தமுஎகச-வின் கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” புத்தகத்தின் முன்னுரை

தமுஎகச-வின் கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” திருச்சியில் நடந்த கல்வி உரிமை மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அதற்கு கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் எழுதிய முன்னுரை

நடுரோட்டில் கவிதையின் எதிர்ப்புக் குரல்

———————————————————————

கலை எனும் கர்ப்பக்கிரகத்துக்குள் அழகியல் ஆராதனைகளுக்கு அனுக்கிரகம் செய்தபடி பீடத்தில் அமர்ந்திருந்த கவிதை இன்று உண்மை , நேர்மை, நீதி எனும் திரிசூலம் ஏந்தி தெருவில் காவல் உலா வரத் தொடங்கி விட்டது.

குளிர்ந்த மலைக்காடுகளில் பள்ளிக்கூடங்கள் இல்லாததால் தற்குறியாகிப் போனவர்களுடன் சேர்ந்து கொண்டு கவிதை இன்றைக்கு வயலை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளைத் துரத்தி துரத்தி வேட்டையாடக் கிளம்பி விட்டது.

கல்வி பணத்தோடு கைகோர்த்துக் கொண்டதால் படிக்க முடியாமல்  போனவர்கள்  எல்லோரும் அசந்து தூங்கும் இருட்டு விலகாத அதிகாலையில் தெருக் குப்பைகளைச் சுத்தம் செய்பவர்களோடு சேர்ந்து கொண்டு கவிதையும் குப்பை அள்ளி நாட்டைச் சுத்தம் செய்கிறது..

கவிதை இன்று கல்வி மறுக்கப்பட்ட விவசாயிகளுடனும், உழைப்பாளிகளுடனும் தோள் மேல் கைகோர்த்து வட்டமாகச் சுழன்று சுழன்று ஆதிவாசி நடனம் ஆடுகிறது.

நான்காவது மாடியில் இருக்கும் தன் அறைக்குள் தனிமையில் தன் மனசுக்குள் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்த கவிதை இன்று தரைக்கு இறங்கி வந்து கண்ணில் தென்படும் மனிதர்களையெல்லாம் கை காட்டி அழைத்து ஆத்மார்த்தமாகப் பேசத் தொடங்கி விட்டது.

தனது அந்தரங்கமான ஆசைகளையும் கோபங்களையும்கூட அது பச்சையாகப் பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டது..

வாசனைத் தைலம் தெளித்த தன் ஆடம்பர உடைகளைக் கழற்றி எறிந்து, கவிதை தன் உள்ளாடைகளோடு நடுரோட்டில் நின்று உங்களிடம் நியாயம் கேட்கிறது.

நெருப்பு வார்த்தைகளைத் தின்று கொழுத்த உங்கள் முன் வந்து நின்று தன் திறந்த உடம்பின் பலம் காட்டி உங்களைத் தட்டிக் கேட்கிறது கவிதை.

இப்போது சொல்லுங்கள்

எங்கள் அடிப்படை உரிமையாகிய எங்களுக்கான கல்வியை எங்களுக்குக் கொடுப்பீர்களா மாட்டீர்களா?

மூன்றாம் வகுப்பிலேயே பரிட்சை வைத்து எங்கள் இளம் பிஞ்சுகளை முடமாக்கும் உங்கள் கல்வித் திட்டத்தை மொத்தமாகக் கைவிடப் போகிறீர்களா இல்லையா?

உயிர்போல் நாங்கள் சுவாசிக்கும் எங்கள் தாய்மொழி தமிழுக்குப் போட்டியாக இந்தி மொழிப் பாடங்களை எங்கள் மீது திணிப்பதை நிறுத்தப் போகிறீர்களா இல்லையா?

குழந்தை வளர்ச்சி மையங்களான அங்கன்வாடிகளின் நிதி குறைத்து ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றி எங்கள் குழந்தைகளைச் சீர்குலைக்கும் திட்டத்தைக் கைவிடப் போகிறீர்களா இல்லையா?

கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதனக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தும் உங்கள் சதித் திட்டத்தைக் கைவிடப் போகிறீர்களா இல்லையா?

ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்தி அதில் தேர்ச்சியுறாத குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கப் போகும் திட்டத்தைக் கைவிடப் போகிறீர்களா இல்லையா?

13 வயதில் எட்டாம் வகுப்பை முடிக்கும் ஒரு மாணவனால் எப்படி எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்க முடியும் என்று உங்களால் யோசிக்க முடியுமா முடியாதா?

National Testing Agency என்ற அமைப்பின் மூலமாக எல்லாக் கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை செய்வதின்மூலம் கிராமப்புற மாணவர்களின் வளர்ச்சிப் பாதையை மூடும் சதியை நிறுத்தப் போகிறீர்களா இல்லையா?

‘ஆர்எஸ்ஏ’ எனப்படும் ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக்யாவை நிர்மாணித்து ஒரு சர்வாதிகார அமைப்பை உருவாக்கப்போகிற உங்களின் நாசகார எண்ணத்தைக் கைவிடப் போகிறீர்களா இல்லையா?

கல்வியைச் சீரழிக்கும் உங்கள் முன் 30 கவிஞர்கள் தங்கள் எதிர் கேள்விகளை கவிஞர் நா.வே. அருள் தொகுக்கும் ஒரு கவிதைத்தொகுதியாக இதோ உங்கள் முன் வைக்கிறார்கள்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் சொல்கிறார்:

”கட்டுண்டோம் ஆயினும் பொறுத்திருக்க மாட்டோம். தர்மத்தை அப்போது வெல்லக் காண்போம்”.