கவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்

 

கவிதையை இலக்கணத்தின் எத்தனையாம் விதியின் கீழ் எழுதுகிறாய் என்று யாரையும் கேட்க முடியாது.  கவிஞன் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனுமில்லை… கவிதையும்தான்.  ஒவ்வொரு கவிதையும் எழுகிறபோது தனது விதியைத் தானே தீர்மானித்துக் கொள்கிறது.

கவிதை தான்தோன்றியாக இருந்தால் கொழுக் மொழுக் என்றிருக்கும்.  அப்படியிருக்கக் கூடாது இப்படியிருக்கக்கூடாது என்று சட்டாம்பிள்னைத்தனத்தில் எழுதப்பட்டிருந்தால் அது சவலைப் பிள்ளையாகிவிடுகிறது.  சரியாகக் கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் சண்டிப்பிளைளைகளாகவும் வாய்க்கக்கூடும்.  சரியாகச் செதுக்கப்படாத சிலை அரைப் பாறைதானே?

சதுரப்பிரபஞ்சத்தின் கவிதைகளனைத்தும் முகநூலின் ஞானபோதத்தில் முகிழ்த்த கவிதைகளாகத்தான் எனக்குப்படுகின்றன.  வரிகளில் சிக்கனம்.  நான்கைந்து வரிகளில் கவிதையின் உச்சம் கைகூடிவிடுகிறது.  மலையாளத்துக் குஞ்சுண்ணி மாஸ்டரை ஞாபகப்படுத்திவிடும் குறுங்கவிதைகள்.  ‘ஆறாம் நாள் கடவுள் மண்ணால் மனிதனைப் படைத்தான் ஏழாம் நாள் மனிதன் கல்லால் கடவுளையும்’ என்கிற குஞ்சுண்ணியை யாரால் மறக்க இயலும்?

கவிதையின் போதத்துக்கும் கலவியின் போதத்துக்கும் அதிக வித்தியாசமில்லை.  இன்னும் கேட்டால் கலவி முடிந்தபின் ஏற்படும் காமச்சுவையின் எதிர்மனோ நிலை கவிதையில் ஏற்படுவதில்லை. கலவியில் மீண்டும் தீண்டும் இன்பத்திற்குச் சில நிமிடத்துளிகள் தேவைப்படலாம்.  கவிதைக்கு அப்படியில்லை.  போதத்தின் உச்சத்திலிருந்து கீழ்நிலை இல்லை.  அது மேலும் மேலும் சுவையை நோக்கி உந்தித் தள்ளுகிறது. எழுதி முடித்த கணத்திற்குப் பின்பும் இன்பக் கிறுகிறுப்பு குறைவதேயில்லை.

தனது கவிதைகளை  ‘ஒரு காட்டுப் பறவையின் தீப்பிடித்த பாடல்கள்’ என்கிறார்.  விதவிதமான தீச்சுவாலைகள். சில கவிதைகளில் மகரந்தம் ஒட்டிக்கொள்கின்றன.  சில கவிதைகளில் முத்தங்களின் ஈரம் பிசுபிசுக்கிறது.  சில கவிதைகள் மனிதனின் இதயத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றன.  சில கவிதைகளில் ஏமாற்றத்தின் வலி சொட்டிக்கொண்டிருக்கிறது.  சில கவிதைகள் மனிதத்தின் போதாமையை பகடி செய்கின்றன.  சில கவிதைகள் சிந்தனையின் உச்சத்தைத் தொட்டு மீள்கின்றன.

கவிதைக் குதிரையின் மேல் அமர்ந்து சக மனிதர்களை வேடிக்கை பார்த்தபடியே வலம் வருகிறார் வசந்தகுமாரன்.  சமயத்தில் அவரை அவரே வேடிக்கை பார்த்துக்கொள்வதுதான் ரொம்பவும் விசேஷம்.

பொதுவாக, தமிழ்க் கவிதையுலகில் ஒரு பாசாங்குத்தனத்தையும், அறவுரை போதனையையும்  தன்னைச் சுய பரிசீலனைக்கு உட்படுத்தாமையையும் அவதானிக்க முடியும்.  பாசாங்குகளின் போர்வைக்குள் ஒரு கோழிக் குஞ்சைப்போல அடைகாக்கும் சுயபிம்பத்தைச் சுக்குநூறாகப் போட்டுடைக்கிறார் கவிஞர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த போக்காகும். தன்னைக் கிழித்து வெளியே எறியும் கவிதைகள் பல நிறைந்துள்ளன.  பாசாங்குகளின் கதவுகளை அறைந்து சாத்துகின்றன.  படீர் படீர் எனக் குற்றங்களின் சாளரங்கள் காற்றில் அடித்துக்கொள்கின்றன.

துக்க வீட்டில் நீ அழும் அழகைக்

கண்கொட்டாமல் பார்த்து ரசிக்கிறது

ஈவிரக்கமற்ற என் காதல்.

இவர் தன்னை எந்த இடத்திலும் அப்புராணியாகவோ / புனிதமானவராகவோ காட்டிக்கொள்ள முயலவேயில்லை.  மனிதனின் சகலவிதமான தந்திர உபாயங்களோடு வாழ்வதைத்தான் பல கவிதைகளில் அவதானிக்கமுடிகிறது.

எவ்வளவு வெளிப்படையாகப் பேசினாலும் சில ரகசியங்கள் அவவளவு எளிதில் அவிழ்ந்துவிடுவதில்லை.

நானடைந்த முதல் காமம்

நானடைந்த முதல் மரணம்.

எத்துணை பெரிய குற்ற உணர்ச்சியை எத்துணை அநாயசமாகச் சொல்லிவிடமுடிகிறது இவரால். ‘என் மரணம்’ என்கிற சொற்கள் வெளியே காண்பிக்க முடியாத சடலத்தால் ஆனவையாய் இருக்கலாம். இவரது மனச்சுடுகாட்டின் மாயா விநோதம் அவ்வளவு எளிதில் வெளியில் தெரியக் கூடியதல்ல.

சக மனிதர்களைப் பகடி செய்வதிலும் சளைக்கவில்லை.

வானத்திலிருந்து

பூமிக்கு வந்தவர்கள் இல்லை

யாவரும்

பூமியிலிருந்து

பூமிக்குச் செல்பவர்களே

இன்னொரு கவிதை

எல்லோரையும்போலவே இருந்துவிட்டுப் போ

தப்பிச் செல்வதற்கு

இதைவிட்டால்

வேறு குறுக்குவழி இல்லை

எளிய முறையில் கவிதை சொல்கிற கலை, சில அற்புதமான சிந்தனைகள் தெறித்துவிழும்  அநாயசம்.  ‘தலைமுறைக் கோபம் தலைக்கேறியவனின் கையில் இருக்கிறது கத்தி’ என்று சொல்லி அடுத்த கவிதைக்குப் பயணப்பட்டுவிடும் அழகு.

சதுர பிரபஞ்சம் | Buy Tamil & English Books Online | CommonFolks

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் சில அபூர்வமான கவிதைகளில் நகுலத்தனம் தென்படுகிறது.

யாருமென்னைப் புரிந்துகொள்ளவில்லை

புரிந்துகொண்டுதான் என்ன

நிகழ்ந்துவிடப்போகிறது என்று

நானும் சும்மாயிருந்துவிட்டேன்.

கவிஞனின் மனம் விசித்திர முரண்களைக் கொண்டலைகிறது.  ‘பூமியைத் தொட்டு மண்வாசனை நுகர்பவன்’ (பக் 82) என்று சொல்லிக்கொள்ளும் அவனே ‘’காதலிக்குப் பரிசளிக்க தரைதொடாத மழைத்துளி (பக் 181) தேடுகிறான்.

ஒரு சொல்லை துரோகத்தின் சாயல்களிலும் துயரங்களின் சாயைகளிலும் காண்கிற மனம் (பக் 164). ‘உன் ஒரு சொல் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ (பக் 205) என்று மறுபுறம் சொல்லின்மீது உயிர் நம்பிக்கையையே வைத்திருக்கிறது.

பெரும்பான்மையான குறுங்கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் அரிதாக இடம்பெற்றிருக்கும் நீள் கவிதைகளில் ‘நதி’யை விட ‘கதவு’ அழகியல் தரிசனத்தைத் தந்துவிடுகிறது. காட்டின் விலா எலும்பு, நகரும் சுவர், ஆதியில் சிலுவையாயிருந்தது கதவாக மாறியிருக்கிறது, அதன் தைல வாசனை ஏசுவின் ரத்தம் என்கிறார். ‘மரண சங்கீதம்’ ஒரு கவித்துவத் தத்துவார்த்தம்.

சிகரக் காட்சிகளைக் கண்ட நம் கண்களில் சில பள்ளத்தாக்குகளும் படுகின்றன. நூறு மூட்டைகளில் ஒன்றோ இரண்டோ சவலைகள் இருந்தால்தான் என்னவாகிவிடும்?

தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான, கவிதைகளில் பரிசோதனைகள் செய்பவருமான கலை விமர்சகர் இந்திரன் தனது முன்னுரையில் வசந்தகுமாரன் மீமொழிக் கவிதைகள் (Naked Poetry) எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடுவதைத் தமிழ்க் கவிதையுலகம் அவதானிக்க வேண்டும்.

‘எதிரிகள்

இதய வடிவில்

ஆயுதம் வைத்திருக்கிறார்கள்’

போன்ற ஆளுமை நிறைந்த பல அற்புதமான குறுங்கவிதைகளாலானதுதான் இந்த சதுரப் பிரபஞ்சம்.

கலை இயக்குநர் மஹியின் ஓவியம் பார்த்த என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.  இவரது விரல்கள் ‘ஜியோமென்ட்ரி பாக்ஸால்’ ஆனவையா?

இது வேடியப்பனின் வயலில் விளைந்த பசுமையான பயிர்.  என்னைப் பொறுத்தவரை வசந்தகுமாரனின் ‘சதுரப் பிரபஞ்சம்’ எனக்கொரு ‘செவ்வகப் பிரபஞ்சம்’.

கவிதை நூல் : சதுரப் பிரபஞ்சம்

ஆசிரியர்: கோ.வசந்தகுமாரன் 

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்  

விலை: ₹190.00 INR*