அஞ்சலி : உமா மோகன் (Uma Mohan) - எஸ் வி வேணுகோபாலன் - Poet Umamohan Anjali - SV Venugopalan - https://bookday.in/

அஞ்சலி: உமா மோகன் – எஸ் வி வேணுகோபாலன்

அஞ்சலி: உமா மோகன் – எஸ் வி வேணுகோபாலன்

அன்பின் தோழமைக் குரலை எங்கே கேட்க, இனி

பிப்ரவரி 20, 2022 அன்று சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் கவிஞர் நா வே அருள் நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் அவருடைய சித்தப்பா, சித்தி இருவரையும் மேடைக்கு அழைத்து அய்யா நல்லகண்ணு அவர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள அறிவிப்பு செய்யப்படுகிறது. பார்வையாளர்களது நான்காம் வரிசையில் இருந்து ஒரு குரல் எழுகிறது, அந்தப் பெரியவர்கள் இருவரது பெயரையும் குறிப்பிடுங்கள் என்று….

ஆஹா…. எஸ்விவி வந்துவிட்டாரா, வணக்கம் தோழர்…இதோ உறவினர்களது பெயரை அருள் அறிவிப்பார் என்று மேடையில் இருந்தபடியே அந்தக் குரல் என்னிடமிருந்து வந்தது என்று கண்டுபிடித்த உற்சாகத்தோடு மென்புன்னகை செய்கிறார் நிகழ்வின் தொகுப்பாளினி …. அது தான் கவிஞர் உமா மோகன்!

அன்பின் பெரும் உருவகம் அவர். கவிஞராக, கட்டுரையாளராக, நூலாசிரியராகச் சிறப்பான எழுத்தை எழுதிக் கொண்டே இருந்தவர் மட்டுமல்ல, தனது நேய வட்டத்தை விரிவாக்கம் செய்துகொண்டே அதில் களிப்புற்று இருந்தவர். மின்னஞ்சலில் மீன் பிடித்த காலம் தொட்டுப் பிறகு முக நூல் சூடு பிடித்தபோது எண்ணற்ற அன்பர்களைத் தனது அகநூலில் பதிவிட்டுக் கொண்டே இருந்தவர்.

ஜனவரி 5 அன்று நள்ளிரவைக் கடந்த நேரத்தில் அவர் மறைந்தார் என்ற துயரச் செய்தியை மறுநாள் விடியற்காலை என்னை அழைத்துச் சொல்ல முடியாது கேவிக் கேவித் திணறிய பாண்டிச்சேரி ராம்கோபால் (கோபி) தான், உமா மோகனை எனக்கு அறிமுகம் செய்வித்தவர்.

மின்னஞ்சல் எடுத்துப் பார்க்கையில் ஆகஸ்ட் 2, 2011இல் தான் அவரை முதன்முதல் அறியவந்திருந்தேன் என்பது தெரிந்தது. கோபி அனுப்பிய மெயிலில் உமா மோகன் எனும் கவிஞரை நீங்கள் வாசிக்க வேண்டும், அவரது வலைப்பூவை இணைத்துள்ளேன் என்று போட்டிருக்கிறார். அதற்குமுன்பாக அவர் என்னை அழைத்துப் பேசியதும், கவிதையை அனுப்புங்கள் என்று நான் கேட்டுக் கொள்ளவே அந்த மின்னஞ்சல் வந்ததும் இப்போதும் நினைவில் இருக்கிறது.

நதியும் நிலவும்

நதியோடு
நகர்ந்து செல்கிறது நிலா !
சிலநாள் துண்டாக ….
சிலநாள் பந்தாக …
நீர்
கொள்ளவுமில்லை ….
தள்ளவுமில்லை …
நிலவைக் கொண்டாடினோம் …
நிலவோடே
வாழ்ந்தோம் …
நிலாச்சுவை மறந்த உலகில்
‘ஓடி வா’ பாட ஒருவருமில்லை ……
சப்பி எறிந்த மாங்கொட்டை போல்
நிலா மேகப்புழுதியில் ……

கவிதை வாசித்த இரவே உமா மோகன் அவர்களை அழைத்தவுடன், எஸ்விவி தோழரா….கோபி தோழர் உங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார், அலுவலகத்தில் பார்க்கையில் கவிதையை அனுப்பி இருக்கிறேன் என்றும் சொன்னார் என்று உற்சாகமாகத் தொடங்கினார் ! தோழர்….தோழர்…ஒவ்வொரு வாக்கியத்திலும் எத்தனை எத்தனை தோழர்….. எப்போது பேசும்போதும் தோழர் என்ற சொல் மிகுந்த உரையாடல் அவரது.

பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழில் எழுதி வந்த படித்ததும் கேட்டதும் என்ற எனது பத்திகளில் செப்டம்பர் 2011 இதழில் உமா மோகன் கவிதை ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

வலைப்பூவில் நிறைய மனிதர்கள் கலக்குகிறார்கள்…அண்மையில் புதுவை தோழர் ராம்கோபால் இதைப் படியுங்களேன் என்று அனுப்பியிருந்த கவிதையை எழுதியிருந்தவர் பாண்டிச்சேரி உமா மோகன். அசந்து போய் மேற்கொண்டு வாசிக்கக் கேட்டபோது அவரது வலைப்பூ முகவரி கிடைத்தது:

அதில் சென்று பார்க்கப் போனால் அதற்குள் அடுத்த கவிதைகள் இரண்டை (இப்போது அதற்கு மேலும்..) அவர் எழுதி விட்டிருந்தார்…அந்த வேகமும், தாகமும், மொழி ஆளுமையும், ரசனையும் மிகவும் ஈர்த்தது. அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக இருக்கும் உமா எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி தன்னடக்கத்தோடு பாராட்டுதல்களை ஏற்றுக் கொண்டார்.

வலைப்பூவில் என்னை பாதித்த அந்தக் கவிதை உங்கள் வாசிப்புக்கும்:

குற்றவியல் பிரிவு

மாட்டி வைத்த கொசுவத்தி
நகர்த்திய நாற்காலி
ஓட்ட நகர்த்திய தரை துடைப்பான்
வேகநடை போட்ட வீட்டுச்செருப்பு
எதனாலும்
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மரணம் …
வண்ணம் மினுங்கிய
குட்டிப்
பட்டாம் பூச்சியைக்
குறுகுறுபபின்றி
எடுத்தெறிந்தது …
இந்த
ஒற்றை விரல்தான்!

அந்த ஆகஸ்ட் மாதமே ஆனந்த விகடன் சொல் வனத்திற்கும், செம்மலர் இதழுக்கும் கவிதைகள் அனுப்பக் கேட்டுக் கொண்டேன், அவ்வளவு எல்லாம் இல்லை தோழர்….இன்னும் எழுதி வரட்டும் என்று அவர் சொல்லவும், அவரது பெயர், அலைபேசி எண், முகவரி இணைத்து இரண்டு இதழ்களுக்கும் நானே அனுப்பிப் பெரிதும் மகிழ்ந்து கொண்டேன். அது எத்தனை சிறுபிள்ளைத் தனம் ….. கால ஓட்டத்தில் அவராக எத்தனை எத்தனை கவிதைகள் விகடன் சொல்வனத்திலும், செம்மலரிலும், வேறு இதழ்களிலும், முக நூலில் நினைத்த போதெல்லாமும் எழுதி மலைக்க வைத்தார். பாரதி புத்தகாலயம் கொரோனா காலத்தில் தொடங்கிவைத்த புக் டே இணைய தளத்திலும் ! ஆனால், நான் தான் அவரை மேலும் மேலும் எழுதவும் இதழ்களுக்கு அனுப்பவும் உத்வேகம் தந்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். 2011இல் அவரது ஒரு மெயில் இப்படி வந்திருந்தது:

அன்பின் தோழர், வணக்கம்.நலமா?இத்துடன் இணைத்துள்ள கவிதையொன்றை விகடனுக்கு அனுப்பலாமா?ஆமென்றால் நீங்களே அனுப்பினாலும் மகிழ்ச்சியே. (நீங்கள் அனுப்பிய ஒன்று மட்டுமே விகடனில் இடம் பிடித்தது)இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நம் வலைப்பூ என்ற வந்ததெல்லாம் கொள்ளும் மகாராசன் கப்பல்!!
தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டாம்!
நன்றி,
உமா மோகன்.

கவிதைகளை மேம்போக்காகப் பாராட்டியோ நிராகரித்தோ சொல்லாமல், கவிதை இயங்கும் தன்மை, சொற்களின் சிறப்பு எல்லாம் குறிப்பிட்டுப் பேசுவதை அவர் உற்றுக் கேட்பார். விமர்சனம் சொன்னாலும் கோணாமல் செவிமடுப்பார்.

எளிய மக்கள், அண்டை அயலில் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் அவரது பாடுபொருளாக இடம் பிடித்திருப்பார்கள். யாரது வலியை அவர் பேசுகிறாரோ, அந்த வலியை உணர்த்திவிடும் அவரது சொற்கள். இயற்கை கொண்டாடி அவர். குழந்தைச் செல்லங்கள் கொஞ்சுவார்கள் கவிதையில். பெண்ணுக்கான இடமெங்கே என்கிற சமூகத்தின் மீதான விமர்சனத்தை வெவ்வேறு வடிவங்களில் அவரது கவிதைகள் சொல்லிக் கொண்டிருக்கும். லதாம்மாவின் மரணம் என்ற அவரது கவிதையில், பா.தனபால் குடும்பத்தினர் என்ற வார்த்தைகளில் அடங்கிவிடும் லதாம்மா பெயர் என்ற அவரது வரி எத்தனையோ பேசும். கயவர்களின் அராஜக பாலியல் வக்கிரங்களுக்கு இரையான பெண்கள், குழந்தைகளைப் பற்றிய அவரது கவிதைகள் சாட்டையடியாகத் தெறிக்கும். தோழிகளைப் பற்றி, பள்ளிக்கூட வாழ்க்கை பற்றி, உறவுகளைப் பற்றியெல்லாம் அவரது கவிதைகள் நெருக்கமாக உள்ளத்தைத் தொடும். ராசிபலன் குறித்த அவரது கவிதையில் ஒரு வரி,

அன்றாடம் சேனல்தோறும்
ராசிபலன் கேட்டு முடிந்தபின்
வியக்கிறாள் அம்மா
ஒரே அளவாய்ப்பிடிக்க வராத ரவா லட்டுக்காகத்
தன்னை ஏசும் மாமியார்
ஆளுக்கொன்றாய் நாளை உருட்டும் சோதிடர்களை
ஒன்றுமே சொல்வதில்லையே என

கவிதைத் தொகுப்புகள் கொண்டுவரும்போது ஒவ்வொரு முறையும் ஐந்தாறு தலைப்புகள் அனுப்பி இதில் எதை வைக்கலாம் என்று கேட்பார், உடனே அதற்குப் பதில் போட்டதும், எத்தனை விரைவு என்று கொண்டாடுவார், தான் யோசித்து வைத்திருந்ததும் இந்தத் தலைப்பு தான் என்பார் பல நேரம். அன்பின் பெரும் உருவகம் அவர். மிகக் குறுகிய காலத்தில் பெரிய நட்பு வட்டம் அவருக்கு வாய்த்ததில் வியப்பில்லை. அவரது வெயில் புராணம் எனும் பயணக்கட்டுரைகள் தொகுப்பை முன் வைத்து தி இந்து ஆங்கில ஏடு சிறப்பாக எழுதி இருந்தது.

அவரது அன்பு இணையர் உமாவின் படைப்புலகிற்கான மிகப் பெரிய உந்துவிசை. புதுவையில் முதலாக அவரது புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்தபோது நேர்பட உணர்ந்தோம் எல்லோரும். வானொலி நிலைய அறிவிப்பாளராகப் பணியில் இருந்த உமா அவர்களது குரல் தான், புதுவையில் காவல் துறை போக்குவரத்து ஒழுங்கமைக்க அன்றாடம் ஒலிபரப்பும் என்று ஒரு முறை கோபி சொல்லி இருந்தார். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் உள்ளூர் மக்கள் திரளாகக் கலந்து கொண்டிருக்க, விடாப்பிடியாக வருகை தந்தோரை நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் உமாவின் இணையர் இரவு உணவுக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றது, அங்கு உரையாடிக் களித்தது மறக்க முடியாதது.

இப்போது அழைத்ததுபோலவே கோபி சில ஆண்டுகளுக்குமுன் பதட்டத்தோடு அழைத்து, உமா தோழர் ஹஸ்பெண்ட் சிகிச்சைக்கு அப்போலோ வந்திருந்தார், தெரியுமா உங்களுக்கு என்று தொடங்கியவர், அடுத்த நிமிடம் குரலுடைந்து, காப்பாத்த முடியல தோழர்….அவர் இறந்துட்டாரு தோழர் என்று கதறினார். உடனே புதுவைக்கு எடுத்துட்டு வந்துருவாங்க, உங்களால் உமா தோழரைப் போய்ப் பார்த்து அங்கே ஆறுதலா இருக்க முடியுமா என்று கேட்டார். வங்கி அலுவலகத்தில் இருந்து உடனே கிரீம்ஸ் சாலை அப்போலோ சென்று நேரே கீழே ஆம்புலன்ஸ் பிரிவில் பாண்டிச்சேரிக்கு புக் ஆகி இருக்கிறதா என்று கேட்டேன், ஆமாங்க, இன்னும் வார்டுல இருந்து கொண்டு வரல, உடனே போனீங்கன்னா பார்த்துறலாம் என்று பதில் வந்தது. வார்டு தகவலும் அந்த நல்லுள்ளத்திடம் பெற்றுக் கொண்டு மேலே செல்கையில் வார்டிலிருந்து ஸ்ட்ரெச்சர் வெளியே வந்து கொண்டிருக்க, உறைந்து போன முகத்தோடு உமா உடன் நடந்து வந்து கொண்டிருந்தார்….சட்டென்று உடைந்து அழுதபடியே, உங்களுக்கு எப்படி தகவல் தெரியும், கோபி சொன்னாரா என்றார்.

அந்த மாலை நேரம் விவரிக்க முடியாத துயரப் பெருங்கடல். ஆம்புலன்ஸ் புறப்பட்டுப் போனபிறகு வெறுத்தும் கனத்தும் போயிருந்தது மனம்.

பிறகு மெல்ல மெல்ல எழுத்தைக் கொண்டே தனது துயர நதியைக் கடந்து வந்து கொண்டிருந்தார் உமா. கொரோனா காலத்தில் என்று நினைவு, மிகுந்த உடல் நலக்குறைவுக்கு ஆளாகி விட்டிருந்தார். புதுவை தமுஎகச தோழர்கள், இயக்கத் தோழர்கள் எப்போதும் போல் அவருக்கு உதவிட மீண்டு வந்தார். எழுத்துகள் இன்னும் பெருகின. கட்டுரைகளில், குறிப்பாக வீர மகளிர் வரிசையில் தமிழில் அதிகம் பேசப்படாத ஆளுமைகளை அவரது மொழியில் தொடுக்க அமர்ந்தார்…அற்புதமாகத் தொடுத்தும் வழங்கினார்.

அவரது கவிதை வந்தால், யார் முதலில் வாட்ஸ் அப்பில் அந்தப் பக்கத்தை பரஸ்பரம் அனுப்புவது என்று ஒரு சமயம் போட்டியே நடக்கும். வாரம் தவறாமல் வியாழன் அன்று விகடன் கைக்கு வந்ததும் சொல்வனம் புரட்டி உமா மோகன் கவிதை வந்திருக்கிறதா என்று இனியும் கூடக் கண்கள் தேடும் என்று தான் தோன்றுகிறது. சக படைப்பாளிகள் பலரோடும் அவரது தோழமை மிகவும் இனிமையானது. அடுத்தவரைக் கொண்டாடுதல் அவருக்கு மிகவும் உவப்பானது.

அவரது மகன் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றபோது தோழர் ராஜியும் நானும் சென்ற இடத்தில், “வேர்கள்” நளினி அலைபேசியில் அழைத்து, காத்திருக்கவும், நான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார். உங்களுக்கு எப்படி உமாவைத் தெரியும் என்றால், முக நூல் நண்பர்கள் என்றார். நாங்கள் வருவோம் என்பதையும் அறிந்திருந்தார். அது தான் உமா மோகனின் அபார நேய வட்டம்.

அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசுவதற்கு புதுவை சென்றிருந்த போது அருமையான டர்க்கி டவல் உள்ளிட்டுச் சில பொருள்களை ஒரு கைப்பையில் கொடுத்திருந்தார். கோபி மெல்ல என்னிடம் பயணச் செலவுக்கு என்று பணத்தைக் கொடுக்க வந்தபோது நான் கடுமையாக மறுத்தேன், பாண்டிச்சேரிக்கு வந்து போக இரண்டாயிரமா ஆகும், அவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்றேன். கோபி பொறுமையாகச் சொன்னார், எஸ்விவி மறுப்பார், தகராறு செய்வார், எனக்காக இத்தனை தொலைவு வந்து போகிறார், புத்தகங்கள் வாங்கிக் கொள்ள என்று சொல்லிவிடுங்கள் என்று உமா சொல்லிட்டாங்க.., வாதம் செய்யாதீர்கள் தோழர், அப்செட் ஆயிருவாங்க என்று முடித்துவிட்டார்.

அன்று இரவு ஓட்டலில் எல்லோருக்கும் இரவு உணவு, உமாவின் அன்பு இணையர் ஏற்பாடு செய்திருக்க, கோபி, நானும் சென்னைக்குத் தான் வரணும், இரவு என் வீட்டில் தங்கிவிட்டு விடியலில் எழுந்து பேருந்து பிடிப்போம், இப்போது புறப்பட்டால் அகாலத்தில் போய்ச் சேருவோம் என்றார். அவரது குடும்பத்தினர் விடுமுறைக்கு காரைக்கால் போயிருந்தனர். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கொஞ்சம் தூக்கம் போட்டுவிட்டு, அதிகாலை 3.30 மணி போல் எழுந்து பேருந்து நிலையத்தை அடைந்தோம். பாயிண்ட் டு பாயிண்ட் பேருந்து காத்திருந்தது. அதிகக் கூட்டமில்லை. நினைவோடு எடுத்து வந்திருந்த உமா கொடுத்த பரிசுப்பையை அருகே வைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தோம். வண்டியின் ஆட்டத்தில் காலடியில் விழுந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பெட்டிகள் வைக்குமா இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டுப் பயணம் தொடர்ந்தோம். கிண்டியில் இறங்கி ரயிலில் மாம்பலம் கடக்கையில் தான் தெரிந்தது உமா அவர்கள் கொடுத்த சிறப்பு நினைவுப் பரிசுகளை மேலே வைத்த இடத்திலிருந்து எடுக்காமலே பேருந்தில் இருந்து எடுத்து விட்டோம் என்று.

கோடம்பாக்கத்தில் இறங்கி கோயம்பேடு ஓடிச் சென்று ஒன்றரை மணி நேரம் புதுவையில் இருந்து உள்ளே வந்த பேருந்தில் எல்லாம் ஏறி ஏறி தேடிப் பார்த்தேன். பேருந்து எண் குறித்திருக்கவில்லை. கண்டுபிடிக்க யாதொரு குறிப்புமில்லை. அலுவலகத்தில் சென்று வினவுகையில், உடனே திரும்பி புதுவைக்குப் போயிரும் சார் வண்டி… எதற்கும் உங்கள் மொபைல் நம்பர், முகவரி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள், பார்க்கிறோம் என்றார்கள்.

ஆசையோடு அவர் அளித்த பரிசுப்பொருள்களை மறதியினால் பறிகொடுத்த வருத்தமே எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் ஆறாதிருக்க, அற்புதமான அந்தத் தோழரையே இப்போது பறிகொடுத்துவிட்ட சோகம் எப்படி ஆறும்……..

நினைவில் வாசித்துக் கொண்டே இருப்பீர்கள், உங்கள் கவிதையை தோழர் உமா, உங்கள் குரல் புதுவை வாகனப் போக்குவரத்தை மட்டுமல்ல, வாசகர் மனங்களையும் ஒருங்கமைத்து ஒலித்துக் கொண்டே இருக்கும்!

*********

கட்டுரையாளர் :

 

அஞ்சலி : உமா மோகன் (Uma Mohan) - எஸ் வி வேணுகோபாலன் - Poet Umamohan Anjali - SV Venugopalan - https://bookday.in/

– எஸ் வி வேணுகோபாலன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *