மதியுள்ளவரே மனிதர் (கவிதை)
புதைகுழி பொய்யில் நாடு
புதைவதோ வெட்கக் கேடு
புனிதரோ நாட்டு மக்கள்
புலம்புதல் தீது தீது!

சிறுதுளி விஷமென்றாலும்
சேர்ப்பதோ உயிரின் வாதை
புரிந்திடில் தேசம் மிஞ்சும்
இல்லையேல் ஏலம் போகும்!

படித்தோர்க்கு வேலை யில்லை
பசித்தோர்க்கு உணவும் இல்லை
உழைப்போர்க்கு இடையே உண்டாம்
ஒன்றுக்கும் உதவா மதமே!

சாதியால் சாகின்றாரே
சாத்தானாம் வேதத் தாலே
நீதியே எங்கே போனாய்?
நீசர்கள் ஆள் கின்றாரே!

வியர்வையை சிந்துவோர் தான்
விலைதன்னைக் கொடுத்தல் வேண்டும்
என்னடா மனிதா உந்தன்
இயலாமை வெட்கக் கேடே!

புவிதன்னில் புனிதர் நாடாய்
புத்தன்தான் பிறந்த நாடாய்
ஒருதாயின் பிள்ளை தம்மை
உடைத்தாரே சாதி யாலே!

மதிகெட்டோர் மதத் தினாலே
மனிதரை வதைப்ப தாலே
மனிதமோ அற்றுப் போமோ
மாக்களாம் ஆள்வோ ராலே!

ஒன்றடா எங்கள் சாதி
ஒன்றடா எங்கள் இனமே
பிரித்திட வேண்டாம் மூடா
பேடியே போடா போடா!

தொன்மையாம் எங்கள் தேசம்
தொல்லையே ஏனோ வந்தாய்?
எல்லையே இல்லா துயரை
எங்கள்மேல் ஏவி னாயே!

என்செய்தோம் உழைப்பைத் தந்தோம்
வன்மங்கள் ஊட்டி ஊட்டி
வகைவகை பிரித்தாய் சூழ்ச்சி
வசமாகி சிக்கிப் போனோம்!
வாழ்வற்று மட்கிப் போனோம்!

தீராதி தீர ரென்று
திரிதன்னைக் கொளுத்திப் போட்டார்
திரவியங்கள் ஆள்வோ ரென்று
திகட்டாமல் பொய்யைச் சொன்னார்;

ஏவல்கள் செய்வோ ரென்று
எண்ணிக்கை பெரிதும் வைத்தார்;
எவனடா பிரித்தீ  ரெம்மை
யாரேனும் கேட்டா ரில்லை!

உழைக்காமல் உண்போர்க் கெல்லாம்
ஒரே வொரு வேண்டுகோள்தான்;
ஒரு நாளை ஒதுக்கி வாடா
உழைப்போமா வெயிலில் சுகமாய்?

மழைநாளில் ஒரு நாள் வாடா
சேற்றிலே உழைப்போம் சேர்ந்தே!
குடிசைக்குள் படுப்போம் ஒன்றாய்
குனிந்து பார் கூரைதன்னில்!

விதியென்பாய் வெட்கக் கேடாய்
சதிசெய்த நரியே போடா!
மனிதருள் பிரிவே இல்லை
மதியுள்ளோர் சொல்வார் நன்றாய்!

 

எழுதியவர் 

கவிஞர் பாங்கைத் தமிழன்…

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *