அஞ்சலிக் குறிப்புகள்
*****************************
கள்ளச் சாராயத்தால் இறந்து போனவர்களே
நீங்கள்தான் எங்களுக்காக இரங்க வேண்டும்.
நாங்கள் உயிரோடு இருக்கும்போதே
மரித்துப் போனவர்கள்.
உங்கள் உடல் வலி தீர்க்க
மலிவு விலை சாராயத்தால் மடிந்தீர்கள் என்றொரு வதந்தி
உண்மையில் எங்கள் மூளை
போதையில்
நொதித்துப் போய்க் கிடக்கிறது!
உண்மையில் ‘சரக்கு’ அடிக்காமல்
ஒரு நவீன கவிதை
தெருவில் நடமாடுவதில்லை.
தலைகளில்
மூளை ஊனத்திற்காகவே வளர்க்கப்படும்
காவி நிறக் கஞ்சாச் செடிகள்
உங்களுக்கான அஞ்சலிக் குறிப்புகளில்தான்
எங்கள் மாதாந்திர தீவனத்திற்கான
மளிகைச் சாமான்களின் பட்டியல் தயாராகிறது.
உங்கள் வெந்துபோன குடல்களின்
பின்-உணவுச் சரக்கில்தான்
எங்கள் எழுத்துக்கான மை தயாரிக்கப்பட்டிருக்கிறது
எழுத்துக் கடவுள்கள் என்று அறிவித்துக் கொள்கிறோம்
பேனாப் பிடரிகளைச் சிலிர்த்துக் கொள்கிறோம்
சாகித்ய அகாடமிகளைச் சபிக்கிறோம்
ஞானபீடங்களை அலுத்துக் கொள்கிறோம்
எங்கள் எழுத்துகளில்
சமூக அநாதைகளுக்குச் சிதைகளை அடுக்குகிறோம்.
நீங்கள் மரித்துப் போனவர்கள்
நாங்கள் வேடிக்கை பார்க்கிறவர்கள்
இராமாயணத்தில் மட்டுமே ஜீவிக்க முடிகிற
ஏகபத்தினி விரதன்
அயோத்தியில்
வாய்விட்டுச் சிரிக்கிறான்:
சோமபான சுகானுபவத்தில் பாலியல் குற்றவாளிகள்!
பூரண மதுவிலக்கிற்குக் காந்தியத்தின்
கணக்கு இடிக்கிறது
உண்மையில் உங்கள்
பிணங்களின் எலும்புத் துண்டுகள் அடுக்கி
பொருளாதாரக் கட்டடத்திற்குக்
சாரங்கள் கட்டுகிறோம்!
நாங்கள் கண்டுபிடித்திருப்பது
‘போதைப் பொருளாதாரம்’
மறைந்து திரிவதற்காக
நிலப்பரப்பில் மூழ்கித் திரியும்
அதிசய நீர்மூழ்கிக் கப்பல்கள்
அவ்வப்போது-
மூச்சு முட்டும்போது
முகநூல் பரப்பில்
முகங்காட்ட மேலெழுவோம்!
உங்களைப்போல நாங்கள் குடிப்பதில்லை
சனாதனக் கோப்பையில் வார்க்கப்பட்ட
காவி நிறக் கள்ளச் சாராயத்தின் ஆவி
அறை முழுவதும்
பிணத்தின் தலைமாட்டில் வைக்கப்பட்ட ஊதுவத்திபோல
மணம் பரப்புகிறது
சுவாசித்தவர்களின் மூளை செயலிழந்துவிடுகிறது.
கள்ளச் சாராய இறப்புக் கவிதைகள்
சாகித்திய அகாடமி, ஞானபீடங்களின் அளவு
மரியாதைக் குரியதல்ல…
கால காலமாய் வஞ்சிக்கப்பட்டவர்களின் உயிர்கள்
கவலைக்குரியனவல்ல…
சொல்லப்போனால்
விருதுக்கான எழுத்துகள்
உங்களின் பிணங்களிலிருந்து அரிந்தெடுக்கப்பட்டவை.
மட்கிப் போன
மனுவின் பனையோலை டைரிக் குறிப்புகளிலிருந்துதான்
நோபல் விருதுக்கான
சொற்பொழிவு உரைகளைத் தயாரித்துக் கொள்கிறோம்.
காரணமில்லாமலேயே இம்சிக்கப்படுகிறவர்கள் மீது
சாற்றுவதற்காகவே
மனதில் திணிக்கப்பட்டிருக்கும்
மனுவின் சட்டப்புத்கக வரைவுகள்
திரும்பவும் சொல்கிறோம்
கள்ளச்சாராய இறப்புகளைப் பற்றிய
காரண காரியங்கள்
உயர்ந்த இலக்கிய ரசனைக்கு உரியதல்ல
கார்ப்பரேட் யுகத்தின்
கள்ளச் சாராய மதுக்கோப்பைகளில்
பழங்குடி ஈக்கள்!
ஈக்களின் பிணங்களுக்கு
யார் கவலைப்படப் போகிறார்கள்?
எங்கள் எழுத்துத் தத்துவம் இதுதான்
“சாவதற்குக் கூடத் தகுதியில்லாதவர்கள்
வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்கள்?”
சதி செய்யப்பட்ட பிணத்தைப் பகடி செய்கிறான்
சனாதன எழுத்தாளன்
இத்தனை ஈமச்சடங்குகள் நடந்தபின்பும்
இத்தனைப் பிணங்கள் எரியூட்டப்பட்ட பின்பும்
கள்ளக் குறிச்சியின் கருணாபுரம்
கோட்டை மேடுகளில் எரியூட்டப்படாத
ஒரேயொரு பிணம்
இன்னும்
ஆவியைப் போல அலைந்துகொண்டிருக்கிறது
அதற்கு நாங்கள் வைத்த பெயர்
‘இதயம்’
அதன் புனைபெயர் ‘மனசாட்சி’!
கவிதை எழுதியவர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.