1. ” கருவறை”
ஒன்றில்
தீப ஒளியின் பரவல்
ஒன்றில்
அடர் இருட்டின் ஆதிக்கம்
ஒன்றில்
ஊசலாடும் நம்பிக்கை
ஒன்றில்
தீர்க்கமான நம்பிக்கை
ஒன்றில்
ஒன்றன் பின் வரிசை
ஒன்றில்
புதுமையான தனித்துவம்
ஒன்றில்
தகுதியைப் பொறுத்த அங்கீகாரம்
ஒன்றில்
புதையல் போன்ற பாதுகாப்பு
ஒன்றில்
காலம் முதன்மையானதல்ல
ஒன்றில்
வரையறுக்கப்பட்டது காலம்
ஒன்றில்
சுமையோடு வருகிறான்
ஒன்றில்
சுமையே அவன்தான்
ஒன்றில்
கண் திறந்தால்
மூடப்படும் கதவு
ஒன்றில்
கண் திறந்தால்
அரவணைக்கும் கைகள்
ஒன்றில்
இறைவன் பக்தன் எனும்
இடைவெளி
ஒன்றில்
தாய் பிள்ளை எனும்
ரத்த பந்தம்
ஒன்றில்
வெளியேறினால்
மனம் லேசாகிறது
ஒன்றில்
வெளியேறினால்
உயிரே வருகிறது
ஆண்டவனின்
கருவறையை விட
அற்புதமானது
அம்மாவின் கருவறை…
2. ” சின்ன வெளிச்சம் “
எல்லா வாசல்களும்
அடைபட்ட நிலையில்
மென் புன்னகையோடு
திறந்திருக்கும்
அந்த ஒற்றை வாசல் தான்
கைவிடப்பட்டோரின்
கடைசிப் புகலிடம்
சில முழம் கயிறு
சில துளி விஷம்
கூரான அரிவாள்
ஆழமான கிணறு
நெருக்கடியான சாலை
இரயில் தண்டவாளம்
பாய்ந்தோடும் ஆறு
உயரமான மலை
ஏதோ ஒன்றின்
துணையோடு தான்
அந்த வாசலில்
அடியெடுத்து வைக்க முடியும்
ஏதோ ஒன்றின் கரம் பற்றி
அந்த ஆனந்த வாசல் நோக்கி
நகர்ந்து
மனம் விரும்பிய உச்சநிலையை
தொட்டுவிடும் முன்
சந்திக்கும்
பரபரப்புகளுக்கு இடையில்
பிற திசைகளில்
ஏதேனும் ஒன்றை
திரும்பிப் பார்த்திருந்தால்
அக இருளை கலைத்துப் போட்டிருக்கும்
தொலைவில் தென்படும்
ஏதேனும் ஒரு சின்ன வெளிச்சம்.
எழுதியவர்
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.