சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

 

தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான், மு.மேத்தா, புவியரசு, கல்யாண்ஜி என்று பலரும் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.

அண்மையில், பொள்ளாச்சியில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பியின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.

Jeyamohan -க்கு சாகித்ய அகாடமி தரப்படாததற்கு இதுதான் காரணம்!|பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் | Writer Sirpi Balasubramaniam interview - Vikatan
                                   சிற்பி பாலசுப்ரமணியம்

கவிஞர் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி, கவிஞர் கோ.வசந்தகுமாரன், ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோர் விருதுகள் பெற்றனர். விருது பெற்ற கவிஞர்களைப் பற்றிய சுருக்கமான தொகுப்பு இங்கே:

பிருந்தா சாரதி:

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட பிருந்தா சாரதி கும்பககோணத்தில் பிறந்தவர். இயற்பியலில் இளங்கலையும், தமிழிலக்கியத்தில் முதுகலையும் படித்தவர். சுஜாதா போல பெண் பெயரில் எழுதினால் எளிதில் வாசகர்களை ஈர்க்கலாம் என்ற ஆர்வத்தில் “பிருந்தா” வையும், நா. பா.வின் எழுத்தின்பால் கொண்டிருந்த பிடிப்பின் காரணமாக ‘சாரதி” யையும் சேர்த்து பிருந்தா சாரதி எனப் புனைபெயர் வைத்துக் கொண்டவர்.

‘கல்கி’ பொன்விழா கவிதைப் போட்டியிலும் கம்பன் கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரி கவிதைப் போட்டியிலும் தமிழ்நாடு அளவில் பரிசு பெற்றவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1992இல் வெளியானது. கவிதை, கட்டுரை, திரைஎழுத்து, இலக்கியப் பேச்சு போன்றவை இவரது பங்களிப்பாக இருந்து வருகின்றன. நடைவண்டி, ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், எண்ணும் எழுத்தும், பறவையின நிழல், இருளும் ஒளியும், முக்கோண மனிதன் ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள்.

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/
                                          பிருந்தா சாரதி

இவருக்கு ஹைகூ கவிதைகள் எழுதுவதில் அதீத ஆர்வம் உண்டு. மீன்கள் உறங்கும் குளம், பச்சையம் என்பது பச்சை இரத்தம், பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இவரது ஹைகூ கவிதை நூல்கள் மிகுந்த கவனம் பெற்றன. கல்லூரிப் பாட நூல்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது , எழுத்தாளர் சங்க விருது, படைப்பு குழும விருது, சௌமா இலக்கிய விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சில அங்கீகாரங்கள்.

நாசர் இயக்கிய ‘அவதாரம் ’, ‘தேவதை’ மற்றும் என்.லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘ஆனந்தம்’, ‘பையா ’, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, சண்டக்கோழி – 2, வாரியர் ஆகிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார் . ‘தித்திக்குதே’ படத்தின் இயக்குனர்.

கோ. வசந்தகுமாரன்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுக்காரர். வேதியியல் பட்டதாரி. கடந்த 30 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதுபவர். இருநூறுக்கும் அதிகமான கவியரங்குகளில் பங்கேற்றிருக்கிறார். ‘பாலைவனத்துப் பூக்கள், சொந்த தேசத்து அகதிகள், மனிதன் என்பது புனைபெயர், மழையை நனைத்தவள், சதுரப் பிரபஞ்சம்’ என இவரது கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

‘மனிதன் என்பது புனைபெயர்’ கவிதை நூல் தமிழ் மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது . இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதமியின் “இந்தியன் லிடரேச்சர்” இதழில் வெளியிடப்பட்டன.

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/
                              கோ. வசந்தகுமாரன்

2019ல் பஞ்சாப் மாநில அரசின் அழைப்பின்பேரில் குருநானக்கின் 550வது பிறந்தநாளை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட “கவி தர்பார்” நிகழ்ச்சியில் பங்கேற்று கவிதை வாசித்திருக்கிறார். சென்னைத் தொலைக் காட்சியின் ‘வயலும் வாழ்வும்’ ‘முத்தமிழ் மன்றம்’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும், சென்னை விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பின் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணி செய்த அனுபவமும் உண்டு. தமிழின் பல மூத்த கவிஞர்களை குமுதம் பத்திரிகைக்காகப் பேட்டி கண்டிருக்கிறார்.

“அப்துல் ரகுமானை பேட்டி கண்டபோது அவர் மரணம் பற்றியே நிறையப் பேசினார். பேட்டி கண்ட ஓரிரு மாதங்களிலேயே அவர் மரணமுற்றதைக் கண்டபோது அவருடைய மரணத்தை முன்கூட்டியே கணித்து உள்ளுணர்ந்தது மாதிரி இருந்தது ” என்று கூறுகிறார் வசந்த குமாரன்.

அமுதபாரதி:

தாயுமானவன் என்பது இயற்பெயர். மாமண்டூரில் பிறந்தவர். “திருவள்ளூரில் உயர்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள் கோபாலய்யர், ஆசீர்வாதம் இருவரும் என் திறமையைக் கண்டறிந்து அளித்த ஊக்கமே என்னை ஓவியனாக்கியது. தமிழாசிரியர்கள் ராமமூர்த்தியும், விஜயராகவனும் அளித்த ஊக்கமும், கற்றுக் கொடுத்த தமிழ் இலக்கணமும்தான் என்னைக் கவிஞனாக்கியது” என நன்றியோடு நினைவு கூர்கிறார்.

மாலை வேளைகளில் நூலகம் சென்று இவர் படித்த கவிதைப் புத்தகங்கள் இவருக்குள்ளே கவிதை மீது காதலை ஏற்படுத்தியதாம். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பாரதியார் படம் வரைவதற்கான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர். ஓவியர் மணியத்தின் உறவினர் ஒருவர் சக மாணவர் என்பதால், அவர் மூலம் மணியத்தின் அறிமுகம் கிடைத்தது.

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/
                                                         அமுதபாரதி

“சிறு வயதில் இப்படி ஓர் ஓவியத் திறமையா? ” என வியந்த மணியம் தனி கவனம் செலுத்தி இவரை ஊக்குவித்தார். முதலில் இவரது புனை பெயர் தாயு. இது அமுதன் ஆகி, பின்னர் அமுதோன் ஆகி, இறுதியாக அமுதபாரதியானது. தமிழ்நாட்டில் கவிஞராகவும், ஓவியராகவும் இரு தளங்களில் இயங்கி வருபவர் இவர். அந்த
வகையில் இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது . தமிழ்ப்பத்திரிகை உலகம் கொண்டாடிய ஓவியர்களுள் இவரும் ஒருவர்.

“கவியரசரது கண்ணதாசன் இதழில் வடிவமைப்புக்கு முழுப் பொறுப்பேற்றுப் பணி செய்த நாட்கள் எனது வாழ்க்கையின் வசந்த காலம்” என்று மனம் நெகிழ்கிறார் ஓவியக் கவிஞர் அமுதபாரதி. மரபுக் கவிதை, புதுக் கவிதை இரண்டையும் எழுதிய இவரது தற்போதைய ஆர்வம் ஹைக்கூ கவிதைகள்.

நா.வே. அருள்:

“எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகக் கவிதையின் மீது அப்படியோர் ஈர்ப்பு. அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவன் என்பதால் பள்ளியிலேயே பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் கலந்து கொள்ள ஏராளமான வாய்ப்பு; தமிழாசிரியர்களின் தட்டிக் கொடுப்பு என்று அற்புதமான சூழல்! பள்ளியில் நடந்த ஒவ்வொரு விழாவும் தமிழ்த்தாய் இந்தக் குழந்தைக்காகத் தயாரித்த தொட்டில்தானோ என்று இன்று உணர்ச்சி பொங்க நினைத்துப் பார்க்கிறேன்.

அன்று அவர்கள் கொடுத்த உற்சாகம்தான் இன்றுவரைக்குமான என் கவிதை ஊற்று!” என்று பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி, ஓய்வு பெற்ற கவிஞர் நா.வே.அருள் தான் கவிஞரான பின்னணியை விவரிக்கிறார். ‘ஆயுதம், வெயிலுக்கு இன்னொரு பெயர் மழை, பச்சை ரத்தம், கையடக்கக் கவிதைகள், வரம் வாங்கிவிட்டுக் கடவுளைக் கொன்றவர்கள் ’ ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகளில் சில. தவிர இரண்டு கட்டுரைத் தொகுப்புகள்.

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/
                                              நா.வே. அருள்

அனேகமாக எல்லாத் தமிழ் இதழ்களிலு ம் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன. பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலி அலைவரிசைகளில் கவிதைகள் வாசித்திருக்கிறார். அரை டஜன் விருதுகள் பெற்றவர். இவரது சிறுகதைகளும் பல போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. “கவிதை உறவும் அமுத சுரபியும் இணைந்து நடத்திய “கவிதை இரவு” நிகழ்ச்சியில் “துண்டுக் காகிதம்” என்ற எனது கவிதை முதல் பரிசை வென்றது.

அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ரூபாயாகப் போட்டு “பொற்காசு முடிச்சு” போல நடுவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நூறு ரூபாய் பரிசு கொடுத்ததை இன்றும் மறக்க முடியவில்லை.” என்கிறார் அருள். 2024ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வ ழங்கப்பட்டது. பதிப்பியல் வி த்தக ர் விருது மணிவாசகர் பதிப்பகத்தின் இராம. குருமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

 

நன்றி: அமுதசுரபி மாத இதழ் (ஆகஸ்ட் 2024)

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *