கௌ. ஆனந்தபிரபு கவிதைகள்
1.
பாவத்தின் பிரதி
**********************
குளத்தங்கரை கண்டதில்லை.
அனுதினமும் ஆற்றில்
குளித்ததில்லை.
நீரற்ற ஏரி கண்டிருக்கிறேன்.
மதுபோத்தல்களோடு
மிச்சமாகிக் கிடக்கும்
மீன் எலும்புகளை தேடித்திரியும்
நாரையைக் கண்டிருக்கிறேன்.
ஆலமுண்ட நீலகண்டனென
நஞ்சேறி நிற்கும் ஆற்றைக்
கண்டிருக்கிறேன்.
கடும்மழை கண்டதொரு நாளில்
எங்கள் பாவங்களையெல்லாம்
எடுத்துவந்து வீதியில்
எறிந்துவிட்டுப்போனது ஆறு.
நாற்றம் தாங்கவில்லை.
மூக்கைப்பொத்திக்கொண்டு
சுத்தமான ஆற்றில்
மீண்டும் பாவத்தை வீச ஆரம்பித்தோம்.
2.
பாலையிலிருந்து திரும்பியவன்
—————————————————
நான்கு சுவர்களுக்குள்
வருடங்களைக் கடத்தி
தனிமையின் வெக்கைக்கு
அலைபேசியால்
விசிறிக்கொண்டவன்
பாலையிலிருந்து நாடடைகிறான்.
நண்பர்களுக்கென
உயர்தர மதுப்புட்டிகள்.
மனைவிக்கென
சில பவுன்கள்.
அம்மாவுக்கு
சேலைகளும் தைலங்களும்.
ஆசை மகளுக்கு
அழகிய பொம்மைகளும்
இனிப்புகளும்.
பிரித்தளித்துவிட்டு
ஆசுவாசுமாய்ப் படுக்கையில்
அவனுக்கென கொஞ்சம்
விடுமுறைகள் மிச்சமிருந்தன.
எழுதியவர் :
கௌ. ஆனந்தபிரபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


கவிஞர் ஆனந்த பிரபு அவர்கள் நதி கவிதையும் தாயகம் திரும்பியவனின் விடுமுறை ஆசுவாச துய்ப்பு கவிதையும் அருமை.நேர்த்தியான சொல்லாடல்கள். வாழ்த்துகள்.
தெரிவுச் செய்து வெளியிட்ட ஆசிரியர் அவர்களுக்கும் இதழின் மேன்மைக்கும் பாராட்டுகள்.
இரா மதிபாலா
கருத்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா..மகிழ்ச்சி