அர்ப்பணிப்பின் புனைவு 

 

அந்தப் பெண்ணை தான் காதலிப்பது 

அறுதியானதும் அவளுக்காக 

இன்னொரு உலகம் சமைத்தான்

ஹேட்ஸ்*.

புல்வெளிகள் முதல் 

அத்தனையும் அப்படியே ஆக்கினான்.

ஒரு படுக்கை மட்டும் கூடுதலாக. 

 

வெளிச்சத்திலிருந்து இருளுக்கு 

விரைவாய் மாறுவது

இள மங்கைக்கு

இடராய் இருக்குமென்று 

சூரிய ஒளியையும் 

அப்படியே ஆக்கினான்.

 

சலசலக்கும் இலைகளின் நிழல் போல 

மெதுவாய் இரவை அறிமுகம் செய்யலாம்.

பிறகு நிலவும் நட்சத்திரங்களும் வரலாம்.

அவையும் இல்லாமல் ஆகும்.

பெர்சாபனி* மெதுவாய் பழகிக்கொள்வாள்.

இறுதியில் இருளே அவளுக்கு இதமாகும்

என்றவன் எண்ணினான்.

 

பூமியின் நகலது. 

ஆனால் அங்கே

நேசமும் இருந்தது.

நேசத்தை விரும்பாதார் யார்?

 

ஆற்றுப்படுகையில் அணங்கைப் பார்த்தபடி 

வேற்று உலகை படைத்தபடி 

ஆண்டுகள் பல காத்திருந்தான்.

நுகர்ச்சியும் ருசிப்பும் கொண்ட பெர்சாபனி!

உணர்ச்சி ஒன்றிருந்தால் 

மற்றவையும் மேவிடும் 

என்று அவன் எண்ணினான்.

 

இரவின் திசைகாட்டியாம்

துருவ நட்சத்திரத்தின் கீழ் 

காதலரின் உடல் ஸ்பரிசம்

காமுறாதார் யாரோ?

மெல்லிய மூச்சும்

என் பேச்சும் 

நீ என் உடனிருத்தலும் 

ஒருவர் அசைவு 

இன்னொருவர் இசைவு 

இருவரும் உயிர்த்திருத்தலை சொல்லும்.



காதலிக்கு கட்டமைத்த 

கவினுலகைக் கண்ட 

இருளின் இளவரசன் 

அப்படித்தான் எண்ணினான்.

அங்கு முகர்தலோ நுகர்தலோ 

இயலாதென்பது அவனுக்கு 

ஏனோ தோன்றவில்லை.

 

குற்றமோ? பயங்கரமோ?

காதலின் அச்சமோ?

அவன் கற்பனையிலும் இல்லை.

எந்தக் காதலனும் அதெல்லாம்

எண்ணுவதில்லை. 

 

கனவில் மிதக்கிறான்.

திகைப்பில் திளைக்கிறான். 

அவன் படைத்த அவ்வுலகை 

என்னென்றழைப்பது ?

முதலில் ‘புதிய நரகம்

பின் ‘பூந்தோட்டம்

முடிவில் ‘பெர்சாபனியின் பேதைப் பருவம்

என்றவன் தீர்மானிக்கிறான்.



அவன் சமைத்த படுக்கையின் பின்புறம் 

அழகுப் புல்வெளியின் மேலே 

மென்னொளி மேலெழுந்தது.

அவளை அள்ளியெடுக்கிறான்.

‘உன்னை நேசிக்கிறேன்.

உனக்கெதுவும் ஆகாது

அவளிடம் சொல்ல 

ஆவலுற்றான்.

 

அது பொய்யென்று உணர்ந்து 

முடிவில் மொழிந்தான் 

‘நீ அமரராகிவிட்டாய்.

உனக்கெதுவும் ஆகாது

அதுவே நல்ல தொடக்கம்;

சாலவும் மெய்யானது.

என்றவன் உணர்ந்தான்.



A Myth of Devotion இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற லூயிஸ் கிளிக் எழுதிய கவிதை. அவரது கவிதைகள் தனிமை, இல்லற உறவுகள், மணமுறிவு, இறப்பு ஆகியவை குறித்து ஆழமாகப் பேசுபவை என்று சொல்லப்படுகிறது. ‘சொற்சிக்கன எழிலுடன் தனிமனித இருப்பை பொதுமைப்படுத்திய கவிக்குரல் என்கிறது நோபல் குழு. 

*கிரேக்க புராணத்தில் சீயஸுக்கும் டெமட்டருக்கும் பிறந்தவள் பெர்சாபனி. பாதாள உலகத்தின் கடவுளான ஹேட்ஸ் அவளைக் கடத்திக் கொண்டுபோய் அங்கு அரசியாக்கினானாம். இன்னொரு வகைக் கதையில் பெர்சாபனியும் அவளது தாயார் டெமட்டரும்  எலுசீனியன் எனும் மதக்குழுவின் முக்கிய பாத்திரங்கள். அதன் நெறியை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இறப்பிற்குப் பிறகு மகிழ்ச்சிகரமான வாழ்வு கிட்டும் என்கிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *