அறிவுமதியின் வலி (கவிதைகள்) Poet Arivumathi in Vali Kavithai Book

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “வலி (கவிதைகள்)” – வல்லம் தாஜுபால் 

 

 

 

பிறர் வலியைத் தம் வலியாய் நினைப்பவர் கவிஞர். பிறர் அழுதால் தம் கண்ணை நனைப்பவர் கவிஞர்.

‘பக்கத்தில் இருப்பவர் துன்பம் பார்க்கப் பொறாதவர் புண்ணிய மூர்த்தி’ என்றார் பாரதி. எழுதியதோடு மட்டும் அல்ல. தாமும் அதைப் பின்பற்றியவர் அவர். பக்கத்தில் இருப்பவர் துன்பம் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருக்கக் கூடிய பிஜித் தீவில் கரும்புத் தோட்டங்களில் வாடும் தமிழ்ப் பெண்களுக்காகவும் (1916) இவர் கவிதை எழுதினார்.

நாட்டை நினைப்பாரோ – எந்த
நாளினில் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய் காற்றே

அறிவுமதியும் அத்தகைய கவிஞர்தான். இலங்கையில் இருபத்தைந்து ஆண்டுகளாக இனப் படுகொலை நடக்கிறது. அதன் இறுதிக் கட்டத்தில் (2009ல்) விமானங்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு மழை பொழிகின்றன. இங்கே விமானம் பறக்கும் ஓசை கேட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள் வெளியே வந்து வேடிக்கை பார்ப்பார்கள். இலங்கையில் விமானம் பறந்தால் வெளியே உள்ள குழந்தைகள் மிரண்டு வீட்டுக்குள் ஓடிப் பதுங்குவார்கள். ஏன்… அவை விமானங்கள் அல்ல…. அலுமினியக் கழுகுகள்.

கிளிகள் புறாக்கள்
கொக்குகள் நாரைகள்
பறந்த வானத்தில்
அலுமினியக் கழுகுகள்

குழி மாற்றிக் குழி மாற்றிக் காய்களைப் போட்டு விளையாடுவது பல்லாங்குழி.
சிங்கள ராணுவமும் ஈழத் தமிழர்களைக் குழி மாற்றிப் போட்டு விளையாடுவதாகக் கவிஞர் கூறுவது இன்னொரு வலி.

பதுங்கு குழி
சவக் குழி
அவர்கள் ஆடும்
பல்லாங் குழி

இலங்கையில் தண்ணீரைவிட குருதிப் பெருக்கு அதிகமாம். இப்படி ஒரு கவிதை:

தண்ணீர் எதற்கு உங்களுக்கு?
குருதியிலேயே செய்யலாமே வேளாண்மை

தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படுவதற்கும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதாம்.. ஈழத்தமிழராகவே மாறி இப்படிக் கூறுகிறார்:

குறி தவறாமல் எங்களைச் சுட
சுட்டுப் பழகும் மாதிரிப் பொம்மைகள்
தமிழக மீனவர்கள்

‘தமிழக மீனவர் படகுகள் நிமிர்த்தி வைக்கப்பட்ட சமாதிகள்’ என்றும் ‘மீன் பிடித்தால் மீன்கள்தானே கடலில் குறைய வேண்டும்? தமிழகத்தில் மட்டும்தான் மீனவர்கள் குறைகிறார்கள்’ என்றும் வேறு சிலர் எழுதிய கவிதைகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

இந்தியாவில் இருந்து அமைதிப் படை செல்கிறது. இந்தப் படையும் சிங்கள ராணுவம் மாதிரியே ஈழத் தமிழ்ப் பெண்களைப் பாழ்படுத்துகிறது. சிங்களப் படையோடு அமைதிப் படையும் கைகோர்க்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தை

நடக்கிறது. அதுவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆக அமைதிப் படையாலும் அமைதிப் பேச்சு வார்த்தையாலும் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள். இதை இப்படி எழுதுகிறார்;

அமைதி –
படையாக வருகையில் பிரச்னை
பேச்சாக வருகையில் பிரச்னையிலும் பிரச்னை

அப்போது அங்கிருந்து தப்பிப் பிழைத்து கடல் கடந்து இந்தியக் கரையில் சேர்ந்த ஈழத் தமிழர்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி, உண்மை உணர்ச்சியோடும் ஆழ்ந்த அக்கறையோடும் கவிதைகள் ஆக்கியுள்ளார்.

எல்லாக் கோணங்களிலும் எழுதியுள்ளார். எல்லா உத்திகளையும் பயன்படுத்தி உள்ளார். எல்லா நிகழ்வுகளையும் எழுதியுள்ளார். நாய் பூனைகள் உட்பட, குழந்தைகளிலிருந்து பெண்கள் வரை எல்லோருடைய பிரச்னைகளையும் பதிவு செய்துள்ளார். உரிமைகள் பறிப்பது நாசிசம். உயிர்களைப் பறிப்பது பாசிசம். நாசிசத்தாலும் பாசிசத்தாலும் பாதிக்கப்படுபவர்கள் தப்பிப் பிழைத்து வாழத் துடிக்கிறார்கள்.

போர், அகதிகளை உருவாக்குகிறது. பங்களா தேசத்தில் போர் நடந்த போது அங்குள்ளவர்கள் அகதிகளாக அருகில் உள்ள மேற்கு வங்கத்தில் அடைக்கலம் தேடினார்கள். இலங்கைப் போரின் போது அங்கு பாதிக்கப்படுபவர்கள் அருகில் உள்ள தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தார்கள். சமாதானக் காலத்தில் குடிமக்கள். போர்க் காலத்தில் அகதிகள்.

இலங்கை ராணுவத்திடமிருந்து உயிர்பிழைக்கத் தமிழர்கள், கடலில் குதித்து நீந்துகிறார்கள். பலர் கரைசேர்வதற்குள் சோர்ந்து மூழ்கி ஜல சமாதியாகிறார்கள். அவர்களை ஏற்றி வந்த படகும் எடை தாங்காமல் கவிழ்ந்து பயணிகள் மூழ்குகிறார்கள்.

இதை எழுதுகிறார்:

மன்னாருக்கும் மண்டபத்திற்கும்
இடையே இருப்பது
வளைகுடா இல்லை
தமிழர் சதுக்கம்

கடலில் விழுந்த குழந்தைகளைத் தின்று தீர்த்த மீன்கள், மீனவர் வலையில் சிக்கி சந்தைக்கு வருகின்றன. அதை வீட்டுக்கு வாங்கிச் செல்பவனின் அனுபவம் அதிர வைக்கிறது.

மீனை அரியும் போது
கிடைத்தது
குழந்தையின் கண்

ராணுவத்திற்குத் தெரியாமல் ஈழத் தமிழ் மீனவர்கள் கள்ளப் படகில் தப்புகிறார்கள். அதற்கு நிறைய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதை எப்படி செலுத்துகிறார்கள்.

படகில் ஏறினோம்
படகுகளை விற்று

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக இப்படிப் படகில் தப்ப நினைப்பவர்கள், சில சமயம் ராணுவத்திடம் நடுக்கடலில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அப்போது என்ன செய்வார்களாம்?

நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட
படகிலிருந்து
குதித்து மூழ்கிக் கொண்டிருந்த அக்காவைக்
காப்பாற்றத் துடிக்கவில்லை-
பாசமுள்ள தம்பி

தப்பிப் பிழைக்கப் பலர் கடலில் குதித்து நீந்தி ராணுவத்தினர் கண்களில் சிக்காமல் ராமேஸ்வரத்தில் கரையேறுகிறார்கள். அவர்களின் வேதனையை இவர் இப்படி எழுதுகிறார்:

இராமேசுவரத்தில் எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக் கரையேறுகிறோம்

இங்கு வந்தும் இலங்கைத் தமிழர் துயர் தீரவில்லை. அவர்கள் கரையேறியது மாதிரி தெரியவில்லை. எனவே சொல்கிறார்:

நீங்கள் இறங்கியிருப்பது கரையிலன்று
சிறையில்.

அகதிகள் தமிழகக் காவலர்களால் சந்தேகமாகப் பார்க்கப் பட்டார்கள்.

அங்கே தமிழனா என்று அடித்தார்கள்
வலிக்கவில்லை
இங்கே திருடனா என்று அடிக்கிறார்கள்
வலிக்கிறது

வசைபாடப்படுகிறார்கள். பழித்துரைக்கப்படுறார்கள். திட்டப்படுகிறார்கள். இதை இப்படி வெளிப்படுத்துகிறார்:

மணல் திட்டுகளில்
மூச்சு வாங்கியவர்கள்
மனிதத் திட்டுகளில்
பேச்சு வாங்குகிறார்கள்

ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள். அவையாவும் உயிர்துளைக்கும் தோட்டாக்கள்தாம்.
அதை கூர்மையான வடிவில் சொல்கிறார்:

அங்கே கேட்டுக் கேள்வியில்லாமல்
கொன்றார்கள்
இங்கே கேள்வி கேட்டே கொல்கிறார்கள்

இன்னும் சொல்கிறார்:

தவறியவர்கள் மீன்களுக்கு இரையானோம்
தப்பித்தவர்கள் ஏன்களுக்கு இரையானோம்

இப்படி விசாரணைக்கு ஆளாகும்போது ஓர் அறிவிப்பு தென்படுகிறது

வரிசையில் நின்றபோது
கண்ணில் பட்டது
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

ஈழத் தமிழர்களை இங்குள்ள அதிகாரிகள் தங்கள் தொப்புள் கொடியின் நீட்சிகளாக நினைப்பதேயில்லை.

தமிழில்தான் விசாரிக்கிறார்கள்
தமிழர்களாக இல்லை.

ஈழத் தமிழர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் இல்லை. மதிப்பதும் இல்லை. அந்த வலியின் எதிர்வினை இது:

பிழைக்க வந்தவர்கள் உணர்வார்களா?
பிழைத்து வந்தவரின் வலியை

இங்கே அதிகாரிகள் அகதிகளைப் பார்க்கும் பார்வையே கடுமையாக இருக்கிறதாம்.

அப்படிப் பார்க்காதீர்கள்
இதற்கு அந்தத் துவக்குகள்
எவ்வளவோ மேல்

வாடகைக்கு வீடு பார்க்கப் போனாலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள்.
அதை இப்படிப் பதிவு செய்கிறார்:

இங்கே வீடு கிடைப்பதற்குள்
அங்கே நாடு கிடைத்துவிடும்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் நாம். எறும்பின் பசியைப் போக்க அரிசி மாக் கோலம் போட்டவர் நாம். ஆனால் அகதிகளைப் புறக்கணிக்-கிறோம். இதை அவர் இப்படி எழுதுகிறார்:

எறும்புகளுக்குக் கோலம் போட்டவர்கள்
எங்களைப் பட்டினி போடுகிறார்கள்

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தந்த பரம்பரையின் பண்பு என்ன ஆனது இன்று? கவிஞர் சொல்கிறார்:

மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
ஒழுகுகிறது முகாம்களில் குடிசை

அது மட்டுமா?

கழிப்பிடம் மோசம்
வசிப்பிடம் மோசத்திலும் மோசம்

அதனால் இப்படி எழுதுகிறார்.

முல்லை மருதம் விட்டு
நெய்தல் தாண்டி
நாங்கள் குடியேறிய இடமெல்லாம்
பாலை

அகதிகள் உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் உயிர்ப்போடு இல்லை.
இதை எழுதுகிறார்:

நடுக்கடலில் இறந்திருந்தால் நாறும் பிணங்கள்
இங்கே நடைப்பிணங்கள்

அது மட்டுமல்ல… அவர்கள் நினைக்கிறார்கள்-

அங்கே சேர்ந்திருந்தால் செத்துப் பிழைத்திருக்கலாம்
இங்கே சேர்ந்ததால்
செத்து செத்துப் பிழைக்க வேண்டியிருக்கிறது

கறுப்பு அவர்களால் நேசிக்கப்படுகிறது. அது நம் ஆதி நிறம், நம் கடவுள்களின் நிறம், வெயிலைத் தடுக்கும் நிறம் என்பதால் மட்டுமல்ல… பின்னே…?

அவ்வப்போது எடுத்து அணைத்து
முத்தமிட்டுக் கொள்கிறோம்
கடற்படை வெளிச்சங்களிலிருந்து
எங்களைக் காப்பாற்றிய
அந்தக் கறுப்புச் சேலையை

நாளாக நாளாக புதிய உறவுகள் உருவாகின்றன.

உறவுகளைப் பிரிந்து வந்தோம்
வந்தவர்கள் உறவானோம்.

ஈழத் தமிழர்களின் மொழி உணர்வு வியக்கத்தக்கது. மேலை நாட்டினர் பார்வையில் தமிழர்கள் என்றால் ஈழத் தமிழர்கள்தாம். பல வகையில் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள், மகாகவி பாரதிக்கு விழா எடுக்க வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தவர். ஆறுமுக நாவலர், கனகசபை பிள்ளை, ந.சி. கந்தையா இவர்கள் இலக்கியத்தில் புதிய நோக்கினைக் கொடுத்த பேராசிரியர்கள். கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் இலக்கிய முன்னோடிகள். இத்தகையவர்களின் வாரிசுகள்தான் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகள் ஆகிவிட்டார்கள். நாட்டைப் பிரிந்தாலும் மொழி உணர்வு மங்கவில்லை. அதை இப்படிச் சொல்கிறார்:

தப்பித்து வந்த குழந்தைகளுக்குக்
குடிக்கப் பால் கிடைக்கிறது
படிக்கத்தான் தமிழ் கிடைக்கவில்லை

கர்ப்பிணி ஒருத்தியின் மனநிலையை இப்படி எழுதுகிறார்:

பிறக்கும் பிள்ள
எண்ட ஆதி மண்ணில் பிறந்தானெண்டு
சந்தோசப்படுவதா
அகதியாப் பிறந்தானெண்டு வருத்தப்படுவதா

அகதியானாலும் தாய் மண் மீது பற்று விடவில்லை

பிறந்த குழந்தையின்
நெற்றியில் வைக்கிறாள்
பிடி மண்ணாய் எடுத்து வந்த
தாய்மண்

நேசித்த உயிரினங்களின் பாசம் பற்றி எழுதுகிறார்

கடல் கடந்து பார்க்க வந்திருக்கின்றன
சோறு வைத்த காக்கைகள்

காக்கைகள் மட்டுமா? வளர்ப்புப் பிராணிகள் என்ன செய்கின்றன?

தூங்கும் என்னை நள்ளிரவில்
பிராண்டி பிராண்டி எழுப்புகிறது
தூக்கி வர மறந்து போன என்
வளர்ப்புப் பூனை

உயர்திணை அல்லாத உயிரினம் மீதும் அவர்கள் காட்டும் பாசம் அதிகம்.

அறுக்காமல் விட்டுவிட்டு வந்த வயலில்
பசியார வரும் குருவிகளையாவது
சுடாமல் இருப்பார்களா?

நாடு விட்டு வந்த பின்னும் தாய்நாட்டுத் தாவரங்கள் மீதும் தணியாத நேசம்

இன்னும் கவலையில் இருக்கிறாள் சிறுமி
நீரூற்றப்படாத பூச்செடிகள்

நாடு தேடி வரும் அகதிகள் நிலை வேறு. நாடு தாண்டி வரும் பறவைகள் நிலை வேறு. பறவைகள் விரைவில் பிறந்த மண் திரும்பிவிடும்.

வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது
எங்கள் நாட்டுப் பறவைகள்
வேடந்தாங்கல் வருவதற்கும்
நாங்கள் மண்டபம் வருவதற்கும்

எளியோர் சொல் அம்பலம் ஏறாது. வலுத்தவன் வகுத்ததே வாய்க்கால். இதை அவர் நடையில் எழுதுகிறார்:

ஆயிரமாயிரம் எறும்புகளின் கதறல்
யாருக்கும் கேட்பதில்லை
ஒற்றை யானயின் ஓலம்
ஊரெல்லாம் கேட்கிறது

அகதி ஆனவருக்கும் அகதி ஆக்கியவருக்கும் இது மட்டுமா வித்தியாசம்?

அவர்களுக்கு விருந்தினர் மாளிகை
எங்களுக்கு அகதிகள் முகாம்

அவரவர் பிரச்னை அவரவர்க்கு. இலங்கை வானொலியில் நாம் கேட்பது வேறு. அவர்கள் கேட்பது வேறு.

இலங்கை வானொலியில் நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்
நாங்கள்
மரண அறிவித்தல் கேட்கிறோம்

குண்டு வெடி சத்தம் கேட்டு அஞ்சிய இலங்கைக் குழந்தைகள் நாளாக நாளாக பட்டாசு சத்தத்துக்கே நடுங்குகிறார்கள்.

எனவே இப்படி எழுதுகிறார்:

அயல்நாட்டுப் பறவைகள்
அச்சப்படக் கூடாது என்பதற்காக
தீபாவளிக்கு வெடி வெடிப்பதையே
விட்டு விட்ட ஊர்கள்
இங்கே இருப்பதாய்க் கேளிப்பட்டோம்
எங்கள் குழந்தைகளுக்காகவும்
இரக்கப்பட்டு இதனைக் கடைப்பிடிப்பீர்களா?

பட்டாசு ஒலிக்கு மட்டுமல்ல… ரோடு ரோலருக்கே அஞ்சுகிறார்கள், அது ராணுவ வாகனம்போல் இருப்பதால்…

சாலைபோடும் பெருவண்டியைப்
பார்த்ததும்
பதறிப்போய்ப் பதுங்குகின்றன
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்

இன்னும் இன்னும் ஏராள வலிகளைப் பட்டியல் இட்டுள்ளார். பக்கத்துக்குப் பக்கம் வலி. எல்லாமே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் கட்டுரை மேலும் விரியும்.

இத்தனை சோக நறுக்குகள் போதாது என்று உள்ளம் உருக்கும் ஓர் ஒப்பாரியும் இத்தொகுதியில் படைத்துள்ளார்.

நடந்து அழுதமின்னா நடந்த இடம் ஆறாகும்
நின்னு அழுதமின்னா நின்ன இடம் குளமாகும்
புரண்டு அழுதமின்னா புரண்ட இடம் கடலாகும்

ஒரு வலியா இரு வலியா ஒப்பாரி வச்சு அழ
இது வழியா அதுவழியா எங்கேன்னு போயிவிழ

பூனை வழிமறிச்சு போகாதே என்னு சொல்லும்
நாயி வழிமறிச்சு நானும் வரேன் என்னு சொல்லும்
வளத்த பூச்செடியை வாகாகத் தடவிவிட்டு

படிச்ச படித்துறையை பார்த்துக் கலங்கிபுட்டு
வாறேன்னு சொன்னதுமே வாகை மரமங்கே
வாடி அழுததய்யா
போறேன்னு சொன்னதுமே பூவரச மரமங்கே
புலம்பி அழுததய்யா

தூங்க மகனுக்குத் தூளிகட்ட முடியலய்யா
வெளைஞ்ச மகளுக்கு வேலிகட்ட முடியலய்யா
நாய்குரைச்ச சத்தத்துக்கு நாங்க நடுங்காத நாளுமில்லே
போய்புகுந்த பொந்துக்குள்ளே அய்யோ புடுங்காத தேளுமில்லே

பட்ட கதை சொன்னமின்னா ஒங்க மனம் பத்தி எரியுமய்யா – அவுக
சுட்ட கதை சொன்னமின்னா ஒங்க மனம் துடிச்சு எரியுமய்யா

எங்கமன வேதனையை எழுத்தாக்க நினைச்சமுன்னா
அய்யோ அந்த எழுத்தாணி உருகுமய்யா
பாவிமன வேதனையைப் படமாக்க நினைச்சமுன்னா
அய்யோ அந்த படச்சுருளும் கருகுமய்யா

இதில் உள்ள எழுத்துகள், ஈழத் தமிழர்களின் கண்ணீர்த் துளிகள். தாய் நாட்டை இழந்தவர்களின் தவிப்புகள். தலையணையில் இருந்து பிய்த்து எறியப்பட்ட பஞ்சுகளாய்த் திசைக்கொன்றாய்ப் பிரிந்த உறவுகளின் வேதனைகள். மானுட நேயத்தின் மனசாட்சி. ஈழத் தமிழர்களின் வலியை இத் தொகுதியின் மூலம் அனைத்துலகத் தமிழர்களின் இதயங்களுக்கும் கடத்தியுள்ளார்.

நூலின் முன்னுரையில் காசி ஆனந்தன் சொல்வது போல ‘அறிவுமதியின் வலி அழ வைக்கவில்லை. எழ வைக்கிறது’

நூல் பெயர்: வலி
நூலாசிரியர்: அறிவுமதி
வகை: கவிதை
வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம், 2,
சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600017

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *