பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு புத்தகம் | Poet Pachonthi's Beef Kavithaikal Tamil Book Review | www.bookday.in

பச்சோந்தி எழுதிய “பீஃப் கவிதைகள்” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

‘மாட்டை அடிக்கிற மாதிரி’ என்பது ஊர்வழக்கு. இன்றைய காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மாடுகளை உணவுக்காகக் கொண்டு செல்லும் மானுடர்களை கொடூரமாகக் கொல்வதையும் அவர்கள் மீது கொடும் வன்முறையை ஏவுவதையும் பார்க்கும் போது மேற்சொன்ன ஊர்வழக்கின் அர்த்தம் மனிதர்களின் உடல்களில் இருந்து ஊனாய் உருகுகிறது. அதே மாட்டிறைச்சியையும் மாட்டுத் தோலையும் சந்தையைக் கணக்கில் கொண்டு ஏற்றுமதி செய்யும் ‘விலங்கு நல ஆர்வலர்கள்’ உள்ளூரில் மாட்டை கோமாதாவாகப் பூசிப்பதன் அரசியல் குறித்தும் இங்கு பேசவேண்டியுள்ளது. அதே மாட்டை தனது சக உயிராய் நேசித்து அதற்கு பிரசவம் பார்த்து ஊட்டி வளர்த்து இறந்து போனால் அதன் இறைச்சியைத் தின்று வாழும் பல கோடி மக்களின் வாழ்வில் மாட்டிறைச்சி என்பதன் அர்த்தமே வேறு. இந்த ஒட்டுமொத்த அரசியலையும் வாழ்வியலையும் பேசுகிறது பச்சோந்தியின் பீஃப் கவிதைகள் தொகுப்பு.

தாலாட்டு முன்பே கேட்டது
பறையிசைதான்
தாய்ப்பாலின் வாசத்துக்கு முன்பே
நுகர்ந்தது
மாட்டுக்கறியைத்தான்
என் பிள்ளையின் முதுகை வருடுவது போல
மென்மையான கன்றின் காதுமடலை
செல்லமாய் கடித்து வைத்து
என் சோற்றுத் தட்டை அள்ளி அள்ளி ஊட்டுவேன்
அதுவோ தன் சொரசொரக்கும் நாவால்
ஒருமுறை என் புறங்கையையும்
மறுமுறை என் முகத்தையும் நக்கும்.

— என்ற பச்சோந்தியின் வாழ்வியல் அனுபவ உணர்வை இத்தொகுப்பு முழுக்க வாசித்து முடித்ததும் உணர முடிகிறது. மாட்டை வளர்ப்பது முதல், அதை சீராட்டி உடனுயிராய் வளர்த்து, செத்துப்போனால் அறுத்துக் கூறு போட்டுத் தின்று, எஞ்சிய தோலில் பறையும் செய்து தனது வாழ்வியலூடான ஒரு தவிர்க்கவியலா அங்கமாகவே மாறிப்போன மாட்டைப் பற்றிய, அதன் இருப்பைப் பற்றிய, அதன் இன்மையைப் பற்றிய, அதன் கறியைப் பற்றிய, அதன் மீதான அரசியல் பற்றிய முழுப்பார்வையே இக்கவிதைகள். அதற்கான பச்சோந்தியின் கூடுதல் அலைவுறுதலின் தேடலின் பலன் தொகுப்பில் தெரிகிறது – கூடவே சரியான அரசியல் பார்வையும்.

அவரது நினைவுகளில் அவியும் மாட்டுக்கறியைப் பற்றி மட்டுமல்ல, தொழுவத்து மருத்துவக்குறிப்புகளையும், மாடுகள் அறுபட்டு அரளிக்காடெங்கும் வீசும் ரத்த நெடி குறித்தும், எலும்புக்கோப்பையின் ‘மதுபர்க்கம்’ பற்றியும், ஏன் – அக்ரஹாரத்து மாடுகளையும் கோசாலைக் கோயில் மாடுகளையும் கூட எழுதுவதோடு, தேசியக் கொடியில் கடைசிப் பச்சையத்தை கண்ணுற்று தலைகீழாகிப் போன ‘மாட்டுப்பொருள்’ உற்பத்தி சந்தை குறித்தும் பேசும் பச்சோந்தி, வேள்வியில் எஞ்சியதிந்த மாட்டுக்கறியமுதம்தானே என உச்சிமுகக்கிறார்.

மேலத் தெரு பெண் தூக்கில் தொங்கியதாக
செய்திவந்தது.
அவளைக் காதலித்த
பறையடிக்கும் பெருமாளின் தலையைத் தண்டவாளத்தில்
சேரியே தேடியலைந்தது அன்று.
ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு
அவசரமாய் ஓடுகிறோம்.

என்று தொடங்கும் கவிதையும் தொகுப்பில் இருக்கிறது. மாட்டிறைச்சி குறித்த கவிதைகளில் இதெல்லாம் தேவையா என்பவர்கள் மாடு யாருடைய வாழ்வியலுடன் தொடர்பிலிருக்கிறது என்பதை உணர்ந்தால் அவனை/அவளை எழுதுவதும் பீஃப் கவிதைதான் என்பதை உணரலாம். வெறுமனே மாட்டைப் பற்றியும் மாட்டிறைச்சியைப் பற்றி மட்டும் இத்தொகுப்பு பாடவில்லை. மாட்டுடன் வாழ்ந்து மடியும் மானுடர்களின் வாழ்வியலையும் பேசுவதில் தொகுப்பு தனித்துத் தெரிகிறது.

தலித் கவிதைகளில் மட்டுமின்றி மொத்த தமிழ்க்கவிதைகளில் குறிப்பிடத்தகுந்த ஒரு தொகுப்பாக நான் உணர்கிறேன். ரமேஷ்பிரேதனின் வார்த்தைகளை மறுப்பின்றி வழிமொழிகிறேன் – ‘இதுவொரு கவித்துவக் கலகப் பனுவல்.’

நூலின் விவரங்கள்:

நூல் : பீஃப் கவிதைகள் (Beef Kavithaikal)
ஆசிரியர் : கவிஞர் பச்சோந்தி (Poet Pachonthi)
பதிப்பகம் : நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
விலை :  ரூ.150

எழுதியவர்:

✍🏻 – அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *