ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

கந்தக மூச்சு

image for 1st poem.jpg

சேவல்களை எழுப்பப் போவது போல்

பனி நனைக்கும் காலையில் எழும்

பிஞ்சுக் கண்களில் இன்னும்

தூக்கம் அடைக்கலப் பட்டிருக்கும்

 

விளக்கு தேடித் தீக்கொளுத்தும்

கைகள் மெல்லக்

கஞ்சி ஊற்றும் தூக்குவாளிக்கு.

 

சில்லிட்ட புழுதித் தரையில்

கால் நனைக்க மனம் நனையும்

ஒரு விடியலுக்காய்

ஏங்கி நிற்கும்.

 

தூரத்தேயே கந்தக வாசம்

தென்றலைத் தூதனுப்பும்

வழி நெடுக

எறும்பிழுக்கும் கரும்புத் துண்டு

வார்த்தைகள் சிதறிப்போகும்-

தீப்பெட்டி ஆபீஸ் (!) வந்து சேரும்.

 

விரல்கள் கட்டிக்கொள்ளும் வர்ண ஜாலம்

சட்டத்தில் குச்சி அடுக்கும்

பசை சீண்டிப் பெட்டி ஒட்டும்

துத்தநாகம்

சொந்தமாய் ஒட்டிக்கொள்ளும்

எண்சாண் உடம்பெங்கும்

நெடி மட்டும் நெஞ்சோடே கலந்துவிடும்

நேரம்

கை ஒடித்த பசையாகத் தீர்ந்து போகும்.

 

குளித்துவிட்ட உடல் சுருட்டித்

தூங்கும்போது

நெஞ்சு போர்த்தும் கைநகங்கள்

கந்தகமாய் மூச்சு விடும்!

 

வரிசை

image for poem 2.jpg

வரிசை

வரிசையாகச் சென்றது

அது

ரேஷனுக்காக இருக்கலாம்

தடுப்பூசிக்காகவும் இருக்கலாம்

தனிமைப்படுத்தலுக்காகவும் இருக்கலாம்

சாவுக்காகவும் இருக்கக் கூடும்

நான் போனபோது கடைசியாக நின்றேன்,

என்றுமே நான் கடைசி தான்!

 

எனக்கு முன் நின்றவன்

நான் அவனுக்குப் பின் வரும்வரை

கடையனாய் இருந்தான்.

இப்படி நினைத்திருக்கும்போதே

எனக்குப்பின் ஒருவன் வந்து நின்றான்.

அவன் கடையனானான்

இப்போது நான் கடையனல்ல

இந்த பிரபஞ்சத்தில் எல்லோருமே கடையர்கள் தான்

என்றாலும்

ஒருவனும் கடையனல்லன்

பிரபஞ்சம்தான் கடைசி.

நான் பிறக்குமுன்னே ஜனித்திருந்தாலும் கூட

நான் மரித்தபோது

எனக்குப் பின்னால் அது நின்றிருந்தது.

 

அந்த இல்லாதது

image on poem 3.jpg

நான் செய்துவைத்தேன்

அந்த இல்லாததை

 

அது-

இருக்கின்ற ஒரு கண்ணை மாதிரிப்படுத்தி

ஆயிரமாக்கிக்கொண்டு அதிசயிக்க வைத்த

அகிலாண்ட நாயகி அல்ல

 

ஒரு சர்ரியலிஸ ஓவியனின் கண்கள்

பாம்புப் புற்றாகும்

தூரிகையின் ஒட்டுப் பதியன் அது

அது அல்ல

 

ஒரு நகைச்சுவை நாடக ஆசிரியன்

தொய்வுதரும் பாத்திரத்திற்கு

தயாரித்து வைத்திருக்கும்

மன வஸிய மருந்தல்ல

 

கைவிரல்களுக்கப்பாற்பட்ட

மடங்குத் தொகை மிருகங்களை

கீச்சுக் குரலில் சீராகக் கத்தவிட்ட

இசைக் கலைஞனின் ஜி – மேஜர் அளவையல்ல

 

நான் செய்துவைத்தேன்  ஒரு

அந்த இல்லாததை

 

கணத்தின் கணுவுக்கொருமுறை

உருமாறும் அந்த இல்லாதது

என் ஓட்டைப் பையில்

நிறைந்தே இருக்கு மெப்போதும்.

 

காத்திருப்பு

 

தென்னை வடித்திருக்கும் பால் வண்ணம்

வைக்கோற்போர் பாம்புக்குக் கூடுகட்டும்

பழமரங்கள் காற்றுக்குக் கையசைக்கும்

எருதுழுத சால்கோட்டில் நிலவு வந்து கரை கட்டும்

புகை கரையும் ஒளிச்சுவற்றில் சின்ன உயிர்

ஒரு விடியலுக்காய்க் காத்திருக்கும்

 

எதிர்கொள் ளொள்

image for poem 5.jpg

எப்போதும் இருக்கும் முகம்தான் எனக்கு இப்போதும்

நாய்களுக்கென்ன தெரியும்?

 

நாய்கள் மட்டும் பழகிவிட்டால்

திருடனைக் கூட ளொள்ளாது

 

பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று

பாத்திர மூட்டை சுமந்துவரும்

பிச்சைக் காரனை மட்டும்

எல்லா நாய்களும் ளொள்ளும்.

 

சில நாய்கள் யார் வந்தாலும் ளொள்ளாது

நமக்கேன் வம்பென்று

சாந்தமான நாய்கள்!

அவரவர்க்கு நேர்ந்தால்தான் தெரியும்

எதிர்கொள்ளொள்

எவ்வளவு சிரம சாத்தியமென்று!

கால்கள் பரபரக்கும் நாடி வேகமாயடிக்கும்

பாதத்திலிருந்து ஜிவ்வென்று வேகமாய் ஏறும்

விஷமாகப் புல்லரிப்பு

முகம் சுருங்கி வெளுத்து ஒன்றுமே செய்யமுடியாத

சோர்வு ஒன்று

திரண்டு வந்து நெஞ்சை அடைக்கும்.

பயத்தின் அதிர்வலைகள்

அபாய எல்லையைத் தாண்டினாலும்

உடம்பில் சொந்தமாய் ஒட்டிக்கொள்ளும்

நாலு சுவரை விட்டு வராத

எதிர் கொள்ளொள்ளாதவர்களிடம் சொன்னால்

த்ஸோ த்ஸோ ஸொல்லி

க்ரீம் பிஸ்கட் போடிருக்கலாமே என்பர்

 

யென்றாலும் எதிர்கொள்ளொள்

சிரம சாத்தியமானதுதான்.

 

நிலை         1

image for poem 6.jpg

வானத்தில் பூத்த

நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே

என்னைக் கடந்து சென்ற

பூக்களை கவனிக்க தவறிவிட்டேன்

 

நிலை         2

 

வந்த வழி தெரியும்

திரும்பிச் செல்ல முடியவில்லை

 

நிலை                  3

 

வானத்து நட்சத்திரங்களைப் போல

நான் மகிழ்ச்சியோடு மறைந்து போவேன்

இரவைச் சுவைத்த அவை

ஒரு விடியலுக்காகக் காத்திருப்பதில்லை

 

பொய்க்காலம்

image for poem 9.jpg
உடலின் வெதுவெதுப்பாய்
குளிரின் தண்மையாய்
கடந்து சென்ற காலத்தின்
பாதச் சுவடுகள் பட்ட இடம் பதிவின்றி.

தோளின் சுமையிறக்கி இளைப்பாறித்
திரிந்த மாலைகளின் மணிமுட்கள்
கரைந்துவிடும் நிழலாய்.

என் வரவேற்பறைகளில்
சுதந்திரமாய்ச் சுற்றி வந்தாய்
அசைவுகளும் அழுகைகளும்
கண்காணிக்கப் பட்டன.

வேர் இன்றித் திரிந்த கணங்களில்
கொம்பாக்கிப் பாசாங்காய்ச் சுற்றிய
பச்சைக் கொடிவரிகள் இன்னும் வடுக்களாய்,

உனக்கான நிமிடங்களில் நீ
வாழ்ந்ததாய்ச் சொன்னபோது
எனக்கான நிமிடங்களில்
நான் வாழந்ததாய் மகிழ்ந்தேன் .

இதழ் பரவ ஏந்துகையில்
ஒளிமுகம் மறுக்காத கண்கள்
கைபற்றிச் சென்ற மாலைச்சாலை
மகிழ்ந்து கொட்டும் பூக்களாய்

தோள் தேடிய புல்தரைகள்
நகங்களில் சுகம் பெறும்
ஒளித்தக்கை வழியடைக்கும்
ஓரமாய் ஊர்ந்து போன காலம்.

கழுத்தை மட்டும் கட்டிப்போடும்
வேலி காயத்திற் கேது!

சென்று திரும்பலில் நின்று நிலவும்
மௌனம் ஊசியாய் இறக்கும் ஒளி
வாசிக்கும் வரவேற்பு ஓலை.

மறைக்கப்பட்ட சொற்களில் காலம் பாய்ச்சும்
வெளிச்சம் எனக்கான உன் இல்லாமையை
வாரியிறைக்கும் நிர்வாணப் பெருமூச்சுகளினூடே

கனவுகள் உதறி எழுந்த காலம்
வெறுமையுள் புதையுண்டு கிடக்கும்.

Image

–  ப்ரதிபா ஜெயச்சந்திரன்