுளை விடவும்
வலிமையானது
காகிதக்கடவுள்..
4.
இன்னொரு ஜென்மம்
எடுக்க வெறுப்பு ஒன்றும்
இல்லை.
அடுத்த ஜென்மத்திலும்
உனை சந்திப்பதில்
கவலை ஏதும் இல்லை.
இன்னொரு முறையும்
உனைப் பிரிவது குறித்து
மட்டுமே பயம்.
5.
ஒரு மலராக
இருந்திருக்கலாம்.
ஒரு பறவையாக
இருந்திருக்கலாம்.
அல்லது
இரண்டிற்கும் இடையே
ஒரு பட்டாம்பூச்சியாக
இருப்பதால் தான்
கவிதைக்குப் பின்னே
ஓட வேண்டியிருக்கிறது.
6.
ஒவ்வொரு முறையும்
காதலைச் சொல்ல
வேண்டியதில்லை.
சொல்வதையெல்லாம்
காதலோடு சொல்லவேண்டும்.
ஒவ்வொரு முறையும்
காதலை கேட்க வேண்டியதில்லை.
சொல்வதையெல்லாம்
காதலோடு கேட்க வேண்டும்.
அது காதலித்தல் அல்ல
காதலோடு இருத்தல்.
காதல் எளிதானது!
எழுதியவர்
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


கவிதை மிகவும் நன்றாக எழுதி இருக்கிங்க. வாழ்த்துகள்.
கூடிய விரைவில் இந்த கவிதை திரைப்பட பாடலாக வரும்.
மகிழ்ச்சி.
எண்ணங்கள் மனம் சார்ந்தவை.
உன் நண்பன் யாரெனச் சொல், நீ யாரெனச் சொல்கிறேன் என்பதேபோல் இவரின் எண்ணங்களின் வெளிப்பாடான இக்கவிதைகளைப் படிக்க நேரும்போது இவர் மனம் பூக்களால் ஆக்கப்பட்டிருக்குமோ எனத் தோன்றுகிறது.