1
கண்டதை காண்பதை
கேட்டதை கேட்பதை
சிந்திப்பதை
மனதில் தோன்றுவதை
மனதில் ஆக்கிரமித்திருக்கும் நினைவுகளை
எதையும் பூசி மெழுகாமல்
அப்படியே
கவிதை எனவோ
கிறுக்கல் எனவோ
பெயரிட்டு மட்டுமே என்னால் எழுத இயலும்.
அதை மிஞ்சி என்ன எழுதுவேன் என்று என்னிடம் கேட்டால்
என்னிடம் வேறு பதில் இல்லை.
2
என்னிடம் எத்தனை முறை கேட்டாலும்
என்னை எத்தனை முறை வாசித்தாலும்
என்னிடம் எவ்வளவு கூறினாலும்
என்னிடம் எவ்வளவு பகிர்ந்தாலும்
நான் என்றும் “நான்” தான்.
உன் பார்வையும்
நீ என்னை வாசிக்கும் விதமும் மாறலாம்.
3
கடுப்பிலும் விரக்தியிலும்
கழற்றி மூலையில் எறியப்பட்ட
என் ஆடைகளைப் போலவே
இன்னும் கூடுதலாய்
கசங்கிப்போய்தான் கிடக்கின்றன
என் வாழ்க்கையும்
வழியறியாத எனது கனவுகளும்.
4
தீண்டாமையின் வலியை அனுபவித்த நான்
அதிலிருந்து தப்பிக்க வழி தேடி நூலகம் நோக்கி ஓடினேன்.
உன்னை என் கையில் வாரி அணைத்துக் கொண்டபோது,
நீயும் நானும் ஓர் உலகம் என்றானோம்.
ஒவ்வொரு நாளும் உன்னிடம் கற்றுக்கொண்டு,
அநீதியை எதிர்த்துப் போராட உதவினாய்.
மனதையும், சிந்தனையையும் செதுக்கிச் சீர்ப்படுத்தினாய்.
கொடூர வலியை அனுபவித்த
பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளைச் சொல்லி,
நான் அனுபவித்த வலிக்கு மருந்தானாய்.
உன்னைச் சந்திக்கும் போதெல்லாம்,
பல மனிதர்களின் வாழ்வை வாழ வைத்தாய்.
கற்றதன் வழி நடக்க,
கலங்கரை விளக்கமாய் வழிகாட்டி,
நேர் வழியில் செல்ல உதவினாய்.
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.
நீ கற்றுத்தரும் விடயங்களை அறிந்துகொள்ள
ஒரு யுகம் போதாது எனக்கு!
5
எத்தனை வயதானாலும்
சிறுபிள்ளை போல
இப்போதும் நாம் ஏங்குவதெல்லாம்
கைகள் கோர்த்து நடக்க அப்பாவின் கை..
கொஞ்சம் உறங்கிக்கொள்ள அம்மாவின் மடி..
அவ்வளவே..!
எழுதியவர்
பா.சுகந்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

