Poet Theni Thanges Four Poems in Tamil Language. Book Day Website and Bharathi TV (Youtube) are Branches Of Bharathi Puthakalayam.

தங்கேஸின் நான்கு கவிதைகள்



கவிதை 1

மசக்கை நிலா
சாம்பலில் புரளும் நேரம்
என் தேநீர்க் கோப்பையில்
நீலவானம் பனித்துண்டாக
மிதக்கிறது

காலத்தை ஒரு மிடறு உறிஞ்சிக் குடிக்கிறேன்

இரவு என்பது
ஒரு காக்கை இறகு
பிழையறியும் நெஞ்சங்களின்
இரகசியக் கருவறை

காலை என்றால் சூரியனை
செவ்வந்திப் பூவாகப் பறித்து
நீ சூடிக் கொள்ளலாம்
தளும்பத் தளும்ப தண்ணீர்க் குடத்துக்குள்ளும்
இட்டு வரலாம்
ஆனால் கரிய இரவை என் செய்வாய் ?

சாத்தானும் கடவுளும்
விடிய விடிய கண்ணாமூச்சி ஆடி
ஒய்ந்த பின்
ஆளுக்கொரு விழியில் விழுந்து
குறட்டை விடும் நேரம்
இரகசியமாக எடுத்து
உன் கூந்தலில்
சொருகிக் கொள் சகியே!

கவிதை 2

ஏதுமற்றவனாய் போனேன் ஒரு வெற்றிரவில்
நிலவு சட்டென்று இறங்கிவந்து
கண்ணீரைத் துடைத்துப்போனது

வடமேற்கில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த
கிழட்டு நட்சத்திரம் ஒன்று
காற்றில் பிடியை உதிர்த்தது ஆற்றாமையில்

இரண்டு மேகங்களுக்கு இடையிலிருந்து
இறங்கிவந்த முதியவர்
குருதிவழியும் என் இதயத்தை
தன் கைகளில் எடுத்து முத்தமிட்டு

‘’ இது ஒரு கணம் அன்பிற்குரிய வசிப்பிடமாய் இருந்தது ‘’
என்று சொல்லிவிட்டு மறைந்தார்



கவிதை 3

இந்தப் புல்லாங்குழலின்
அத்தனைத் துளைகளையும் அடைத்து
இசையின் மூச்சை
நிறுத்திவிடத் துடிக்கும் நீதானா
அன்று உன் சுவாசமாய் இருப்பேன்
என்று சொன்னவனும் ?

கவிதை 4

நடுநிசியில் முன் தோன்றிய கடவுள்
என் விரல்களைப் பிரியமாகப் பிடித்த படி

வெறும் விரல்கள் அல்ல இவை
பிரபஞ்சத்தின் திறவுகோல்கள்
என்று சொல்லி விட்டு மறைந்தார்

அந்நேரம்
வாசல் செம்பருத்தியில் வண்டுகளின் பிதற்றல்கள்
சிலிர்ப்படங்காமல்
செம்பருத்தியிடம் சென்றேன்
கூம்பிப் போன மொட்டான்றை
விரல்களால் தொட்டேன்

உள்ளே சாவி போட்டது போல்
சடக்கென்று திறந்து
கொண்டது

இப்போது
மொட்டுக்களைச் சுற்றி
பிதற்றிக் கொண்டிருந்த கருவண்டுகளெல்லாம்
என் விரல்களைச் சுற்றி
ரீங்காரமிட ஆரம்பித்திருந்தன

தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *