நூல் அறிமுகம்: கவிஞர் தில்லையின் *”விடாய்” கவிதைகள் தொகுப்பு* – கருப்பு அன்பரசன்விடாய்
கவிதைகள் தொகுப்பு
தில்லை
தாயாதி வெளியீடு

கருப்பு கருணாவின் இழப்பிற்கு பிறகு வாசிப்பிற்குள் மனசை நுழைத்துக் கொள்வது என்பது பெரும் சிரமமாகவே.. மனசை நிலைப்படுத்த முடியாமலும் காத்திரமாக.. வேகமாக முன்போல என்னை எந்த வேலைதனிலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமலும் உரமேறிப்போன பாதங்களிலெங்கும் கொப்பளங்கள் வெடித்துக் கிளம்ப, ரத்தம் பிசுபிசுக்க சுடு மணலின் கொதிப்பு தாங்கமுடியாமல் கறுத்துக் கிடைக்கும் தோள்களும் முதுகும் பட்டுத் தெறிக்கும் வெயிலின் கொதிப்பால் பிளந்தொழுகும் பச்சை ரத்தத்தின் இளம் சூட்டோடு பாலைவனத்தில் சூம்பிப் படுத்துக் கிடந்ததைப் போன்று.. சூரியனின் ஒத்தை வெளிச்சக் கீற்றும் நுழையமுடியாத அத்துவானக் காட்டிற்குள், ஆறடி உயரத்தில் எழும்பி கூரிய பற்கள் தெரிய, பிளந்த நாக்குகளை விளாசி வெளியே தள்ளும் தங்க நிறத்திலான பாம்புகளின் கும்பல் சூழ, கால்கள் இரண்டிலும் குதிகால் நரம்பு உருவி வெளியே வீசியது போன்ற மனநிலை தொடர்ந்து எனக்குள் நிகழ்ந்து கொண்டே இருந்தது.. இயலாமையில் நின்றிருந்த எனது நிலையை அறிந்த தோழமைகளும் நண்பர்களும் தோள்கொடுத்து இழுத்து நிறுத்த கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு கருணாவின் நினைவுகளையே எனக்குள் இருப்பாக்கி எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளியே வர எத்தனித்தேன்.. அந்த எத்தனிப்பை தில்லையின் “விடாய்” சாத்தியமாக்கியது தோழர் சிராஜ் வழியாக என் கைகளில் வந்தது.
தில்லைக்கும் சிராஜூக்கும்
அன்பும் நன்றிகளும்.

ஒரு எழுத்தும் படைப்பும் வாசிப்பவர்களின் மனநிலையை சமன் குலைக்க செய்ய வேண்டும்.. அது அவருக்குள் பட்டாம் பூச்சிகளை பறக்கச் செய்யும், காட்டுப் பூக்களின் வாசத்தை உணரச் செய்யும், கம்பளிப்பூச்சி ஊர்தலில் உடலை கூசச் செய்யும். மனசுக்குள் பல நிறங்களிலான கனவுகளை தூவிச் செல்லும், தனிமைக்குள் அவனை இழுத்து பூட்டி வைக்கும், மானுட உயிர்கள் சூழ்ந்து நிற்கும் கூட்டத்திற்குள் தள்ளிக்கொண்டு அவனை கும்மாளமிடச் செய்யும், அவனுக்குள் வெடித்துச் சிதறும் எரிமலைகளை நட்டு வைக்கும்.. துயரம், மகிழ்ச்சி, ரௌத்திரம், துரோகம், பகடி, ஏக்கம், காதல், இப்படி அனைத்தையும் உள்ளடக்கிய அதன் உச்சத்திற்கு கொண்டு சென்று நவரச உணர்வுகள் அத்தனையும் வினாடிக்கு வினாடி ஏற்ற இறக்கங்களை அவனுக்குள் விடாது நிகழ்த்திக் கொண்டே குதியாட்டம் போடும்.. சுற்றி சுழன்று கொண்டே இருக்கும்.. எழுத்துக்களின் சூட்சமம் இதுதான்.

ஒருவேளை இப்படியான படைப்புகளையும் எழுத்துக்களையும் அறிவுசார் தளத்திலிருந்து அதை ஆய்வுக்கு உட்படுத்தக் கூடிய ஆராய்ச்சியாளர்கள் அந்த எழுத்துக்களில் இருக்கும் சொற்கட்டுமானத்தையும் படிமங்களையும் கொண்டாடியும் எடுத்து வீசியும் நிகழ்த்தலாம்.. கவிதைக்கு என்று அவர் கற்று வைத்திருக்கும் இலக்கணம் முழுவதையும் அளவுகோலாக நிறுத்தி தன்னையே ஒரு கவிதைக்கான அத்தாரிட்டி என்ற நினைப்போடு கவிதைகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி தனக்கான தராசில் எடை போட்டுப் பார்ப்பார். இப்படிப்பட்ட மருத்துவர்களை விட , ஒரு எழுத்து அது இருக்கும் படைப்பு வாசிப்பவனை எந்த எல்லைக்கு கொண்டு செல்கிறது, அவன் அந்த எழுத்துக்களில் எந்த இடத்தில் எல்லாம் அவனை கண்டிருக்கிறான், சக மனிதர்களை பார்க்கிறான், அவர்களின் துன்பங்களை அவனாக உணர்கிறான் , அவர்களின் மகிழ்ச்சியில் அவனும் கூத்தடிக்கலாம். அப்படிப்பட்ட மனநிலையில் எனை இருத்தி உணர்ச்சி ததும்பும் அந்த மனிதனாக அவனின் உணர்வில் நின்றே அனைத்து படைப்புகளை பார்க்கவே நான் விரும்புகிறேன். அதனையே என் மனது ருசிக்கிறது.

அப்படித்தான் கவிஞர் தில்லையின் விரல் வழியாக வெளியே தெறித்து வந்திருக்கும் அவரின் பெரும் துயரங்களையும், இயலாமைகளையும், ஆண் திமிரின் உச்சங்களையும், கொடுமைகளை எதிர்த்து நிற்கும் கோபத்தின் தாண்டவத்தையும், அவருக்குள் இருக்கும் வாசம் மிகுந்த அன்பின், காதலின் ஏக்கங்களையும், அவரின் மண் சார்ந்து, அந்த மக்கள் பட்ட பெரும் துன்பங்களையும் வலிகளையும் வேதனைகளையும் “விடாய்” வழியாக வாசிக்கிறேன்..பார்க்கிறேன்.. உணர்கிறேன்.விடாய் 48 வலிமிகுந்த உயிர்க் கவிதைகளை கொண்டிருக்கிறது.. 48 கவிதைகளுக்குள்ளும் ஆங்காங்கே கன்னி வெடிகளை புதைத்து வைத்திருப்பார் கவிஞர்.. கவனமாக பயணித்து அந்த கன்னி வெடிகளைத் தேடி, அதன்மேல் நிச்சயம் நாம் கால்களை மனமுவந்து பதிக்க வேண்டும்.. அப்படி பதிக்கும் பொழுது நம்முடைய இருதயம் வெடித்துச் சிதறும்.. அந்தச் சிதறலில், தில்லையின் ஏக்கங்களை அவரின் தாகங்களை அவருக்குள் கொதிநிலையில் இருக்கும் ரத்ததின் தகிப்பை உணர முடியும் நம்மால்.

வலுவான கைகளும் திடமான தோள்களும் உருண்டு திரண்ட தொடை கொண்ட கால்களும் இருந்தால் மட்டும் மனிதர்கள் எல்லோராலும் நீச்சல் அடிக்க முடியாது. நீச்சல் அடிப்பது என்பது தைரியம் மிகுந்த ஒரு திறமை. அப்படி நீச்சல் அடிப்பவர்கள் எல்லோராலும் எதிர்நீச்சல் அடிக்க முடியாது. எதிர் நீச்சல் அடிப்பதென்பது ஆற்றின் போக்கிற்கு எதிராக லாவகமாக நீந்தி குறியாக எதிர்ப்புறத்தை அடைவதென்பது குயுக்தி மிகுந்தது.. அப்படி சக்தியாக ஒரு எதிர் நீச்சலை தன்னுடைய வாழ்நாளின் தொடக்கம் முதலே போடத் தொடங்கியிருக்கிறார் தில்லை.. தில்லையின் வலுவான, தைரியமான, பேய்த்தனமான எதிர்நீச்சலை நீங்கள் அவரின் கவிதைகள் முழுவதிலும் பார்க்கலாம். குடும்ப உறவுகள் இல்லாமையால் அவரை துரத்தி வந்த துயரங்கள்.. எதிர்கொண்ட மனிதர்களின் ஆசுவாசத்தின் பேரில் நடைபெற்ற துரோகங்கள்.. அவர் சந்தித்த ஆண்களின் கயமைத்தனம்.. அபயம் தேடி அலையும் பெண்களின் சதையை ருசி பார்க்கத் துடிக்கும் வல்லூறுகளாகவே.

“நான் ஒரு பறவை”
இதில் தான் எத்தனை அழகாக கவிஞர் மாம்பழக் குருவியாக மாறி வானில் தன் திசை எங்கும் சிறகடிக்க.. பறந்த..மகிழ்ந்த மாம்பழக் குருவி மீண்டும் கூடு அடைய முடியாமல் தவிக்கும் தவிப்பை நம்மை வலியோடு உணரச் செய்வார்.

“புறத்தலைதல்”

வறண்ட பாலைவனமதில் காலம் தப்பி சுரந்த ஈரப் பிசுபிசுப்பின் ஊடாக முளைத்தெழும் காளான்ங்களாக நினைவுகள் கிளம்பினாலும், ஆணலைக்கு அடங்க மறுக்கும் பெண்ணலையாக சுமக்க முடியாத தாகத்துடன் கவிஞர் நேர்கொண்டு எழுந்து நிற்கிறார் ஆண் திமிரின் துரோகத்துக்கு எதிராக..

படைப்பின் பிதாமகனாக இருக்கும் பிரம்மாவை தன்னிடம் பிச்சை எடுக்க வைத்து, படைப்பு என்பது என்ன சதையும் பிண்டமுமா..? விந்தும் சுக்கிலமுமா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார் தன்னுடைய “உடலி” கவிதையில்..
கவிதையில் ஆண்களுக்குள் விரவிக்கிடக்கும் பொய் மிகுந்த நிஜமான அன்பற்ற காதலினை போட்டு உடைப்பார்..

“என் கால் மிதிகையில்
நசுங்குண்ட காற்று
வார்வக்கட்டின் அடியில்
பயந்தொழிந்து
நேற்று புலம்பி
என்னிடம் மண்டியிட்டது” என்கிற வார்த்தைகளுக்குள் கவிஞரின் என்றும் அடங்காத திமிர் ஓங்கி நிற்கிறது. தாய்மண்ணின் சுட்டு விரலில் இருந்து மீதெழுந்திருக்கும் ஒற்றைச் சன்னமாக “திமிரு” கவிதையில்.

அம்மாவுக்கு அவர் எழுதிய கவிதையில் வலி கொண்ட எண்ணங்களை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருப்பார். தனக்கும் அம்மாவுக்குமானே இடைவெளியை பாழும் கிணற்றில் தேடி.. அவர் இல்லாத பொழுதினில் பட்ட பாடுகளை சொல்லி உன்னைப்போல கையாலாகாத பெண்களை “நான் வெறுக்கிறேன்.. ஆனாலும் கூட உனக்கு ஏற்பட்ட நிலைக்கு எதிராக வெற்றி கண்டு இந்தப் பாழும் கிணற்றில் இன்னொரு பெண் உயிர் போகக் கூடாதென” கிணற்றுக் கரையில் காத்து நிற்பார் கைகளில் நீசத்தனத்தின் உயிர் எடுக்கும் கருவிகள் ஏந்தி தனது “எனக்கம்மா’ கவிதையில்.

“தாழம் பூ போட்ட மஞ்சள் கூறை என் மேனியில் ஏறாமல் இன்னும் இருக்கிறது..
.. காற்றோடு காற்றாய் கரைந்த நாளொன்றில் ஏடகத்தில் அடைகாத்த
என் உயிரை சும்மாடு சுத்தி புழுதி மூடுண்ட மணலில் இறங்கி நான் நடக்கையில் காகங்கள் என் மண்டையைக் கொத்தி இரத்தம் புசிக்க என் கால்கள் கண்ணாக்காட்டை கடந்தன” என்று வரிகளை வாசித்து முடிக்கும் பொழுது உங்களின் உச்சந்தலைதனை கைவிரலால் தடவிப் பாருங்கள் கட்டிப்போன ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர முடியும் உங்களால் “சாணக்கூறை” கவிதையில். தில்லையின் வாழ்வதனை மொத்தமாக சொல்லியிருப்பார் தனது “சாணக்கூறை”யில்.

“மின்னொளி”
மரணத்தின் முற்றத்தில் வந்து,
மீட்டு உயிர் அளித்த மின்னொளிக்கும் தனக்குமான ஈர்ப்பினை இக்கவிதையில் மூச்சிரைக்க ஓடிவரும் வேகத்தோடு சொல்லியிருப்பார் தில்லை.
அப்படியான மின்னொளி எப்படி அருச்சுனனிடம் அபயம் கேட்டு தஞ்சம் புகுந்தபோது எதிரியாய் போனது என்பதினை.. தஞ்சமடைந்த பூப்படையாத பெண் குழந்தைளிடம் ஆண்களின் அத்தனை விரல்களும் விந்து ஒழுகும் குறியாய் புடைக்க பட்ட அவமானங்களையும் அவஸ்தைகளையும், உயிர் உருவி எடுத்த கொடூரங்களையும் தனது எழுத்துக்குள் கடத்தி தகித்துக் கொண்டிருக்கும் நிலத்தினை அழித்துவிட சொல்லி அதே மின்னொளிக்கு ஆணையிடுவார் கவிஞர்.“எச்சிலில் உயிர்க்கும் போடி”
துப்பாக்கி தோட்டா ஒன்றில் செத்துப்போன போடி இன்று எப்படி ஒவ்வொருவர் வீட்டிலும் கக்கத்தில் சாராயத்தை வைத்துக்கொண்டு உயிர்க்கிறான் என்பதை உடல் நசுங்கிய பெண்களின் வலியில் இருந்து பேசி இருப்பார் தில்லை.

தேசம் எதுவாக இருந்தாலும் போர் என்று வந்துவிட்டால் பாதிக்கப்படுவது, விரட்டியடிக்க படுவது, வீசியாடிக்கப்படுவது என்னவோ முதலில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே.. பிறந்து வாழ்ந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக பிய்த்து எறியப்பட்ட தில்லையும் பாலஸ்தீனத்திலிருந்து வீசப்பட்ட பெண்களும் சந்தித்துக் கொண்ட பொழுது ஒருவர் கண்களில் ஒருவரை பார்த்துக்கொள்கிறார்கள் வாழ்விலும் மரணத்திலும் என்பதை “கருப்புச் சரித்திரம்” கவிதையில் ஒட்ட ஒட்ட வெட்டப்பட்ட புன்னகையின் வழியாக வலிகளாக்கியிருப்பார் கவிஞர் வாசிப்பவருக்குள்.

தில்லையின் கருவறைக்குள்தான் எததனை எத்தனைச் சொற்கள் கிடக்கிறதோ..! கவிதையை வாசிக்கும் பொழுது அச்சமும் தலைகுனிவுமே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஏற்படும். ஏற்படவேண்டும். பெண்கள் பேசுவதையே பெருமை என.. தங்களின் பெருந்தன்மையான பிச்சை என நினைக்கும் இச்சமூகத்தில் ஆண்கள் பேச மறுக்கும் சொற்கள் நிறைய சேமித்து அள்ளி வைத்திருக்கிறேன் எனது கருவறைக்குள் என்கிறார் கவிஞர். அந்த சொற்களுக்குள் இருக்கக்கூடிய துரோகமும், கயமையும், வஞ்சகமும் பேசப்படவிருக்கிறது வருங்காலத்தில் என்னால் என்பதை அறிவிப்பு செய்கிறார் கவிஞர் “உயிர்ப்பித்தெழும் உணர்வுகள்” என்கிற கவிதையில். பேச மறுக்கும் ஆண்கள் ஜாக்கிரதை.

“குருதியின் நிறமுடையது விடுதலை” என்கிற கவிதையில், தாய் மண்ணை மீட்பதற்காகவும் சிறைபட்ட தம் உறவுகளை மீட்டெடுக்கவும் அவனுக்காக காத்திருக்கிறாள் தன்னந்தனியாக காற்றில் நடை போட்டுக்கொண்டு.. அவன் வருவான் என்கிற நம்பிக்கையை நெஞ்சம் முழுவதிலும் சுமந்தபடி.

தேசாந்திரியாக இருப்பது ஒரு பெரும் துயரம். அந்த பெரும் துயரத்தை ஒரு பெண் எதிர் கொண்டால் என்னவெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும், மிதிபட வேண்டியிருக்கும்.. தங்களின் சதைத் தேவைக்கு தீனியாக பெண்களை மாற்றிக்கொள்ளும் வஞ்சகம் மிகுந்தவர்கள் ஆண்கள் என்பதினை தன்னுடைய “ஒரு துயரத்தின் இன்னும் ஒரு கோடு” கவிதையில் வெடிப்புறப் பேசியிருப்பார் மதிப்புறு வார்த்தைகளால் தில்லை.

இப்படி தில்லையின் கவிதைகளை பேசிக்கொண்டே அழுது தீர்க்கலாம்.. கவிதைக்குள் இருக்கும் கோபத்தின் உச்சத்திற்கு நாமும் போகலாம்.. அன்பின் ஏக்கம் நம்மையும் உருக்கலாம்.. ஏமாற்றத்தின் வஞ்சத்தில் நம் உடலும் வேகலாம்.. துளி நீர் வேண்டி தாகம் எடுத்த பறவையாய் நாமும் சிறகடித்து அலையலாம்.. இப்படி எல்லாவிதமான மாற்றங்களையும் நமக்குள்ளே நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது வாசித்த பிறகும் தில்லையின் கவிதைகள்..

சிறுகதைத் தொகுப்பிற்குள்ளோ.. கவிதைத் தொகுப்பிற்குள்ளோ ஏதேனும் ஒரு சில படைப்புகளே வாசிப்பவரின் நெஞ்சை உலுக்கிப் போகும் அவருக்குள் பரவசத்தை நிகழ்த்தும்.. ஆனால் ஒரு தொகுப்பே அப்படியானதொரு மனக்கிளர்ச்சியை, மனவெழுச்சியை ஏற்படுத்திவிட முடியாது. ஆனால் இந்த விடாய் வாசிப்பு, வாசிப்பவருக்குள் அவருடைய அமைதியை சமன் குலைக்கிறது. அவரை தூங்கவிடாமல் அலைக்கழிக்கிறது. அவரின் இருதயத்திற்குள் நுழைந்து ஒரு ஊழித் தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.இப்படியான ஒரு முதல் தொகுப்பை கொண்டு வந்திட தில்லையால் எப்படி சாத்தியமாயிற்று..?! அதனை சாத்தியப்படுத்தி இருப்பது அவரின் சொந்த அனுபவங்கள் .. அவர் தவழ்ந்து, முட்டி போட்டு, எழுந்து நின்று, நடந்து ,விழுந்து , விழுந்தெழுந்தோடி கால் பதிந்த நிலமெங்கிலும் பூமியை பிளந்தெழுந்து ரத்தம் சுவைத்த மனித எலும்புகளின் உடைந்த கூர் முனையும்.. உடல் தசைகளை வலு கொண்ட மட்டும் கிழித்தெறிந்த முள் படர்ந்த காட்டு மரங்களும் கொடிகளும்.. அரவணைப்பின் பெயரால் உள்ளங்கைகளிலும் முள்ளம் பன்றிகளை வளர்த்து வைத்துக்கொண்டிருந்த கரங்களின் தழுவல்களில் இருந்து நினமொழுக வெடித்துத் தெறித்துக் கிளம்பிய தீரமும் மட்டுமே இப்படியான கவிதைகளுக்கு வார்த்தைகளை கொடுத்திருக்கிறது.

சிறுவயது முதலே இயற்கையோடு நேசிப்பை வளர்த்துக்கொண்ட தில்லை பல ஏக்கங்களோடும் தாகங்களோடும் இன்று தனது இருப்பை உலக்குக்கு திமிர் கொண்டு அறிவித்து இருக்கிறார். அடங்க மறுக்கும் நேர் பார்க்கும் ராங்கியாக.. பேரன்பு கொண்ட மனிதர்களுக்காய் அலைந்து கொண்டே இருக்கும் பெரும் பிசாசாக.. சிறகின் நரம்பு புடைக்க வட்டமிட்டுக் கொண்டே தன் கூடினைத் தேடும் தூக்கணாங்குருவியாக தில்லை..
உங்களின் கூடினை விரைந்து கண்டடைவீர் அன்பும் வாழ்த்துக்களும் கவிஞர் தில்லை
அவர்களே.

“விடாய்” கொண்டாடப்பட வேண்டிய தொகுப்பு.

வலி கொடுக்கும் அழகானதொரு அட்டைப்படத்தை காத்திரம் மிக்கதாக வடிவமைத்த ஓவியர் றஷ்மி அவர்களுக்கும், புத்தகத்தை சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்திருக்கும் தாயதி பதிப்பகத்திற்கும், நூலினை அழகிய முறையில் வடிவமைத்திருக்கும் ஜீவ மணி அவர்களுக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்..

No description available.

கருப்பு அன்பரசன்