“பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்
மின்மினிகளின் காலம்
பாவண்ணன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்றப்பட்டனர். தேயிலைத்தோட்ட வேலை என்பது கிட்டத்தட்ட மரணக்குழியில் இறங்கிச் செல்வதற்கு இணையான ஒன்றாக இருந்த காலம் அது. ஆயினும் ஒவ்வொரு நாள் உழைப்புக்கும் கூலி கிடைக்கும் என்னும் உத்தரவாதத்தை மட்டுமே நம்பி பலர் அங்குக் குடியேறினர்.
அவர்கள் உழைப்பைச் சுரண்டிய சமூகம் கூலிக்காக உழைக்க வந்தவர்கள் என்ற கோணத்தில் மட்டுமே அவர்களை அணுகியது. எத்தனை தலைமுறைகள் மாறினாலும் அந்தக் கோணம் மாறவில்லை. அதே நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிற, அதே மொழியைப் பேசிப் புழங்குகிற மக்களின் பார்வையிலும் அந்தக் கோணம் மாறவில்லை. காலமெல்லாம் ஓர் இரண்டாம் நிலை குடிமக்களாக வாழ நேர்வது மிகப்பெரிய வதை. அந்த அவலமும் இயலாமையும் பெருமூச்சுகளும் மலையகப் படைப்பாளிகளின் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கின்றன. சமீப காலமாக கவிதைப்புலத்தில் தொடர்ந்து இயங்கிவரும் எஸ்தரின் கவிதைகளில் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது.
இத்தொகுப்பில் தேவி என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை இத்தொகுப்பின் செல்திசையை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. அன்றாடம் காணத்தக்க ஒரு காட்சியின் சித்திரத்தையே நாம் அக்கவிதையில் காண்கிறோம். இரண்டு நூற்றாண்டுகளாக மாறாத ஒன்றாக இந்த அன்றாடக்காட்சி தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கிறது என்கிற கவனத்தோடு இக்கவிதையை அணுகும்போது, அக்காட்சி எடைமிக்கதாக நம் நெஞ்சை அழுத்தத் தொடங்குகிறது.
அதிகாலையில் தோட்டத்தின் மேஸ்திரி எழுப்பும் தொழிலாளர்கள் புறப்பட்டு வருவதற்கான அடையாளமாக சங்கு சத்தம் ஒலிக்கிறது. உடனே தத்தம் குடியிருப்புகளிலிருந்து தலையில் கவிழ்த்த மூங்கில்கூடையுடன் வெளியேறிய பெண்கள் தேயிலை விளைந்திருக்கும் மலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். பாலருந்தியபடி இருக்கும் கைக்குழந்தையோடு கூடையைச் சுமந்துகொண்டு தேவி என்பவள் ஓடிச் சென்று அக்கூட்டத்தில் இணைந்துகொள்கிறாள். ஒரு திருப்பத்தில் குழந்தைகள் காப்பகம் வருகிறது. மார்புக்காம்பைத் தம் உதடுகளால் பற்றிக்கொண்டிருக்கும் குழந்தையை இழுத்து விலக்கி அந்தக் காப்பகத்தில் விட்டுவிட்டுச் செல்கிறாள் அவள். ஒருவித இயலாமையுடன் குழந்தையின் கூக்குரலைக் கேட்டபடி அவள் மலையில் நடந்துகொண்டே இருக்கிறாள். மார்பில் கசியும் பாலும் அவள் வியர்வையும் இணைந்து வழிய தோட்டத்துக்குள் செல்கிறாள். இரண்டு நூற்றாண்டுகளில் மேஸ்திரிகள் மாறிவிட்டார்கள். தேவிகளும் மாறிவிட்டார்கள். ஆயினும் அந்தச் சூழலும் தவிப்பும் மாறாத ஒன்றாக தொடர்ந்தபடி இருக்கிறது. திகைக்கவைக்கும் அந்த உண்மைதான் கவிதையின் வலிமை.
பசி என்னும் கவிதையில் அழகானதொரு காட்சியைச் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் எஸ்தர்.
தோட்டத்தில் நல்ல
கொய்யாப்பழங்கள் காய்த்திருக்கின்றன
அணில்களும் பறவைகளும் சதா வேட்டையாடினாலும்
பழங்களுக்கோ பஞ்சமில்லை
தோட்டத்தின் லயத்துச் சிறுவர்கள்
கொய்யாப்பழங்களைப் பசிக்காகத் திருடுவார்கள்
பொழுதுபோக்கும் கூட
யாரோ வைத்த மரம்
அதில் வரும் பழங்கள் பறவைக்கும்
எவரோ ஒருவரின் பசிக்கும்தானே
வாசலில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்
தோட்டத்தில் சலசலப்பு கேட்கிறது
சிறுவர்கள் பழங்களைப் பறிப்பதும் கடிப்பதும்
மெல்லிய குரலில் உரையாடுவதும் கேட்கிறது
கொடியவள்தான் நான்
எழுந்துசென்று அவர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு
கொடியவளில்லை
எது அந்தச் சிறுவர்களை விரட்டியடிக்காமல் அவளைத் தடுத்தது என்றொரு கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். பசி என்னும் உணர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று என்னும் புரிதல் அவளைத் தடுத்திருக்குமா? பறவைகள் உண்டு செல்வதை சிறுவர்களும் உண்டு செல்லட்டுமே என்னும் எண்ணம் அவளைத் தடுத்திருக்குமா? அவளுக்குள் இயல்பாக ஊறியெழுந்த தாய்மையுணர்வு அவளை அமைதியாக இருக்கவைத்துவிட்டதா? பதில்களின் பட்டியல் நீளும்தோறும் கவிதையின் அழகு பெருகிக்கொண்டே செல்கிறது.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒரு பொருள் மூங்கில் கூடை. காலமெல்லாம் அவர்கள் தலையில் அது ஒரு கவசத்தைப்போல அமர்ந்திருக்கிறது. நடக்கும்போது வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் காப்பாற்றும் கவசமாக இருக்கிறது. தேயிலையைப் பறிக்கத் தொடங்கியதும் கொள்கலனாக மாறிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் உடலோடு ஒட்டியிருக்கும் புடவையைப்போல, அந்த மூங்கில் கூடையும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஒன்று மானம் காக்கிறது.
இன்னொன்று வருமானம் அளிக்கிறது. மலையில் ஏறி இறங்கமுடிகிற காலம் வரைக்கும் அந்த வாழ்க்கை தொடர்கிறது. வயது முதிர்ந்து தள்ளாமை வந்ததும் அவர்களுக்கு வீடு மட்டுமே புழங்குமிடமாக மாறிவிடுகிறது. அப்போதும் அவர்கள் அந்தக் கூடையைப் பிரிந்துவிடுவதில்லை. அந்தக் கூடையை அவர்கள் வீட்டிலேயே கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்க்கப் பயன்படுத்துகிறார்கள். நிறமும் வலிமையும் இழந்துபோனாலும் காலமெல்லாம் அவர்களோடு அந்தக் கூடைகளும் அவர்களோடு வாழ்கின்றன.
நிறமிழந்த கூடையொன்று
மூலையில் கிடக்கின்றது
கோழியையும் குஞ்சுகளையும்
அதில் வைத்துக் காப்பாற்றுகிறாள் மூதாட்டி
கோழிகளையும் குஞ்சுகளையும் இரவில் மூடிவைக்கிறாள்
அருகேயும் படுத்துக்கொள்கிறாள்
அவள் சுமந்து இறக்கிய காலமெல்லாம்
அவள் தலையோடு கிடந்த கூடை
அவளோடு ஓய்ந்து கிடக்கிறது
சம்பளத்துக்குத் தாரேன் என்று கூடைக்காரனிடம் வாங்கும்
வீரியமிக்க மூங்கில் கூடைகள்
ஆசைதீரக் கொழுந்துகளை இறக்கி ஏற்றியது
ஓய்ந்துவிட்டது கிழவியின் கூடை
அந்திமக்காலத்தில் அவள் வீட்டுக் கோழிகளைக் காப்பாற்றுகிறது
’மீனவனின் திசை’ இத்தொகுதியின் சிறந்த கவிதைகளில் ஒன்று. சரியான கோணத்தில் தீட்டப்பட்ட நெய்தல் நிலச் சித்திரம் என்றே இக்கவிதையைச் சொல்லவேண்டும்.
நள்ளிரவில்
தப்பி வந்தவனைப்போல்
கதவைத் தட்டுகிறது காற்று
மீனவன் போடும் வலையை
அங்குமிங்கும் பாடி
இழுத்து விளையாடுகிறது
குழந்தைமனம் கொண்ட கடல்
இருக்கும் கடைசி சுண்டு அரிசியையும்
படக் படக்கென
சுளகில் புடைக்கிறாள் மீனவச்சி
மீன் வேட்டைக்குச் சென்றவனின் திசையையும்
தனக்குக் கொண்டுவரும்
மீன்களின் நித்திய ருசி பெருத்த
வழுவழுப்பான சொரசொரப்பான உடலங்களை
நினைத்து கண்ணை மூடிக்கொண்டு
வாலை ஆட்டுகிறது
மீனவனின் மனதையும்
திசையையும் அறிந்த அவனது நாய்
மீனவன், அவன் மனைவி, அவர்களுடைய வளர்ப்பு நாய் என மூன்று உயிர்களின் காத்திருப்பையும் ஆவலையும் நாம் இக்கவிதையில் பார்க்கலாம். அதன் விளைவை ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு விதமாக தம் நெஞ்சில் விரித்தெடுத்துக்கொள்ளலாம். எண்ணங்கள் வளரும்தோறும் கவிதையும் வளர்ந்துகொண்டே செல்லும்.
’பாதை’ என்னும் தலைப்பில் இரு கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. முதல் கவிதை பிண ஊர்வலம் தொடர்பானது. இறந்தவனின் உடலைச் சுமந்துகொண்டு உறவினர்களின் ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்படும் தருணத்திலிருந்து அக்காட்சி தொடங்குகிறது. பட்டாசு வெடிக்கிறது. அமரர் ஊர்தியை மாலைகள் அலங்கரிக்கின்றன. ஊர்தி நகரத் தொடங்கியதும் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மெளனமாக தலைகுனிந்தபடி ஊர்தியைப் பின்தொடர்ந்து நடந்துசெல்கிறார்கள். சில தெருக்கள் வழியாகச் சென்ற ஊர்தி சிறிது நேரத்தில் மயானத்தை அடைகிறது. யாரோ ஒருவர் ‘ஆகவேண்டியதைப் பாருங்கள்’ என்று பெருமூச்சோடு அறிவிக்கிறார். அடுத்த கட்டமாக மயானவேலைகள் தொடங்குகின்றன.
எல்லா ஊர்களிலும் நிகழும் வழக்கமான இறுதி ஊர்வலச் சித்திரத்தையே எஸ்தர் கவிதையாகக் கட்டமைத்திருந்தாலும் கவிதையின் ஊடே ‘வாழ்வு இன்றுதான் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது’ என எழுதியிருக்கும் இரு வரிகள் கவிதையைக் கூர்மை கொள்ளவைக்கிறது. அப்படியென்றால், அதுவரை அவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தது என்கிற வினாவை நோக்கி நம்மைத் திருப்பிவிடுகின்றன அவ்வரிகள். எதையோ அடைய நினைத்து, அதை எப்படி அடைவது என்று அறியாமல் வாழ்நாள் முழுதும் திசைதோறும் முட்டிமுட்டி மோதி அலைபாய்ந்திருப்பானோ என்று யோசிக்கவைக்கிறது. எது தான் செல்லவேண்டிய பாதை என்பதைக் கண்டறிய முடியாமலேயே அவன் வாழ்க்கை நிராசையுடன் முடிந்துவிட்டதோ என திகைக்கவைக்கிறது. வாழ்நாள் முழுதும் திசைதெரியாமல் அலைந்துகொண்டிருந்தவனைத்தான் அந்த இறுதி ஊர்வலம் மயானத்துக்குச் செல்லும் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது.
பாதை தலைப்பில் அமைந்த மற்றொரு கவிதையும் மிகமுக்கியமானது. விளக்கம் எதுவும் தேவையில்லாத வகையில் வெளிப்படையாகவே எழுதப்பட்டிருக்கிறது அக்கவிதை.
அடர் இருளில்
நடந்து செல்லும்
யானையின் பயணத்தை
வழிகாட்டுகிறது
ஒளிவண்ண மின்மினிகள்
யானையின் பயணத்துக்கு வழிகாட்டும் மின்மினிகள் என்னும் தொடர் எதிர்காலத்தில் எஸ்தரின் அடையாளமாக அமையக்கூடும். யானை மிகப்பெரிய விலங்கு. யாரும் வெல்ல முடியாத விலங்கு என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இருக்கமுடியாது. ஆனால் அந்த யானை மிகமிகச்சிறிய மின்மினிப்பூச்சிகள் வழங்கும் வெளிச்சத்தின் துணையோடுதான் தன் பயணத்தைத் தொடர்கிறது. துரதிருஷ்டவசமாக, யானைகள் ஒருபோதும் அந்த மின்மினிகளைப் பொருட்டாகவே நினைப்பதில்லை. ஆயினும் மின்மினிகள் தம் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வதில்லை. தம் பாதையிலிருந்து விலகிச் செல்வதுமில்லை. இலங்கையில் வசிக்கும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத மலையகத்தமிழர்களை அந்த மின்மினியாக உருவகித்துக்கொண்டால், எஸ்தரின் கவிதை மிக உயரத்துக்குச் சென்றுவிடுகிறது.
நூலின் விவரங்கள்:
புத்தகம் : “பெருவெடிப்பு மலைகள்” கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: கவிஞர் எஸ்தர்
பதிப்பகம்: பூபாளம் புத்தகப்பண்ணை, அண்ணா நகர் மேற்கு, சென்னை -600040
விலை: ரூ.100
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர்:
✍🏻 – பாவண்ணன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எஸ்தர் அவர்களின் கவிதை,மலையகம் இன்றும் எந்த மாற்றத்தையும் காணாத நிலையினை படம் பிடித்து,நம்மை படுத்துகிறது!
என்று விடிவுக் காலம்வரும்?