அகண்ட தேசம்
~~~~~~~~~~~~~~~~
நினைத்தும் பார்த்தில்லை
இந்தத் துயரம் எங்கள் தேசத்திற்கு வருமென்று.
உலகத்தார் பலரைக் கொன்ற
 கொடிய வைரஸ்
எங்கள் இணை அதிபரையும்
கொண்டு போனது.
பத்தடுக்கு பாதுகாப்பெல்லாம் வைரஸுக்கு போதாதாமே!
தேசத்திற்கு துயரென்றது
மொத்த மக்களுக்குமல்ல,
நூற்றுக்கு மூன்றெனும் விகிதமுள்ள எங்களுக்கு மட்டும் தான்.
ஈராயிரம் ஆண்டுகளாய்
 ‘பூதேவர்கள்’ எனச்சொல்லி
மொத்தமாய் அனுபவித்ததை
மக்களாட்சி எனும் பெயரில்
கொஞ்சூண்டு எடுத்ததையும்
மீட்க வந்த மீட்பர் எங்கள் அதிபர்.
(மீட்பரல்ல அடிமை என்றழைக்கும் உங்களுக்கு வன்மையான கண்டனங்கள்)
நல்லடக்கத்திற்கு பிறகான
மூன்றாம் நாள்.
அதிபர் சிகிச்சை பெற்ற
படுக்கையின் கீழ் அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்தது.
“தொற்று கண்டறிந்த நான்காம் நாள் இன்று.
செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுகிறது.
இன்னும் மோசமடைகிறது
மூச்சுத் திணரல்!
மேடைதோறும் வெறுப்பை உமிழ்ந்த
சொற்கள் உற்பத்தியான
 எனது நாவின் தீமணம் தான் காரணம் என அறிய முடிகிறது.
வலி தாழாமல் நான் கதறும் ஓசையோடு
சேர்ந்து கேட்கிறது
முன்பொரு நாள்
 நான் பற்ற வைத்த கலவரத்தில்
இந்த அடிமையின் அடிமையொருவன்
 தன் கைகளால்
பெண்ணொருத்தியின் கருப்பையின் ஆழம் சென்று தோண்டி எடுத்த பிஞ்சின்
ஓலமும்.
இதுவரை இறந்து போன அமைச்சர்களின் கணக்கில்
நானும் ஓர் எண்ணாவேன் மற்றும்
இரங்கல், அஞ்சலி வெறும் சொற்கள் என்பதையும் அறிவேன்.
தற்கொலை செய்த விவசாயிகள்,
குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட
வேற்று மதத்தார்,
குறி பார்த்து சுடப்பட்ட போராட்டக் காரர்கள்,
எண்கள் ஓடுகின்றன மனக்கண்ணில்.”
இவ்வாறு முடிகிற
இக்கடிதம் ரகசியமாய் புதைக்கப்படும்
ஏனெனில் அடிமைகளால் பிழைக்கிறோம் நாங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *