அகதியாகும் கடவுள்

 

சாலை விரிவாக்கத்திற்கென
கையகப்படுத்தும் நிலத்தில் உருமாறிடும் நெடுஞ்சாலையெங்கும்
“கொத்துக் கொத்தாக
உயிர்கள் விழுமென்ற” பூசாரியின் வாக்கு
மெதுவாக மெய்யாகிறது

சாய்க்கப்படும் மரங்கள்
அகதிகளாகும் பறவைகள்
விபத்தில் மரணிக்கும் மனிதரென
ஒவ்வொன்றாய் மடிந்து கொண்டேயிருக்க

நாளொரு உருவத்தில்
மெருகேறும் கான்கிரீட் சாலையோரத்தில்
நினைவு தெரிந்த நாள் முதலாய் சந்தனமும்
குங்குமமும் பூசி அருள்பாலிக்கும் பிள்ளையாரின் அரசமரத்தை
அதிநவீன பொக்லைன் எந்திரமொன்று லாவகமாய்
வேரோடு பிடுங்கி
வேறொரு இடத்தில்
நிழலுக்கு அனுப்பி வைக்கும் வேளையில்

பக்தர்களிடம் காணிக்கை வாங்கிய கடவுளும்
அரசின் இழப்பீட்டுத்
தொகையினை பெற விருப்பமின்றி ஆழ்ந்த சிந்தனையில்
மெளனமாகவேயிருக்க

ஊருக்கு வெளியே
பொலிவுறும் புறவழிச்சாலையில் உயிர்பெறும்
சுங்கச்சாவடியை எதிர்த்துப்போராடும் சாமானியர்களோடு
கையில் கொடி பிடித்த பிள்ளையாரும்
நீதி வேண்டுமென கோஷமிடுகிறார் .

சிறு பிள்ளையாய்

 

முதல் நாள்
முதல் வகுப்பில்
சேரும் மகளுக்கு
எதிரில் தென்படுவதெல்லாம்
புதிய முகங்களாகவும்
புதுப்புது அனுபவங்களாகவும்
நீள…

உள்ளுக்குள் பரவும்
பயத்தின் படபடப்பு அடங்காமல்
என் விரல்களை இறுகப்பற்றி
வகுப்பறைக்குள் நுழையும்
மகளின் பிஞ்சு விரல்களை
அதே பயத்தின் படபடப்போடு
இறுக்கமாய் பிடித்துக்கொண்டே
ஆசிரியையிடம்
“பாப்பாவை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்குங்க மிஸ்”என கெஞ்சிக் கேட்கிறான்
தந்தையும் சிறு பிள்ளையாய்….

 

                              எழுதியவர் 

                         கோவை ஆனந்தன்

கோவை மாவட்டம் சேர்த்த இவர்  கொழுசு, கவிதை உறவு, தன்னம்பிக்கை,புக்டே, கவிச்சூரியன், அகரமுதல, சுவாசம், நுட்பம், பதாகை, வாசகசாலை, வானவில், வான்மதி இன்னும் பிற) அச்சு மற்றும் மின்னிதழ்களென பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார். கடந்தாண்டு பதாகை இணைய இதழில் இவரெழுதி வெளியான கதைகளில் “கோல்டு செயின்”எனும் கதை பரவலாக பேசப்பட்டதோடு வாசகசாலையின் கலந்துரையாடல் நிகழ்விலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு இணையவழி கவியரங்குகளிலும், நேரடி கவியரங்கிலும்,வானொலி கவியரங்கிலும், பங்கு பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட மின் சான்றிதழ்களும், விருதுகளும் பெற்றுள்ளார். கவிச்சுடர், பெண்ணுரிமைப் பாவலர், கவிச்சிற்பி,  இன்பக்கவி, புதுமைக்கவி, தமிழ்க்கனல்,போன்ற விருதுகளும்,வெள்ளலூர் இலக்கிய மன்றத்தின் கவித் தமிழ்மணி விருதும், தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அசோகமித்ரன் படைப்பூக்க விருதும் இவற்றுள் அடங்கும். இவரது சிறுகதைகளை பாஸ்டன் நகரிலிருந்து ஒலிபரப்பாகும் “சொல்வனம் யூ டி யூப் சேனலில்” ஒலிவடிவமாகவும் பதிவேற்றம் செய்துள்ளனர். 

கவித்தூரிகை என்ற  தொகுப்பு நூலில் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக விவசாயத்தை பாடு பொருளாக கொண்டு எழுதப்பட்ட “வேர்களின் உயிர்”

கவிதைத்தொகுப்பு இவரது முதல் கவிதைத் தொகுப்பாகும். மேலும் விரைவில் ஒரு ஹைக்கூ தொகுப்பொன்றும், சிறுகதை தொகுப்பொன்றும் விரைவில் வெளிவர உள்ளது. 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “கோவை ஆனந்தன் கவிதைகள்”
 1. கோவை ஆனந்தனின்..கவிதை..
  சிறு குறு உழவர்களின்
  துயர் மிகு வாழ்க்கையை
  அவிழ்த்துக் கொட்டி இருக்கிறது.
  தங்க நாற்கர நெடுஞ்சாலைகளும்
  சுங்கச் சாவடிகளும்…ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சன் சிதைப்பதை எவ்வாறு
  ஏற்றுக்கொள்வது…சிறந்த
  கவிதைக்கு நல்வாழ்த்துகள்….
  …………….பூஅ இரவீந்திரன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *