நூல் அறிமுகம்: கவிஞர் மீராவின் “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்” – ப.செல்வகுமார்

நூல் அறிமுகம்: கவிஞர் மீராவின் “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்” – ப.செல்வகுமார்

 

பாரதியின் வசன கவிதைகள் தான் எனது புதுக்கவிதைகளுக்கு தோற்றுவாய் என்பார் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி. பெருவெள்ளமென தொடங்கிய தமிழ்க்கவிதை அவ்வப்போது பல புதிய முயற்சிகளையும் செய்து பார்த்தது. எனினும் வசன கவிதையை ஒரு புள்ளியிலே நிறுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

“ நீ எனக்கு காதலைத் தந்தாய்;

அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது .

நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்;

இது ஏழையின் கண்ணீரைப் போல் உண்மையானதா என்று பார். “ என்று இந்த தொகுப்பு குறித்து கவிஞர் மீரா சுய விபரமளிக்கிறார். சிவகங்கையில் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய மீ.ராஜேந்திரன் தான் கவிஞர் மீரா. மூன்றும் ஆறும், மன்னர் நினைவில், ஊசிகள், கோடையும் வசந்தமும், மீ.ராசேந்திரன் கவிதைகள் , குக்கூ என்று கவிதைகளை எழுதியிருந்தாலும் இந்தத் தொகுப்பு அவரது சிறப்பு வாய்ந்த படைப்பாகும்.

படைப்பாளிகளைக் கொண்டாடிய கவிஞர் ...
மீ.ராஜேந்திரன் (எ) கவிஞர் மீரா

தொகுப்பின் தலைப்பையே கூட்டல், சமம் என்று குறியீடுகளோடு வைத்ததோடு தொகுப்பு முழுமைக்கும் வசன கவிதைகளையே எழுதியிருக்கிறார். முன்னுரை என்பதற்கு பதிலாக முடிவுரை என்று தொடங்கி கனவு, கற்பனை, காகிதங்கள் என்று மூன்றாக கவிதைகளை பிரித்து அந்தக்காலக் வானம்பாடி கவிஞர்களிலிருந்து தனித்து நிற்கிறார். மீராவின் கவிதைகளும், உவமைகளும் அக்காலக் கவிஞர்களையும், வாசகர்களையும் பித்துப்பிடிக்கச் செய்ததென்று சொல்வதொன்றும் மிகையில்லை.

காதல் தான் கவிஞர்களின் கவிதைக்கு கச்சாப்பொருள் என்றாலும் மீராவின் கவிதைகள் காதலுக்கே ஊடுபொருளானது.

“ நீ முதல்முறை

என்னைத் தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபோது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது

அதை இன்னும் எடுக்கவில்லை.

முள்ளை முள்ளால் தானே

எடுக்க வேண்டும் ?

எங்கே, இன்னொரு முறை பார் “ …..என்ற இவரது கவிதையை தூக்கிக் கொண்டு காதலிக்கத் திரிந்தவர்கள் வெகுபேர் என நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ...

மிக எளிதாக உணர்ச்சிவசப்படுகிற எழுபதுகளின் இளைஞர்களிடையே,

“ கண்ணில் தூசுவிழுந்துவிட்டது.

கொஞ்சம் ஊதி எடுங்கள் “ என்கிறாய்;

நல்ல உதவி ..நான் மறுப்பேனா ?

ஊதிக் கொண்டிருக்கிறேன்.

“ நீங்கள் ஊதுகிறீர்களா ? உறிஞ்சுகிறீர்களா ?

இது உதடு அல்ல, கண் ?”

என்கிறாய். ……”

என்றெல்லாம் எழுதினால் மீராவின் கவிதைகளின் மீது இளைஞர்களுக்கு பித்துப் பிடிக்காமல் என்னச் செய்யும் ?

உடுக்கை இழந்த கைகளை நட்புக்கு காட்டும் வள்ளுவரை மனதில் நினைந்தபடியே மீராவின் இந்த கவிதையை வாசியுங்கள்.

“ உன் முகத்தில்

வெட்கம் சித்திரம் வரைய,

நீ ‘ போங்கள் ‘ என்கிறாய்,

நான் உன் அருகே வருகிறேன் –

உண்ணும் போது

வாய்க்கு அருகே வரும் கையைப் போல ! “

காதல் உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது என்ற மீராவின் கவிதைகளில் உவமைகள் அற்புதமானவை. காதலின் பிரிவைச் சொல்கிறபொது,

“ பிழைக்கப் போன இடத்தில்

தன் கணவன் கள்வன் என்று குற்றம் சாட்டப்

பட்டதோடு

கொலையும் செய்யப்பட்ட

கொடுமையைக் கேட்டுக்

குலை நடுங்கிய ஒரு பத்தினியைப் போல்

என்னை நடுங்கவைக்கப் போகிறாயா ?

நீ என்னை விட்டுப் பிரியப் போகிறாயா ? “ என்பதான இந்த உவமை நயம் எத்தனை ஆழமானது இன்றைக்கும் உணர்ந்து வேதனை தரக்கூடியது.

கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள் by ...

“முதலாளித்துவத்தின்

சுரண்டலுக்குப் பலியாகும்

பாட்டாளி வர்க்கம் போல்

சாரம் இழக்கும் என் இளமையைப் பார் “ என்று காதலை பாட்டாளி வர்க்கத்தின் பார்வையிலிருந்து நோக்குகிறார்.

இன்றைக்கு திரைப்படங்களில் வருகிற பல வசன மாதிரிகளை இவரது கவிதைகளில் காணமுடிகிறது என்பதோடு இவரது கவிதைகளை கூர்ந்து வாசித்தால் உங்கள் கண்களுக்கு வைரமோ முத்தோ இரண்டுமோ கூட கிடைக்கலாம், சின்னதாய் உங்கள் ஆசைக்கு ஒன்று ,

“ செம்படவன் ஒருவன்,

இரண்டு வரால் மீன்களைப்

பிடித்து வருகிறான்;

நீ அவற்றை விலைக்கு வாங்கித்

தடாகத்தில் துள்ள விடுகிறாய்.”

கவிதையல்ல ஆக்கிக் கொள்ளலாம், கதையல்ல அமைத்துக் கொள்ளலாம் என்று இந்த தொகுப்பின் புதிய முயற்சியை வரையறுக்கும் கவிஞர் மீராவின் கவிதைகளை வாசிக்க அல்ல நேசிக்கவும் செய்யலாம்.

நூல் : கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

ஆசிரியர் : கவிஞர் மீரா

வெளியீடு : சீதை பதிப்பகம்

ப.செல்வகுமார்
பெரம்பலூர்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *