“உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம்
ஓர் எழுத்தாளன் அல்லது கலைஞன் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்மா. அதனால் அவன் மக்களின் விருப்பத்தை, அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மக்களின் விருப்பம் மனித நேயத்திற்கோ அல்லது உயிர் நேயத்திற்கோ எதிராக இருந்தால் அவன் அதற்கெதிராகச் சமர்செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும். அது அவனுடைய தலையாய கடமை.
கிரேக்கத் தத்துவஞானியான டயோஜினஸைப் (Dionysus) பற்றிச் சொல்லப்படும் செய்திகளில் எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செய்தி இது: (YouTube ல் பார்த்த செய்தி)
டயோஜினஸ் யாரோடும் எக்காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்து கொள்ளாதவர். ஆனால் அவரது காலத்தில் வாழ்ந்த அரிஸ்டிபஸ் சொகுசான வாழ்க்கைக்காக அரசனோடு சமரசம் செய்துகொண்டவர். ஒருமுறை அரிஸ்டிபஸ் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, டயோஜினஸ் தன்னுடைய வீட்டிற்கு முன்பாக, அவரை விதைகளைச் சூப் வைப்பதற்காகக் கழுவிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு அரிஸ்டிபஸ் டயோஜினஸிடம், “உமக்கு அரசனோடு சமரசம் செய்துகொண்டு வாழத் தெரிந்திருந்தால் இப்படி அவரை விதைகளைக் கழுவிச் சூப் வைக்க வேண்டிய தேவை இருக்காது” என்றார். உடனே டயோஜினஸ், “உமக்கு அவரை விதைகளைக் கழுவிச் சூப் வைக்கத் தெரிந்திருந்தால் இப்படி அரசனுடன் சமரசம் கொண்டு வாழ வேண்டிய தேவை இருந்திருக்காது” என்று தீர்க்கமாகச் சொன்னாராம்.
கொண்ட கொள்கையில் உறுதி, நேர்மை, வாய்மை இவையெல்லாம் ஒரு கலைஞனுக்கு எந்தளவுக்கு முக்கியமானவை என்பதை இந்த நிகழ்வை அசைபோட்டுப் பார்க்கிறபோதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.
தமிழில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்களில் ஒருவர் அறிவுமதி அவர்களும். திரைத் துறையில் அவர் பணியாற்றிய காலத்தில் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளாமல் பணியாற்றினார் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது. அவர் எழுதிய தாய்ப்பால், வலி, நட்புக்காலம் ஆகிய நூல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதிலும் குறிப்பாக நட்புக்காலம் என்ற கவிதைத் தொகுப்பில் வரும் பல கவிதைகளை நான் அடிக்கடி வாசித்த அனுபவம். காரணம், அவற்றையெல்லாம் என் வகுப்பறையில் நான் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கின்றேன்.
இப்படி நான் பெரிதும் மதிக்கும் ஓர் எழுத்தாளரிடமிருந்து புதிதாக ஒரு புத்தகம் வருகின்றது என்ற செய்தியைக் கேள்விப் பட்டதும் மிகவும் மகிழ்ந்தேன். நூலை வாங்கி, வாசித்து முடித்தேன். அதுதான் *“உலக அமைதிக்கான நூல் புறநானூறு”.*
சங்க கால இலக்கியமான “புறநானூறு” நானூறு பாடல்களின் தொகுப்பு. உயரிய அறத்தையும் உயிர் நேயத்தையும் வலியுறுத்தும் இந்த நானூறு பாடல்களிலிருந்து *அமைதியை வலியுறுத்திக்* கூறும் பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்குத் தன்னுடைய பாணியில் விளக்கும் தந்து, போரில்லா உலகைப் படைக்க வேண்டும் என்ற தன்னுடைய ஏக்கத்தையும் ஒட்டுமொத்த உலகின் விருப்பத்தையும் இந்த நூலின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார் நூலாசிரியர்.
‘மாந்த நேயம்’ என்பது வாழ்வின் நுனிச்சொல், ‘உயிர் நேயம்’ என்பதே வாழ்வின் வேர்ச்செல் என்ற வரிகளோடு நம்மைக் கட்டிப்போடும் ஆசிரியர், “எல்லாருக்குமான உலகை எனக்கான உலகம், என் காலடியில் உலகம் என நினைக்கும் ஆதிக்க மூளையரின் அடாவடித்தனமே உலகப் போர்கள்” என்று சொல்லி, உலகில் நடக்கும் போர்களுக்கான காரணத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார்.
நூலாசிரியரின் இந்த வரிகளை வாசித்தபோது எனக்கு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கூறிய, “இந்த உலகம் எல்லாருக்குமான பொதுவான இல்லம்” என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்துபோனது. மனிதர்க்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இல்லமாக இந்த உலகம் இருக்கும்போது, அதனைச் சிலர் மட்டும் தங்கள் ஆளுகைக்குள் உட்படுத்துவதும், அதன் பொருட்டு அடக்குமுறையையும், போர்களையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுவது வேதனையாக இருக்கின்றது.
இந்த நூலில் ஏராளமான வரிகள் மிகவும் இரசிக்கும் படியாக உள்ளன. உதாரணத்திற்கு
“போர் நடத்துவதைவிட
ஏர் நடத்துவதே ஏற்புடையது”
—
“இரு பெரு வேந்தர்களாயிருந்தும்கூட
வாள் மீது கைபோடாமல்
இவ்வளவு
பெருமிதமாய் நீங்கள்
தோள் மீது
கை போட்டிருப்பதைக்
காண்பதை விட எங்களுக்கு
வேறொரு
மகிழ்ச்சி உண்டா?”
—
“மற்றவர்களுக்கு
எனும் வாழ்வியல் மரபே தமிழ்மரபு”
__
இப்படி நிறைய வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உலகில் போர்கள் மறைந்து, எங்கும் அன்பும் அமைதியும் சகோதரத்துவமும் பெருகவேண்டும். அதைத் தான் புறநானூறு பேசுகின்றது என்று வலியுறுத்திக் கூறும் ஆசிரியர், அதுவே உலக அமைதிக்கான நூல் என்கிறார்.
புறநானூற்றில், மனைவி மானும் குட்டி மான்களும் இருக்க, ஆண் மான் கொல்லப்படுவது எவ்வளவு பெரிய வெற்றிடத்தை அந்த மான்களின் வாழ்வில் ஏற்படுத்துகிறது என்பது மாதிரியான ஒரு காட்சி வரும். (அட்டை படக் காட்சி) அந்தக் காட்சியைக் குறிப்பிட்டுப் பேசும் ஆசிரியர் போர்களால் இழப்பு மட்டுமே மிஞ்சும் என்பதை உரக்கக் கூறுகின்றார்.
சற்று நிதாமான யோசித்துப் பார்த்தால் உலகமெங்கிலும் நடக்கும் போர்களால் கலவரங்களால் எத்தனைக் கோடிப் பேர்கள் தங்கள் உயிர்களை, உறவுகளை, உடைமைகளை இழந்து அகதிகளாக நிற்கிறார்கள். அந்த இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது என்பது நமக்குப் புரியும். இத்தகையதோர் இக்கட்டான தருணத்தில் அறிவுமதி எழுதியிருக்கும், உலக அமைதிக்கான நூல் புறநூனூறு மிகப் பொருத்தமானது.
இந்த நூலை வாசித்தபோது சதிஸ்குமார் என்பவர் எழுதியிருக்கும் “Pilgrimage for Peace – The Long Walk from India to Washington” என்ற நூல் நினைவுக்கு வந்தது. இந்த நூலானது சதிஸ்குமார் மற்றும் அவரது நண்பரான இ.பி.மேனன் இருவரும் சேர்ந்து உலக அமைதியை வலியுறுத்தி மேற்கொண்ட இரண்டரை ஆண்டுகாலப் பயணம் பற்றியது.
டெல்லியிலிருந்து தொடங்கிய இந்தப் பயணம் மாஸ்கோ, இலண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களை உள்ளடக்கி வாஷிங்டனில் முடிந்தது. இந்தப் பயணத்தில் இருவரும் தாங்கள் சந்தித்த மனிதர்களிடம் தேயிலைப் பாக்கெட்களைக் கொடுத்து, இதை உங்கள் நாட்டுத் தலைவர்களிடம் கொடுத்து தேனீர் போட்டுக் குடிக்கச் சொல்லுங்கள். அந்த நேரத்திலாவது அவர்கள் அமைதிக்கான வழிகளைப் பற்றிச் சிந்திப்பார்கள் அல்லவா என்றார்கள். இந்த நூலில் உணர்வுப் பூர்வமான நிறைய அனுபவங்கள் உண்டு.
உலகில் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களை ஓர் ஆண்டு மட்டும் நிறுத்தினாலே போதும், இந்த உலகிலிருந்து பஞ்சம் பசி பட்டிணியை முற்றிலுமாகப் போக்கிவிட முடியும் என்றொரு குறிப்பினை வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. உலகில் உள்ள பஞ்சம் பசி பட்டிணி மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வுகளும் வேற்றுமையும் மறைய வேண்டும். அதற்கு எல்லார்மீதான அன்பில் மலரும் அமைதியே வழிகோலாகும். அத்தகைய அமைதி ஏற்பட உலக அமைதிக்கான நூல் புறநானூறு நிச்சயம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | உலக அமைதிக்கான நூல் புறநானூறு |
| ஆசிரியர்: | அறிவுமதி |
| வெளியீடு: | நெல்லி & தமிழ் அலை |
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: |
I.A.தினேஷ்
|
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

