கவிதை: அறைகூவல் – வசந்ததீபன்

கவிதை: அறைகூவல் – வசந்ததீபன்

 அறைகூவல்
*****************
நான் செருப்பு அணிய
நீ ஏன் தடுக்கிறாய்?
நான் சட்டை போட
நீ ஏன் முறைக்கிறாய் ?
நான் தேநீர் கடை பெஞ்சில் உட்கார்ந்தால்
நீ ஏன் உன் தலையில் அமர்ந்ததாய்
துள்ளுகிறாய் ?
நான் கடைத்தம்ளரில் டீ குடித்தால்
நீ ஏன் பல்லை நறநறவென்று கடிக்கிறாய் ?
நான் உருமால் கட்டினால்
நீ ஏன் கண்களை உருட்டி மிரட்டுகிறாய் ?
நான் உன் தெருவில் வந்தால்
நீ ஏன் உன் வீட்டுள் நான் நுழைந்ததாய் கொந்தளிக்கிறாய் ?
நான் கட்டினேன்..செதுக்கினேன்..
நீ ஏன் கருவறைக்குள்.. சாமியிடத்தில்.. என்னை
நெருங்க விடாமல்  சுற்றிப்
பாம்பாய்ப் படுத்து சீறுகிறாய்?
கோயில் தேர் உன் தெருவுக்குள் வரலாம்
என் வசிப்பிடங்களுக்கு வரக்கூடாதா ?
எனது உடல் தீண்டத்தகாதென்கிறாய்
எனது உயிர் அற்பம் என்கிறாய்
எனது வம்சம் வேசைக்குரியதென்கிறாய்
எனது உணவை உண்ண எனக்கு உரிமையில்லை என்கிறாய்
எனது தாய்மொழியைக் கொன்று
உன் மொழியை எனக்குள் திணிக்க முனைகிறாய்
எனது பண்பாடு கலாச்சாரங்களை நிர்மூலமாக்கி
உன்னுடையதை என்னுடையதாய் நிறுவ
என்னைப் பலவந்தப்படுத்துகிறாய்
இதுவரை என்னைச் சேவகனாக்கிய கல்வியை
எனது அடிமைதனத்திற்க்கான  நுகத்தடிகளாக
புதுக் கல்வியைப் புகுத்த
சகல ஊடகங்களையும் கூர்ப்படுத்தித் தயாரிக்கிறாய்
 நான்..நாங்கள் தயாராக இருக்கிறோம்
இனியும் சகிப்பதில்லையென்று.
–வசந்ததீபன்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *