இந்நூல் கவியருவி அவராகளின் பவள விழாவில் வெளியிடப்பட்டது.கவிதை பூக்களால் நிறைந்து மணம் கமழ்கிறது பூக்களை புயலாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். தன் கருத்துகளின் காம்புகளில் மலர்ந்து மணம் வீசுகிறது கவிதை பூக்கள். காதல்,சமூககருத்துகள், அரசியல் ,தீண்டாமை ,ஆன்மீகம் ,பெண்ணடிமை
என அத்தனை கருத்துகளையும் பூக்களாக பாவித்து புத்தாக்கம் கொள்ள வைக்கும் வரிகள்.
கவிதைகளுக்கு தனிதனித் தலைப்புகள் கிடையாது. நாமே உருவாக்கி கொள்ளலாம் அல்லது ஒரே தலைப்பின் கீழ் இணைத்தும் ரசிக்கலாம்
பூக்களில் உறிஞ்சும் தேனை உச்சியில் கொண்டு போய் ஒளித்து வைக்கின்றன தேனீக்கள் அவைகளின் ஆதங்கம் மனிதர்களின் கீழ்மை செயல்களை..
” நாங்கள்
பூக்களைக் கொள்ளையடிக்கிறோம்
அவர்கள்
ஈக்களையே கொள்ளையடிக்கிறார்கள்
தீய பந்தங்களை
தீப்பந்தங்களாய் கொண்டு
திருடிய பொருளை மறைப்பதில்
எல்லை தாண்டுகிறார்கள்”(பக்14)
பூக்கள் அர்ச்சனை பூவாகி ஆண்டவனுக்கே ஆக்ஸிஜன் தருகிறதாம்.
இது காதலின் கையறு நிலையல்லவா.
“பள்ளத்தை
ஓரிடத்தில்
தோன்டிவிட்டுப்
புதையலை
மற்றோர் இடத்தில் அல்லவா
எடுக்கிறாய்”(பக்30)
லைலா மஜ்னூனின் காதல் தோல்வியில் மஜ்னூனை நோக்கி வீசப்பட்ட கற்களால் ரத்தகாயங்கள்
அது அவனுக்கு ரோஜாவாய் மலர்ந்திருக்கிறதாம்.
“அதிசயம்
கல்மழையில்
ஒரு
ரோஜாத்தோட்டம்
பூத்திருப்பதை
என்
மேனியில் பார்க்கிறீர்கள்
அல்லவா?”(பக்34)
இந்த வரிகள் மிகவும் ஈர்த்துவிட்டது
ஆண்டவனை ஆலயத்தில் தேடுவதில் பயனில்லை அவன்தண்ணீர்பந்தல் குவளைகளிலும் பசித்தீர்க்கும் அன்னதானங்களிலும் இருக்கிறான்.
“அது வெறும் சாதம் தான்
பசித்தவன்
தீண்டும்போதுதான்
அது
பிரசாதம் ஆகிறது”(பக்52)
வறுமைக்கு வாழ்க்கைபட்டவனின் வீட்டில்.
“அவன் வீட்டடுப்பு
சூடாயிருந்தால்
அவன்
வயிறு
குளிர்ந்திருக்கும்”(பக்67)
“சோறு பூக்கா
அடுப்பு
ஆனால்
நீறு பூத்த
நெருப்பு வயிற்றில்”(பக்69)
காதலைச்சொல்ல பூவைக்கு ஒரு பூவைத் தருகிறான் அது எப்படி இருக்கிறது தெரியுமா?
” ஒரு பூஞ்சோலையே
பறிக்க பார்க்கிறான்
மூக்குத்தி கொடுத்துவிட்டு
மூச்சையே திருடும்
இடைத்தேர்தல் வேட்பாளர் போல”(பக்89)
பெண்களை காதல் என்ற பெயரில் ஏய்க்கும் வீணர்கள் தரும் அன்பளிப்புகள் எல்லாம் அவளுக்கு கொடுத்து ஏமாற்றுபவர்கள் மத்தியில் ரத்ததானம் பெற்ற காசில் பூ வாங்கித்தந்து கடவுளுக்கு சமமாக பெண்ணை பாவிப்பவனும் இருக்கிறான்.
“கோவிலுக்கு போகவில்லையா
பூக்காரியின் கேள்விக்கு
நான் என் சந்நதிக்கு போகிறேன்”(பக்)92
காதலின் அதீதம்
“என் எழுது கோலுக்கும்
கற்புண்டு
உன் பெயர் தவிர
வேறு எதையும் எழுதாது”(பக்95)
ஒரு காலத்தில் பல போட்டிகள் வைத்து பெண்களை மனம் புரிந்தார்கள்.இன்றோ பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் அவர்களை சிறுமை படுத்துகிறார்கள்.
“அவர்களை கோமாதாவாய்
குலமாதாவாய்
புகுந்த வீட்டிற்கு
பூவை வரும்முன்பே
நுகத்தடிகள்
தயாராக்கப்படுகின்றன”(பக்123)
மனிதர்களின் மனங்களில் வண்ணங்கள் அல்ல வன்மங்கள் தான்
“மனிதன்
நிழலில்
யாரும் ஒதுங்க முடியாது
ஏன்
அவன் நிழலில்
அவனே ஒதுங்கவும் முடியாது”(பக்163)
எத்தனை திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்துபவர்கள் நானும் என் மனைவியும் போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள் சிந்திக்க கூடிய வரிகள் தான். ஆயினும் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் முடிச்சுகள் விடுவிக்க முடியாமல் திணறுபவர்கள் தானே அதிகம்.
நெருஞ்சி முல்லின் மஞ்சள் நிறத்தில் தாலி கயிறு இருப்பதால் அந்த மூன்று முடிச்சு பெண்ணுக்கு நெருஞ்சி முள் ஆகிவிடுகிறது
“புறிஞ்சி வாழ்ந்தால்
நெருஞ்சி முள்ளும்
குறிஞ்சி பூதான்”(பக்168)
திருநங்கைகளின் ஆதங்கம்.
“உயிர் வரிசையில்
எம்மை ஆயுத எழுத்தாய்
அமைத்தது ஏன் மூன்றாம்
பாலினம் என்பதால் மூன்று
புள்ளிகள் வைத்தீர்களா?”(பக்194)
“காமுக வண்டுகளின்
பசிக்கு இறையாகிறோம்
பட்டினியை போக்க
முப்பாலைக் கொண்டாடுபவர்களே
மூன்றாம் பாலை
எப்போது
ஏசாமல் இருப்பீர்கள்?”(பக்195}
எத்தனை விதமான பூக்கள் ..
துணைநடிகைகளின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் வரிகள்.
“கோடம்பாக்க
வேடந்தாங்கலுக்கு
வெளியே இருந்து வரும்
விருந்து பறவைகளுக்கு தெரியாது
அது
‘வேடன் தாங்கல்’
என்று?”(பக் 223)
“ரசவாத சித்தருடன்
சிணுங்க வேண்டும்
கிளிசரின்
உப்பு நீரில்
உணங்க வேண்டும்”(பக்224)
இவர்கள் தேயும் திரைநிலாப் பூக்கள் துணைநடிகைகள்.
விவசாயம் வீழ்ந்து கொண்டே வருகிறது நிலங்களை கார்ப்பரேட் காரர்களின் வசமிழந்து நிற்கிறார்கள் .
மரங்களில் தண்டட்டியாய் தொங்கிய தூக்கு சட்டிகள் இல்லை. குளம் இல்லை.அன்னைமரமான புன்னைமரமில்லை.
“வயல்களில் கார்ப்பரேட்
ஜேசிப்பீக்கள் குதறி திரிகிறது.
விவசாயிகள்
பிடுங்கி எரியப்பட்டார்கள்
கொக்குகள் போய்
கிரேன்கள்
முளைக்கத்துவங்கி விட்டன”(பக்228)
“உப்பையே பூவாக்கி என்ன அழகான வரிகள்.
உப்பளத்தொழிளார்களின் கண்ணீர் சிந்தும் வாழ்க்கையை தன் வரிகளால் நீவியிருக்கிறார்.
“விதையின்றி
வேறின்றிக்
கிளையின்றி
இலையின்றி பூக்கும் வெண்பூ
உப்பு”(பக்250)
“உப்பளத்தொழிலார்
விரல் கீறல்களில்
வெளிப்பட்டது
குங்குமம் தான்!
விதவை உப்பத்தைச்
சுமங்கலியாக்கி விட்டு
கூலிக்கும் வழியின்றி
தாலியறுத்துக் கொள்வது
அவர்கள் வாழ்க்கை தான்”(பக்254)
சிலப்பதிகார மாதவியை ..
” கடைசிவரை
விலைப்பூ
ஆகாத
கலைப்பூ!”(பக்271)
நான்கே சொற்களில் மாதவியை மணக்க செய்துவிட்டது.
39வயதில் இறந்த பாரதியும் திப்புவும்
நாற்பதை நெருங்கினால் தலையில் வெள்ளை ஆதிக்கம் வந்து விடுமென முடிந்து போனார்களாம்.
ஷாஜகானின் காதல் சின்னமாகியதாஜ்மகால்..
“மூழ்கி போன
மொகல் விளக்கின்
தலைமாட்டில் எரியும்
அகல் விளக்கின்
வெள்ளை சிம்னி
தாஜ்மஹல்”( பக்319)
“தாஜ்மஹால்
ஒர்
உலக அதிசயம் தான்!
மனைவி
மரணத்திற்காகக்
கணவன் கட்டிய
கைமை ஆடை அது!”(பக்320)
பனையும் தென்னையும் அழுது புலம்புகிறது.
பாளையில் பூக்களுடன் நசுக்கி கள் எடுக்கும் மனிதர்களை வசவு பாடுகிறது.
“தறுதலை மனிதர்கள்
எம்மைத்
தாயாக விடவில்லையே!
பதநீராக இல்லை
இளநீராக இல்லை
கயவர்கள் கூடிஎமைக்
கள்நீர் ஆக்கிவிட்டார்கள்!”(பக்334)
பாலாற்றில் தோல் கழிவுகள் செல்வதால் தென்னை இளநீரும் ரசாயணமாக மாறி விட்டது.
” பாலாற்றில்
பதனிடும் தொழில் ஆலைத்
தோலாறு பாயும்
மிஞ்சிய தென்னையிள நீரில்
குரோமிய நஞ்சு தோயும்”(பக்340)
ரசாயண கழிவால் தென்னம் பிஞ்சுகள் உதிர்கிறது அது தற்கொலையாக காட்சி தருகிறது.
தற்கொலை செய்துக் கொண்ட பிஞ்சுகளுக்கும்
அதை தடுக்க உபயோகப்படுத்தபடும் பூச்சி மருந்துகளால் விவசாயிகள் தாக்கப்படுவதற்கும்
கோடித்துணியைப் போல காட்சி தருகிறது பாலாறு.
“சவக்கோடியாய்க்
கிடக்கிறது
பாலாறு மல்லும்!”(பக்341)
தென்னம்பாளை விரியும் அழகு.
“அமுக்குனியாய்
அரிவையாய் இருந்தவள்
கமுக்க மென்னகை பொங்க
தெரிவையாய் ஒருத்தி
திடீரெனச்
சிரித்தாற் போல
தென்னம்பாளை விரிகிறது”(பக்373)
ஒருகணம் இந்த காட்சியை கற்பனை செய்து பார்க்கத்தோன்றுகிறது .
வெட்டி அழகுக்காக மண வீடுகளில் தொங்க விட்டு விடுகிறீர்கள்.
என் தேங்காய் கனவு கனவாகவே போய்விடுகிறது.
எப்படியென்றால்.
” நீட் அரக்கன்
இமைகளைக் கத்தரிக்க
மருத்துவர் கனவு
கலைந்து
நான்றுக் கொண்ட
அனிதாப் போல தூக்கில்
தொங்கிப் போகிறேன்”(பக்374)
சின்னஞ்சிறு பூக்களுக்குள் எத்தனையோ மனச்சிடுக்குகள் பெரிய பெரிய வேதனைகள் ஆற்றாமைகள் தென்றலும் ஓர் நாள் பூகம்பமாய் மாறலாம்.பூக்கள் மென்மை மட்டுமல்ல மேன்மையானதும் கூட.
சிறப்பான வரிகளால்
சீரிய கருத்து பூக்களை
மலர்ந்திருக்கின்றது இந்நூலில்…
நூலின் தகவல்கள்:-
நூல் : “பூக்களாலும் பூகம்பம் நிகழலாம்”
நூலாசிரியர் : கவியருவி அப்துல் காதர்
வெளியீடு : நேஷனல் பப்ளிஷர்ஸ்
விலை : ரூ.400
பக்கம் : 376
நூலறிமுகம் எழுதியவர்:-
வே.சுகந்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.