Poems of Balakritinan Vannamuthu

பாலக்கிருட்டிணன் வண்ணமுத்துவின் கவிதைகள்

1

தலையாட்டி பொம்மைகள்

தலையாட்டி பொம்மைகளின்
வியாபாரம் படுத்ததாம்
வருந்தினர் வியாபாரிகள்
மனிதர்களே கிடைப்பதால்
குறைந்த விலையில்.

2
கடிகாரம்

ஒவ்வொரு கடிகாரமும்
ஒவ்வொரு நேரம் காட்டுகிறது
கடிகார கடையில்!!
மனிதர்களின் குணம் போல.

 

3

இரண்டாம் பரிசு

பத்து வீட்டில்
பத்து தேய்த்து
பசி தீர்த்தவளே
தூக்கத்தை விற்று
துக்கத்தை துடைத்தவளே

தியாகத்தில் .
தெய்வமும் உனக்குப் பின்னே!

4

உயில்

செயற்கை கண்ணீருடன்
சுற்றி நிற்கும் சொந்தம்
கடைசி நேரத்திற்காக
காத்திருக்கும் காட்சிகள்
காலத்தால் மாறவில்லை.
உடையவனின் உயிர்
உள்ளவரை காகிதம்.
உயிர் பிரிந்த மறுகணமே
உருமாறும் பொக்கிசமாய்.
உயிரால் உயிலா
உயிலால் உயிரா
உறவுகளை நிர்ணயிக்கும்
உயிலே உறவு.

 

5

பிச்சைக்காரன்

கோவில் வாசலில்
குரல் கேட்டேன்
ஐயா தர்மம் போடுங்க.
அலட்சியத்துடன் நுழைந்தேன்
ஆண்டவன் சன்னதிக்குள்
வரமெனும் பிச்சை கேட்க.
உணர்ந்தேன் உண்மையினை
அனைவருமே பிச்சைக்காரரென
ஆண்டவன் முன்னே.
திரும்பினேன் திருந்தியவனாய்
பிச்சையிடும் எண்ணத்தில்.
காணவில்லை ஒருவரையும்
என்னுடைய அகங்காரமும்தான்.

 

6

தீண்டாமை ஒழிப்பு

கல்லறையில் மலர்ந்ததால்
ஒதுக்குகிறார்கள் எங்களை
அங்கலாய்த்தன பூச்செடிகள்
தீண்டாமையை ஒழிக்கசொல்லி.

 

7

சிரித்தான் இறைவன்

கோவிலில் கூட்டம் நெருக்கியது
மகிழ்ச்சியில் சிரித்தான் இறைவன்
பக்தி மக்களிடம் பெருகியதை எண்ணி ஆரம்பித்தனர் மக்கள் வேண்டுதல் படலத்தை
மழை வேண்டி கேட்கும் ஒருவர்
மழை நிறுத்த கேட்டு ஒருவர்
படிக்காமல் பாஸ் கேட்கும் மாணவன்
உழைக்காமல் பலன் கேட்கும் ஒருவர்
பணத்தால் பரிகாரம் கேட்கும் பாவிகள்
அரண்டு போனான் இறைவன்
சுயநல மனிதனின் பொய்பக்தி கண்டு
சிதறிய கூட்டம் கண்டு
அன்னதான அறிவிப்பு கேட்டு.

 

8

நெஞ்சு பொறுக்குதிலையே

சமுக அவலங்களை சரிசெய்த காலம் போய்
சமுகமே அவலமாகிய காலத்தை காணுகையில் நெஞ்சு பொறுக்குதிலையே.
வாக்கு வியாபாரிகளாய் வாக்காளர்கள் மாறியதும்
கையூட்டு பெறுவதையே உரிமையாக்கிய அதிகாரிகளும்
டாஸ்மாக்கின் பாஸ்மார்க்கிற்கு தாலி இழக்கும் பெண்ணினமும்
வரதட்சினை அடுப்பிற்கு வெடித்திடும் மருமகளும்
நாகரிக பிசாசுகள் முகநூல் புலனங்களால்
உறவுகளில் பிரிவும் நாள்தோறும் உயிரிழப்பும்
கல்லுடைத்து அடிமையாகி கல்வியிழக்கும் குழந்தைகளும்
ஆட்சியரையும் ஆட்டுவிக்கும் அரசியல் கூத்துக்களும்
காதலின் மோகத் தீயால் கழுத்தறுப்பு கொலைகளும்
சாதி அரசியலை சார்ந்து செல்லும் கட்சிகளும்
பிறசாதி காதலுக்கென காத்திருக்கும் தண்டவாளங்களும்
நினைக்க நினைக்க…
நெஞ்சு பொறுக்குதில்லையே.

9

மரணம் என்னும் அழகு

கண்கள் மூடியவுடன் கால் விரல்களை கட்டியதும் அலங்காரம் செய்கிறார்கள்
புது வேட்டி சட்டையுடன்
அபிசேகம் செய்கிறார்கள்
பழைய முகம் திரும்பியதென
பலரும் கூறுகிறார்கள்
அழுகையுடன் கட்டளைகள்
அடிக்கடி பிறப்பிக்கிறார்கள்
கூட்டம் அதிகம் வந்ததால்
நல்ல மனிதனெனப் புகழ்கிறார்கள்
சொர்க்க ரதம் தயாராகியும்
நல்ல நேரம் துவங்கலையாம்
சங்கும் சேகண்டியுடன் தேவாரமும் ஒலிக்க
நல்ல நேரம் ஆரம்பித்ததால்
வெடித்து சிதறும் அழுகையுடன்
பூக்கள் பிய்த்துச் சிதறியபடி
நகர ஆரம்பிக்கிறது சொர்க்க ரதம்.
திடுக்கிட்டு முழித்தவன்
சொந்தங்களைத் தேடுகிறான்
என்றோ அனுபவிக்கப் போகும்
மரணத்தின் அழகை ரசித்தவனாய்
மனித வாழ்வின் உரைகல்லாய்.
கனவு கலைந்தது
ஒரு கவிதை கிடைத்தது..

 

எழுதியவர் 

பாலக்கிருட்டிணன் வண்ணமுத்து

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *