ஓட்டு வீடும் ஒட்டிய நினைவும்
நாங்கள் தங்கியிருப்பதோ
தாத்தா கட்டியதாகச் சொல்லப்படும்
ஓடு கவிழ்த்த ஓர்
செம்மண் வீடு.
விருந்தாளி வரவறிந்தால்
அப்பாவை வசை பாடியபடியே
அம்மா ஒட்டடை எடுப்பாள்.
தம்பியும் தன் பங்குக்கு
எலி பொறித்த
பொந்தை அடைப்பான்.
ஊர் பொங்கலுக்கு
மட்டுமே புத்தாடை கட்டி
வீட்டை அழகு பார்ப்போம்.
ஆறு வருடமாக
திட்டம் போடும்
பூர்வீக நிலத்தில்
குறித்த புதிய வீடு
இன்னமும் எழும்பிய பாடில்லை.
மழைக்குப் பயந்தே
அம்மாவிற்கு வயதாகி விட்டது.
ஒருகட்டத்தில்
அச்சமும் குழப்பமுமே
அப்பாவிற்குத்
தொழிலாகிப் போனது.
நெடுநாள் கனவை
நேற்று அண்ணனின் அழைப்பு
உறுதி செய்தது.
கட்டப்படாத வீட்டைக்
குறித்த கனவுகள் தகர்ந்து,
இந்நாள் வரை சுமந்து வரும்
கருவறையின் நினைவே
இதயம் படர்கிறது..
எழுதியவர்
க.மணிமாறன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஆகச்சிறந்த கவிதை