கவிஞர் சிவமறலன் எழுதிய "தட்டான் பிடிப்பவன் " புத்தகம் ஓர் அறிமுகம் | Poet Sivamaralan's Thattan Pidippavan Book Review | www.bookday.in

கவிஞர் சிவமறலன் எழுதிய “தட்டான் பிடிப்பவன்” – நூல் அறிமுகம்

“தட்டான் பிடிப்பவன் ” – நூல் அறிமுகம்

“ சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொல் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை” பாரதி தன் கவிதைகளை இப்படி பெருமை பொங்க குறிப்பிடுவான்.

இது போன்றே சிவமறலனும் பெருமை கொள்ளலாம். உணர்வுகளையும் உள்ளத்தின் எழுச்சிகளையும், கனவுகளையும் கற்பனைகளையும் எண்ணங்களையும் காண்கின்ற காட்சிகள் அனைத்தையும் கவிதையாக்கித் தந்திருக்கும் சிவ மறலனும் தன் கவிதைகள் குறித்து பெருமை கொள்ளலாம் என்பதே எனது பாராட்டு,வாழ்த்து.

இந்நூலில் பெரும்பாலான கவிதைகள் காட்சிகளாகவே இருக்கிறது. அதனால் அந்தக் கவிதைகள்,அந்த உணர்வுகளோடு நம்மை அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. உதாரணத்திற்கு அப்படி ஒரு கவிதையை இங்கே தருகிறேன்.

“சத்தமிடு வோரின் பெயரை
கரும்பலகையில் குறிக்கச் சொல்லி
பிறம்பை தந்து விட்டு கிளம்புவார்
மனோரஞ்சிதம் டீச்சர்
வாய்க்கு பூட்டிட்டு
அசுர அமைதியில்
மாணவ மாணவியர்
கரும்பலகையில்
எவரையாவது எழுதிவிடும்
முனைப்பில் ரோந்து போகும் கண்கள்
சடசடவென புரளும் வகுப்பறை நாட்காட்டி
இணையை கவர
கெவுளி கொடுக்கும் குரல்
ஜன்னலைக் கடந்து விருட்டென
வகுப்பில் கடக்கும்
சிட்டுக்குருவியின் சிறகடிப்பு
தாகம் தணிக்க ஆழக் கதறும் பசு
இவைகளை எங்கனம் ஏற்றுவது
கரும்பலகையில்”

இந்தக் கவிதை என்னை வகுப்பறையில் அமர வைத்தது.
அந்த கனத்த மவுனம் என்னை மென்று தின்பதைப் போல் உணர வைத்தது
அந்த வயதில் அசுர அமைதி என்பது மிக கொடுமையானது.
அந்த வயதில் நாக்குக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்துக் கொள்வது கல்வியாகுது.
கவிஞருக்கு அதுவே கவிதையானது.

‘ இவ எங்க பொழைக்கப் போற, இவள்ளாம் புருஷ வீட்டுக்கு போனா ரெண்டே நாள்ல வீட்டுக்கு வந்துருவா’ இப்படியான வசவுகளை எல்லாம் நான் காதில் கேட்டிருக்கிறேன். இதே போல் திருமணமான இரண்டே நாளில் வீட்டுக்கு வந்து வந்துவிட்ட பெண்களையும் பார்த்திருக்கிறேன். கணவனோடு சேராமலேயே வாழ்ந்து விட்டுப் போன பெண்களையும் பார்த்திருக்கிறேன். கணவன் என்றால், இல்லறம் என்றால், காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் பிள்ளைகளை வளர்த்து விடுகிறார்கள். இதற்காகத்தான் இப்போது செக்ஸ் என்றால் என்னவென்று சிறிது கற்றுத்தரப்படுகிறது. கவிஞரும் நமக்கொரு ஒரு தோழியை அறிமுகப்படுத்துகிறார்.

“பாலிய உணர்வு
அறியா வயதிலேயே
ஒழிந்தாட்டத்தை மறுத்த தோழி

வகுள மரத்து
ஜோடிக் குருவிகளின் கலவியைக் கூட
குற்றமாய் பார்த்த தோழி

அறிவியல் பாடத்தில்
அந்தரங்க உறுப்புகளைப்
பற்றிய கேள்வியில்
விடை சொல்லத் தயங்கி
பிரம்படி பெற்ற தோழி

முதல் இரவு முடிந்த கருக்கலில்
தோட்டத்து மரத்தில்
தூக்கிட்டு தொங்கிய வினோதம்தான்
வாழ்க்கை எழுதும் கவிதை “

அந்தப் பெண் எதனால் தற்கொலை செய்து கொண்ருப்பாள்? என்கிற கேள்வி எழுகிறதல்லவா? இப்படி கேள்விகளை எழுப்புவது தானே நல்ல கவிதை. இப்படி நல்ல கவிதைகள் ஏராளமாய்க்கு தொகுப்பில் இருக்கிறது.

பெண்கள் எப்படி இருந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்?
பெண்களுக்கு இது தெரியவில்லை, தெரியாமல் தான்,பெண்கள் தங்களை மாஞ்சி.. மாஞ்சி அலங்காரம் செய்து கொள்கிறார்கள்.

விதவிதமாய் வண்ண வண்ணமாய் சேலைகள், பல ஆயிரங்களில்,பல விதங்களில் ரவிக்கைகள் தைக்கிறார்கள். பல மணி நேரத்தை ப்யுட்டி பார்லரில் செலவழிக்கிறார்கள், காதிலே மூக்கிலே கண்ணிலே என்று எத்தனை விதமான நகைகள், உதட்டுக்கென பல நிறங்களில் சாயம் பூசிக் கொள்வதும், அடடா எத்தனையெத்தனை மெனக்கிடல்கள் எல்லாம் எதற்கு? ஆண்கள் ரசிப்பதற்காகவா?அப்படித்தான் பெண்கள் கருதுகிறார்களா? அப்படி என்றால் அது மாபெரும் தவறு தான் பெண்களே.

அன்பான உள்ளத்திலிருந்து எழுந்து வரும் ஒரு புன்னகை போதும். அலங்காரம் ஏதுமின்றி தூங்கி எழுந்து முகம் கூட கழுவாமல் வந்து நிற்கும் பெண்ணின் அழகு எவ்வளவு பேரழகு தெரியுமா.
உண்மையான அன்பு மிகும் ஆணின் கண்ணில் பெண் என்றாலே அழகுதான்.
நீள நீளமான கூந்தலிலா என்ன இருக்கு ஈரையும் பேனையும் தவிர. உழைத்துக் கலைத்த பெண்ணின் முகத்தில் கோடு கோடாய் வடியும் வியர்வையில் இல்லாத அழகா! பெண்களே ஆண் இனத்தை பொறுத்தவரை நீ பெண்ணாய் இருப்பதே பேரழகு தான். இன்னும் இன்னும் எது அழகு என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.பாருங்கள் கவிஞரின் கவிதையில், ஒரு எளிய அழகு எப்படி மிளிர்கிறதென்று,

“கரும்ப பச்சை பாலிஸ்டர் பிளவுஸ்
அரை வெள்ளை நிறச் சேலை
கண்ணாடி பார்க்காமல் வைத்த
நெற்றிச் சந்தனம்
அவிழ்ந்து முடித்த கூந்தலின்
முல்லைப் பூச்சொருகள்
உச்சபட்ச அழகின்
அது ஒரு மாதிரி தோற்றம்”

ஒன்றுமே இல்லை. ஆனால் உச்சபட்ச அழகு என்கிறார் கவிஞர். அது என்ன மாதிரி அழகு என்றால்? அது ஒரு மாதிரி தோற்றம் என்கிறார். எது மாதிரி தோற்றம் என்று அவர் கூற வேண்டும் அல்லவா? இப்படிக் கூறுகிறார்.

“ஓடு மேய்ந்த ஆலயத்தில்
எலுமிச்சை தீப மேற்றி
ஒளி மினுக்கில் ஆலயம்
கருவறை தாண்டி காட்சி தரும்
அம்மனைப் போல்…”

இது கவிஞரின் அற்புத ரசனை தானே

தீபாவளி என்றாலே அது பெரியவர்களுக்கு தலை வலி தான். ஆனால் குழந்தைகளுக்கு, வார்த்தையில் வடிக்க முடியாத அளவு குதூகலம். நாள் நெருங்க நெருங்க குதூகலம் கூடிக் கொண்டே போகும். கூடிக்கொண்டே போகும் அந்தக் குதூகலம் ஒருநாள் டக்கென்று நிற்கும். எதிர்த்த வீடு அடுத்த வீடு என பட்டாசுகள் வெடிக்கத் துவங்கும்,அவர்கள் வீட்டுக்குள் தீபாவளிக்கான எந்த அடையாளமும் வந்திருக்காது. பக்கத்து வீடுகளின் பட்டாசுச் சத்தமும் பலகாரச் சத்தமும், “அப்பா நாம ரொம்ப ஏழையாப்பா” ஏதோ ஒரு புரிதலில் குழந்தைகள் ஏக்கமாய் கேட்கும். கேட்கும் அந்தக் கேள்வியில் அப்பாக்களின் இதயம் எண்ணைச் சட்டியில் பிழியப்படும் முருக்காகும். கவிஞர் ஒரு குடும்பத்தை கவிதைகள் காட்சிப்படுத்துகிறார்.

“………
ரேஷன் அரிசி சோறு
தொண்டையை அடைக்கிறதென்று
அப்பாவிடம் சொல்லி அடி வாங்கிய….

தீபாவளிக்கு ரோல் கேப்,
துப்பாக்கியும் கேட்டு அடம்பிடிக்கும்
தம்பியின் அழுகுரல்களுக்கிடையே

வீட்டறையில் வெடி, புத்தாடை,
பலகாரம் என
பண்டிகை பொருட்கள்
முகாமிட்டிருக்கு
அம்மா தாலியை அடகு வைத்த
அடகுச் சீட்டுடன்”

இப்படி கவிஞரின் கவிதைகளில் பல சூழல்கள்.

அதில் ஒரு சூழல், இப்படியொரு சூழலை எந்தக் கவிஞனாவது பாடி இருப்பானா? பாடியிருக்க மாட்டான் என்று தான் நினைக்கிறேன்,கவிதை உலகில் எவரும் தொடாத பாகத்தை, எல்லையை கவிஞர் சிவமறலன் தெட்டிருக்கிறார். அது ஒரு கிராமத்து வாழ்க்கை,

“-குடும்பமே கூடி
புழுங்கல் அரிசிக்கு
நெல் அவிழ்த்துக் கொண்டிருக்கையில்
பொன்வண்டு நிற பாவாடை அணிந்து
சேகரித்துக் கொண்டிருந்தாய்
சொட்டாங்கல் விளையாட
குட்டி குட்டியான கற்களை.

கல் தேடப் போனவள்
எங்கே எங்கே என
நெருப்பெரிக்க கூலம் திரட்டியபடி
நோட்டமிட

அருகில் யாரும் இல்லை என
நிச்சயித்து மருக்கை பூத்த வெட்கத்தோடு
சிறுநீர் கழிக்க நீ ஒதுங்கினாய்”

இப்படி சிறுநீர் கழிப்பதை எந்த கவிஞனும் கவிதை ஆக்கியது இல்லை. இது ஒரு துணிச்சலான முயற்சி என்று தான் நினைக்கிறேன்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் எப்போது எங்கே அரும்பும்? கோயில், கடற்கரை அல்லது திருமணம் போன்ற விசேஷ வீடுகளில், திருவிழாக்களில். இன்னும், திரைப்படங்களில் சில காதல் சந்திப்புகள் காட்டப்படும். ஒரு வில்லன் அல்லது ரவுடி பேக்கை பிடுங்கிக் கொண்டு ஓடுவான்.நாயகன் துரத்திப் பிடித்து அந்தப் பேக்கை பிடுங்கிக் கொண்டு வந்து நாயகியிடம் கொடுப்பான். உடன் காதல் பிறக்கும். அல்லது ரவுடி கையைப் பிடித்து இழுப்பான் அவளிடம் இருந்து கதாநாயகி காப்பாற்றுவான், அப்போது காதல் பிறக்கும் இப்போது புதிதாக இன்னும் பல காதல் சந்திப்புகள் வித்தியாசமா இருக்கிறது? ஆனால் நம் கவிஞர் ஒரு இடத்தை காட்டுகிறார், உண்மையில் அந்த இடத்தில் காதல் பிறக்குமா?

“ ………….
சுறுக்குப் பையை பிடுங்கும் கணம்
எடு தூ…ய குடிக்கி
அப்பத்தாவின் வசவின் ஊடே
ஒரு சிரிப்பு சிரித்தாயே
அதுவே காதல்”

இப்படியான காதல் கவிதைகளோடு

“………
டேட்டா முடிந்து போனது என்றதும்
நொடிப் பொழுதில் ஏறும்
ஒரு மாத பேக்
என் போனிலிருந்து உன் போனிற்கு

அப்பா சட்டை
அம்மாவின் வெந்தய டப்பாவென
திருடிச் சேமித்த சில ஆயிரங்கள்
கணப் பொழுதில் கரையும்
உன் பிறந்தநாள் பார்ட்டியில்
அதே நேரம் அதே கடை
மாற்றானுடன்
காப்பி டேட்டா பார்ட்டி” என
டாட்டா காட்டி விட்டுச் சென்ற காதல்களும், கவிதைகளுமாக நூலெங்கும் பூத்துக் கிடக்கிறது,தட்டான் பிடிக்க போனவன் கவிதைகளை அள்ளி வந்து இருக்கிறான்.

இந்த நூலில் எனக்கு பிடித்த என் நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு கவிதை. காதலை பாடுவதைப் போல கவிஞர்கள் ஏதாவது ஒரு வகையில் அம்மாக்களைப் பற்றியும் பாடி விடுகிறார்கள்.

“சூளையிலேயே சுருமாட்டுச் சுருளில்
சுமந்த செங்கல் மகுடமாயிருக்க
முவாறு கணம்
கழுத்தை நடுங்கச் செய்திருக்க

முந்தானை நுனியில்
முடிந்திருந்த ஐந்து ரூபாயை
உள்ளங்கையில் திணித்து
‘பார்த்துப் போடா’ என்ற அம்மாவின்
பிரியக் குரல் கேட்டது
அதேமுந்தானைச் சீலையை
தரையில் விரித்து உறங்குகையில்”

இந்தக் கவிதை நான் எழுதிய ஒரு கவிதையை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. இவர் அம்மாவின் சேலையை தரையில் விரித்து உறங்குகையில் இருந்திருக்கிறது எனக்கு ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறுட்டுவதை பார்த்தபோது என் அம்மாவின் ஞாபகம் வந்தது. இந்த ஞாபகத்தில்,

அமாவாசையிலும் அடம்பிடித்து அழுவேன்
நிலா கேட்டு. இப்போது
அமாவாசை அமாவாசை அழுகிறேன்
அம்மாவைக் கேட்டேன்

சிவ மறலன், எழுத்துலகும் எனும் பெரும் கடலில், கரையில் நின்று கவிதைகளை தூண்டில் போட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார்.இன்னும் அவர் ஆழ் கடல் செல்ல வேண்டும், வலை விரித்து அள்ள வேண்டும் சமுதாயம், அரசியல் என கவிஞரின் சிந்தனை விறிய வேண்டும். ஆழ் கடலிலே வலை வீசினாலும் அள்ளி வருவது மீனாக இருக்கக் கூடாது, விண்மீன்களாக இருக்க வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தோழமையுடன்,

நூலின் விவரங்கள்:

நூல்: தட்டான் படிப்பவன்
கவிஞர்: சிவமறலன்
வெளியீடு: நாதன் பதிப்பகம்
தொடர்புக்கு :98840 60274

எழுதியவர் : 

✍🏻 எழுத்தாளர் பொன் விக்ரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *