உயிர் பிழைக்க வந்தவர்கள்
உயிரற்ற நடைபிணங்களாய்…
நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி…
இலக்கற்ற பயணத்தில்,
இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை
ஒருபோதும்…
வியர்வையின் மிச்சங்களை
சுமந்து செல்லும் தோள்களுக்கு,
பாரங்கள் கனப்பதில்லை எள்ளளவும்…
என்ன…
கால்களை விடவும் வேகமாய்
தேய்ந்து விடுகின்றன கட்டைகள்…
பின்தங்கி விடுகின்றன சோர்ந்து போகும்
பிஞ்சுக் கால்கள்…
இதற்காக
அலட்டிக் கொள்ளாதீர்கள் பெரிதாக…
வயிற்றுப் பாட்டிற்கு
எப்போதாவது கிடைத்து விடும்
மிச்ச சொச்சங்கள்,
உயிர்ப்புடன் வைத்திருக்கும் எங்களை…
உத்திரவாதப்படுத்திக் கொள்ளுங்கள்
பால் பாக்கெட்டுக்கள் இனியாவது திரியாமல் இருப்பதை…
திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…
பிரேமலதா.