கவிஞர் லதா எழுதிய “பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கவிஞர் லதா எழுதிய “பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

“பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

மகத்தான அனுபவத்தை நோக்கி
பாவண்ணன்

ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சருமமெனக் கொண்டு ஒளிரும் ஆற்றலையும் தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அந்த அழகியல் வழியாகவே அக்கவிதை இம்மண்ணில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. அவ்வழகியலால் தூண்டப்பட்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழும் எண்ணங்கள் வெவ்வேறு தளங்களைத் தொட்டுத்தொட்டு அலையும்தோறும் உருவாகும் மன எழுச்சி, கவிஞரின் மன எழுச்சிக்கு இணையானதொரு அனுபவம். கவிஞரும் கவிதை வாசகரும் இணைந்து நிற்கும் அபூர்வமான புள்ளி அது.

இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தபோதும் லதாவின் ‘பாம்புக்காட்டில் ஒரு தாழை’ இப்போது வந்த புதிய தொகுப்புக்கு நிகரான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. சமகாலத்திலிருந்தே அவருடைய கவிதைக்கணம் அமைந்திருந்தாலும், அக்கணம் என்றென்றைக்கும் உரிய கணமாக அமைந்திருப்பதுதான் அதற்குக் காரணம்

வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தும் ஒவ்வொரு கணமும் வலியும் வேதனையும் நிறைந்தது என்பதில் ஐயமெதுவும் இல்லை. ஆனால் அந்தக் கணத்தில் எழும் வேதனையை மட்டுமே பெரிதென நினைத்துக் குமுறுவதிலோ அல்லது அந்த இழப்பையே பெரிதென நினைத்து வாடுவதிலோ ஒரு பொருளும் இல்லை. அந்த நெருக்கடி வழியாக நாம் உணரத்தக்க ஒரு பாடத்தின் துணையோடு நம்மை மேம்படுத்திக்கொள்வது மிகப்பெரிய ஞானம். நெருக்கடியின் துன்பத்தால் துவண்டு விழுபவர்களுக்கு நடுவில் அதை ஒரு பாடமாகக் கொண்டு எழுந்து வருபவர்கள் மிகவும் குறைவு. இத்தொகுதியில் லதா எழுதியிருக்கும் ’பாடம்’ என்னும் கவிதையைப் படிக்கும்போது அந்த எண்ணம்தான் எழுகிறது.

வானத்தில்
பறந்துகொண்டிருந்த
பட்டங்களுக்குள் ஒரு போட்டி
விழுவது யாரென்று

தற்செயலாய்
ஒரு பட்டம் வாலறுந்து
விழுந்தபோது
பறப்பது பற்றித்
தெரிந்துகொண்டது

பட்டம் காற்றில் நீந்தி வரும் காட்சியோடு நெருக்கடி வழியாகப் பாடம் கற்கும் ஞானம் மிகச்சரியாகப் பொருந்திப் போகிறது.

தொகுப்பின் தலைப்புக்கவிதை இத்தொகுதியின் மிகமுக்கியமான கவிதை. எங்கெங்கும் தாழையின் மணம் கமழ விரிந்திருக்கும் ஒரு காட்டுப்பகுதியைக் களமாகக் கொண்டிருக்கிறது கவிதை. திரும்பும் இடங்களிலெல்லாம் தாழை மடல் விரித்திருக்கிறது. மலராத மடல்களுக்கிடையில் பசபசப்பான பிசின் ஒட்டியிருக்கிறது. காட்டில் ஊர்ந்துவந்த பாம்பொன்று பிசினை ஊடுபாதையாகக் கொண்டு மடலுக்கிடையில் புகுந்து செல்கிறது. பிறகு அதையே தன் இருப்பிடமாகக் கொண்டுவிடுகிறது. ஒவ்வொரு மடலிலும் ஒவ்வொரு பாம்பு உறையத் தொடங்குகிறது. தாழைக்காடு மெல்ல மெல்ல பாம்புகள் உறையும் காடாக மாற்றமடைகிறது.

பச்சை அழியாத பசும் தாழை
மலராத மடல்களிடையே
இன்னும் ஒட்டியிருக்கிறது
வாலைப் பிசின்

வாசனை தெரியாது
காற்றின் இசையும் அறியாது
ஒன்றே குறியாய்
பார்வை மட்டும் பாய்ந்தோட
தோலை நிமிர்த்துகிறது

வாசம் விரியாத மடல் பிரித்து
தலை நுழைக்கிறது
அரையடி மடலுக்குள்
முழு உடல் சுருக்கி
ஒவ்வோர் மடலிலும்
சுருண்டு கிடக்கிறதொரு பாம்பு

சுமை பெருகப்பெருக
ஓங்கி வளர்கிறது தாழை
வீங்கி விளைகின்றன பாம்புகள்

கூடாரத்தில் தங்கியிருந்த மனிதனிடம் கூடாரத்துக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒட்டகம் குளிரைக் காரணமாகக் காட்டி கால்களை மட்டும் வைத்துக்கொள்ளட்டுமா முகத்தை மட்டும் வைத்துக்கொள்ளட்டுமா என கெஞ்சிக் கேட்டு மனிதனின் இரக்கத்தைத் தூண்டி, கடைசியில் கூடாரத்தையே ஆக்கிரமித்துக்கொண்டு மனிதனை வெளியேற்றிவிடும் கதையை நாம் அனைவரும் பள்ளிக்கூட வயதில் படித்திருப்போம். அதற்கு இணையான ஒரு சம்பவம்தான் தாழைமடலில் பாம்பு உறையத் தொடங்கும் கதை. சாமர்த்தியசாலிகளின் தந்திரங்கள் முன்னால் எளிய மனிதர்கள் காலம்காலமாகத் தோற்றபடியே இருக்கிறார்கள். தோற்றவர்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயம்தான் தாழம்பூக் காடு பாம்புக்காடாக மாற்றமடையும் செயல். அழகானதொரு படிமம் நம்மைப் பல கோணங்களில் சிந்திக்கவைக்கிறது.

இராமாயணக்கதையை அறிந்தவர்கள் அனைவரும் இலங்கையையும் அசோகவனத்தையும் அறிந்திருப்பார்கள். அசோகவனத்தின் அழிவையும் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் நடைபெற்ற போரையும் சீதையின் மீட்சியையும் தெரிந்துவைத்திருப்பார்கள். சீதையின் மீட்சி ஒருபக்கம் யுத்தத்தினால் விளைந்த நன்மை எனக் கருதினால், பிள்ளை வளர்ப்பதையே தன் கடமையெனக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் மரணத்தை அடையாளப்படுத்துவதற்கு என்ன சொல் இருக்கிறது? தன்னைப்பற்றி நினைக்கக்கூட பொழுதின்றி இறந்துபோன மண்டோதரியின் மரணத்தை எடுத்துரைக்கச் சொல்லில்லை. அவளுக்குச் சூட்டப்பட்ட பத்தினிப்பட்டமே அவளை எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறது. ஏற்கனவே பாதி எரிந்த அசோகவனத்தின் எஞ்சிய பாதி அவளுடைய தீயின் எச்சத்தால் எரிந்துகொண்டிருக்கிறது.

எரிந்தது காடு எரிந்தது நாடு
எரிந்தன மயில்கள்
எரிந்தன கோயில்கள்
ஏவல் பெண்கள் எரிந்தனர்
காவல் மரங்கள் கருகின
பிஞ்சுப் பாவலர்கள் வெந்துபோயினர்
நெஞ்சு பிளந்து அன்னையர் இறந்தனர்
ஆண்மை துவள ஆண்கள் வீழ்ந்தனர்
எரிந்துகொண்டிருக்கிறது அசோகவனம்

தீ பரவும் வேகத்தையும் உச்சம் தொட்டு ஒலிக்கும் ஓலமிடும் குரலின் வேகத்தையும் கவிதையின் வரிகள் தம்மிடையே கொண்டிருப்பது இக்கவிதையின் சிறப்பம்சமாகும். யுத்தத்தின் மூர்க்கத்திலும் வெற்றியின் கொண்டாட்டத்திலும் மூழ்கி ஆண்கள் எப்படியோ தம் உலகத்தை நிறைத்துக்கொள்கிறார்கள். ஆனால் பிள்ளை வளர்ப்பைத் தவிர வேறெதையும் அறியாத அப்பாவிப்பெண்கள் அசோகவனத்தோடு சேர்ந்து காலம்காலமாக எரிந்துகொண்டே இருக்கிறார்கள். வரலாற்றை எழுத நினைப்பவர்கள் கவனம் கொள்ள மறுக்கிற ஒரு முக்கியமான புள்ளியை அசோகவனம் படிமத்தின் வழியாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார் லதா.

லதாவின் கவிதைமொழி நுட்பம் பொருந்தியதாகவும் சிக்கலற்றதாகவும் உள்ளது. வாசகர்களைத் தம்மை நோக்கி ஈர்க்கிற ஓர் அன்றாடக்காட்சி அல்லது அனுபவச்சித்தரிப்பு அல்லது கவித்துவமான படிமம் அவருடைய பல கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. நம்மை அறியாமலேயே நமக்குள் நுழைந்துவிடும் அவ்வரிகள் நம்மை அசைபோடவைத்து மகத்தானதொரு அனுபவத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றன.

நூலின் விவரங்கள்:

நூல் : “பாம்புக்காட்டில் ஒரு தாழை” கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : கவிஞர் லதா
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
விலை :  ரூ.50

எழுதியவர்:

✍🏻 – பாவண்ணன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *