இளையவன் சிவா கவிதைகள் (Ilaiyavan Siva Kavithaikal)

இளையவன் சிவா கவிதைகள்

1
நடுக்காட்டின் நீள்மரங்களின் கீழே
பிளிறும் யானையின்
காலுக்குள் ஏறிய
மதுப்புட்டியின் துண்டுகளில்
வழிவது குருதியென
வருந்தாதீர் மனிதர்களே
ஆறறிவின் வக்கிரத்தில்
அலையும் மனங்களின்
அடங்காக் கொட்டத்தால்
அழியும் வனத்தை
எண்ணிக் கொள்ளுங்கள்
2
அழுது தீர்க்கும் மழையின் தடத்தில்
வழியும் கண்ணீரை
துடைத்திட நீளாமல்
அகல நீளங்களில் நிறையும்
தண்ணீரின் தேடலில்
ஒளிந்து கொண்ட நதிகளை
புதைத்துப்போன பணத்தை
ஏந்தக் காத்திருக்கின்றன
கும்மிருட்டின் வாழ்க்கைக் கரங்கள்.
3
வெளிச்சத்தை வீசி நிற்கும்
நம்பிக்கையில்
முன்னேற்பாடுகளைத் துறந்து
நடக்கிறேன்
வானத்தின் துளியென விரையும்
மழையைத் தாண்டிவிடும் தருணத்தில்
வந்துபோகும் எண்ணத்தில்
வயலின் நடவுக்கூலிகள்
பாட்டு வழிகிறது
மறந்துவிட்ட குடையும்
துறந்துவிட்ட மேலாடையுமென
நகரும் இசையில்
நனைகிறது இயற்கை.

எழுதியவர்: 

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *