நூல் அறிமுகம்: கவிதையின் ஊற்றுக்கண்கள் – பாவண்ணன்

நூல் அறிமுகம்: கவிதையின் ஊற்றுக்கண்கள் – பாவண்ணன்



தீபாவளிப் பகல் முதல் கொடி விளக்கு வரை நீளும் மீனாட்சியின் கவிதைப்பயணம் நாற்பதாண்டுகளுக்கும் மேலானது. மூங்கில் கண்ணாடி அவருடைய பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கும் புதிய தொகுதி. புதிதுபுதிதாக அவர் உருவாக்கும் சொல்லிணைவுகள் அவருக்குள் வற்றாமல் பொங்கி வழிந்தபடி இருக்கும் கவிதையூற்றுக்குச் சாட்சியாக உள்ளன.

மூங்கில் கண்ணாடி என்னும் புதுச்சொல் பார்வையில் படும் கணத்தில் அளிக்கும் ஈர்ப்பு முக்கியமானது. மூங்கில் இயற்கையின் அடையாளம். கண்ணாடி முழுக்கமுழுக்க செய்யப்பட்ட ஒரு பொருள். இயற்கையைவிட்டு வெகுதொலைவு வந்துவிட்ட நாம் இயற்கை அல்லாதனவற்றுடன் எந்த அளவுக்கு இணைந்து செல்வது என்பதற்கு நாமே ஒரு விதியை வகுத்துக்கொள்வதே நலம். நாம் வகுத்துக்கொள்ளும் அவ்விதியே நம் வாழ்க்கைக்கான விதி. மூங்கில் சட்டகத்துக்குள் பொருத்தப்பட்ட கண்ணாடி அழகுப்பொருள் மட்டுமல்ல, பயன்படும் பொருளும் கூட. விதிக்குப் புறம்பான இணைவுகள் எல்லாமே பெரும்சுமை. மூங்கில் கண்ணாடி என்னும் சொல்லிணைவு இப்படி பல எண்ணங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்று தொடங்கும் பாடல் புறநானூற்றுப் பாடல்களில் மிகமுக்கியமானது. இருவேறு நிலவுக்காட்சிகளை முன்வைத்து இருவேறு வாழ்க்கை நிலைகளை உணர்த்திவிடுகிறது அப்பாடல். ஒரு காலத்தில் ஒரு குன்றுக்கே சொந்தக்காரர்கள். இன்னொரு காட்சியில் குன்றை இழந்துவிட்டு வாழ வழியறியாது திகைப்பவர்கள். இதற்கு நிகரான ஒரு கவிதை மீனாட்சியின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மன்மத வருஷத்து மாமழை என்பது அக்கவிதை.

இரண்டு மழைக்காட்சிகளை நமக்குக் காட்டுகிறார் மீனாட்சி. ஒரு காட்சியில் வைகையில் வெள்ளம் புரண்டோடிய காலகட்டம் இடம்பெறுகிறது. அரசனே முன்னின்று அந்த வேலையை மேற்பார்வை செய்கிறான். சொக்கனாதரே பணியாளாக வந்து அங்கே வேலை செய்கிறார். பசிக்கு மூதாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார். வேலையிலிருந்து பிசகியதற்காக அவருக்கு பிரம்படியும் கிடைக்கிறது.

இரண்டாவது காட்சியில் இன்றைய வெள்ளக்காட்சி இடம்பெறுகிறது. எங்கெங்கும் நீர். அரசு இயங்கும் விதம் ஏமாற்றமளிக்கிறது. அரசு எந்திரத்தோடு தொடர்புடைய அனைவரும் தம் கடமையிலிருந்து பிசகி நடக்கின்றனர். மூதாட்டி பிச்சைக்காரியாக அலைகிறாள். சொக்கனைப்போன்றவர்கள் பசியாற வழியின்றி அலைகிறார்கள்.



புராணகாலத்துக் காட்சியையும் இன்றைய எதார்த்தக்காட்சியையும் அடுத்தடுத்து வாசிக்கும்போது எழும் குற்ற உணர்ச்சியிலிருந்து ஒருவரும் தப்பித்துவிட முடியாது. எப்படிப்பட்ட உலகத்தை எப்படியெல்லாம் சிதைத்துச் சீரழித்து வைத்திருக்கிறோம் நாம்.. பாட்டியின் பசியைப்பற்றியோ, சொக்கனின் பசியைப்பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லாத தன்னலத்தின் விளைவாக நாம் கொஞ்சம்கொஞ்சமாக இந்த இயற்கையைச் சூறையாடிக்கொண்டே இருக்கிறோம். ’அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்னும் வாசகத்தை நாம் மறந்துவிட்டோம். அந்த மறதிக்கு நாம் கொடுக்கப்போகும் விலை பெரிதாக இருக்கும். இன்று சிறிய அளவில் பற்றிப் படரத் தொடங்கியிருக்கும் பசி என்னும் நெருப்பு  என்றேனும் ஒருநாள் அனைத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கும் என்னும் எச்சரிக்கையை நமக்குக் கொடுக்கிறது இக்கவிதை.

அம்மா நினைவுநாள் என்பது இன்னொரு கவிதை. இதுவும் ஏதோ ஒருவகையில் பாரியை இழந்து நினைவேக்கத்தில் ஆழ்ந்த அவன் மகளிரின் அதே பாடலுக்கு இணையான கவிதை.



காலைச் சிறுபனி

சிலுசிலு வாடை ஊடாக

பொலபொலவெனக் கொட்டும்

பவளமல்லிகளில்

அவளது கலகலப்பேச்சு

நம்மைக் கண்டதும்

முறுவல் காட்டி சொல் உதிர்ப்பாள்

மலர்களை ஏந்திடும்

புல்தரை என

எம் நெஞ்சம் கரைகட்டுகிறது.

 

இன்று அவள் இல்லை

செங்காம்பு

பால்வெண்மை

நறுமணம்

நற்றாய்

தழுவிடும் முத்தங்கள்

தழுவிடும் காலங்கள்



அம்மா இருந்த காலம் ஆனந்தமான காலம். அன்று வீட்டில்  பவளமல்லிச் செடி இருந்தது. அதிகாலைப் பனியில் அம்மா அந்தச் செடியின் கீழே கொட்டிக் கிடக்கும் மலர்களை எடுத்துத் தொடுப்பாள். அவளே ஒரு பவளமல்லிச் செடியாக நின்று சொற்களைச் சிந்துவாள். அது மலர் சிந்துவதுபோல இருக்கும். இன்று அம்மா இல்லை. ஆனால் அம்மா போன்ற பவளமல்லிச் செடி இருக்கிறது. மலரெடுக்கக் குனிந்தவர் ஒருகணம் அம்மா இல்லாத குறை உணர்ந்திருக்கலாம். தடுமாற்றம் மிக்க அத்தருணத்தில் பவளமல்லிப்பூவின் மணம் நெஞ்சை நிறைக்கிறது. மலர்களை அம்மாவின் சொற்களாக முன்பு நினைத்துக்கொண்ட மனம் அக்கணம் தன்னை வந்தடையும் மலரின் மணத்தை அம்மா தன்னைத் தழுவியளிக்கும் முத்தமாக நினைத்துக்கொள்கிறது. அம்மாவுக்கு அருகில் நின்றிருந்த பவளமல்லிச் செடி மெல்லமெல்ல  அம்மாவாகவே உருமாறி ஓங்கி நிற்கிறது. கவிதையில் நிகழும் இந்த உருமாற்றம் ஒரு மாயம். இந்த மாயத்தை உணர்வதே கவிதை.

புறநானூற்றுப்  பாடலொன்றில் ஒரு பெண் ஒரு புன்னைமரத்தை வளர்த்து வருகிறாள். அவளுக்குத் திருமணமான பின்னர் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையிடம் அவள் புன்னைமரத்தைச் சுட்டிக் காட்டி இந்த மரமே உன்னுடைய தமக்கை என்று சொல்லி வளர்க்கிறாள். அவள் பருவமெய்தி காதல் வயப்படுகிறாள். ஒரு நாள் அதே புன்னைமரத்தடியில் காதலனைச் சந்திக்கிறாள். காதலன் ஆவலோடு அவளைத் தழுவ வரும்போது மரத்தைச் சுட்டிக்காட்டி தன் அக்காவுக்கு எதிரில் வேண்டாமென நாணத்துடன் விலக்குகிறாள். புறநானூற்றுக் காலத்திலிருந்து மீனாட்சியின் காலம் வரைக்கும் நிகழும் இத்தகு சுவையான உருமாற்றங்கள் மரபென்னும் கொடி நமக்குத் தெரியாமலேயே நமக்குள் ஊடுருவி வளரும் விதத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

நேற்றிலிருந்து இன்றுவரை எனக்குப் பிடித்த மற்றொரு கவிதை. பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பத்து வயதுச் சிறுமியொருத்தி சூழல் நெருக்கடிகளின் விளைவாக தந்தைக்குப் பதிலாக இரயலடிக்கு ஓடி விழுந்து கிடக்கும் பேப்பர்கட்டுகளை எடுத்துப் பிரித்து வீடுவீடாக போடத் தொடங்கும் சித்திரத்தைக் காட்சிப்படுத்துகிறார் மீனாட்சி. அந்த ஓட்டமும் மாற்றமும் அவள் வாழ்க்கையில் முக்கியமானதொரு திருப்பம். அவள் தோளில் மிகப்பெரிய பொறுப்பு சுமத்தப்படுகிறது என்பது உண்மை. அப்பொறுப்புடன் அவளை வந்தடையும் சுதந்திரத்தின் சுவை அவளுக்கு விசையை ஊட்டுகிறது. பொறுப்பையும் சுதந்திரத்தையும் அவள் தோள்கள் ஒன்றாகவே சுமக்கின்றன. ஒரு குழந்தையிலிருந்து ஒரு தந்தை உருவாகிவரும் மகத்தான தருணம் அது. ஒரு புறநானூற்றுக்காட்சியைப் போல சித்தரிப்போடு நின்றிருக்கவேண்டிய கவிதையுடன் இன்றைய காலத்தை இணைக்க நினைத்ததால் தொடக்கத்தில் உருவான எழுச்சியும் வேகமும் இறுதிப்பகுதியில் அடங்கிவிடுவது ஒரு குறையே. ஆயினும் தந்தையுமான சிறுமியின் சித்திரத்தால் கவிதை உறுதியாக நிற்கிறது.

இத்தொகுதியின் மிகமுக்கியமான கவிதையான கதராடை அப்பா வில் தன் அப்பாவை ஒரு கோட்டோவியமாக தீட்டிக் காட்டியிருக்கிறார்  மீனாட்சி.

கல்லூரு விடுமுறை என்றால்

படியேறும்போதே காதலுடன் காத்திருக்கும்

அப்பா பிறந்த வீடு

இப்போது எங்களிடம் இல்லை

என்று ஏதோ ஒரு தகவலைப்போல கவிதையைத் தொடங்குகிறார் மீனாட்சி. உண்மையில் தன் அப்பா மறைந்துபோய்விட்டார் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் தகவல். ஆனால் அதை மாற்றி அவர் வாழ்ந்த வீடு இல்லை என்று துயரார்ந்த புன்முறுவலுடன் தொடங்குகிறார். தன் மகன் வீட்டில் இல்லை என்று சொல்வதற்கு மாறாக, அவனைச் சுமந்த வயிறு மட்டும் இதோ இருக்கிறது என மாற்றிச் சொல்லும் புறநானூற்றுத் தாயை முன்வைக்கும் அழகியலுக்கு நிகரானது இது.



கதராடைகள் மீது அப்பாவுக்கு இருந்த நாட்டத்தை முன்வைக்கிறது அடுத்த பகுதி. அவர் அணிந்திருந்த கதர்ச்சட்டைகள் அங்கங்கே கிழிந்துபோயிருக்கும். அச்சட்டையின் கிழிசல்களை கண்களுக்குப் புலப்பட்டுவிடாமல் வெள்ளைநூலில் தைத்துச் சீரமைத்துக் கொடுத்த பழைய நினைவுகளை அசைபோடுகிறது மூன்றாவது பகுதி. ஆடைகளில் ஓட்டை விழுந்தபோதெல்லாம் தைத்துக் கொடுத்த தன்னால், அவர் இதயத்தில் விழுந்த ஓட்டையை மருத்துவர் கண்டறிந்து சொன்ன நாளில் தைத்துக் கொடுக்க முடியாமல் கையறுநிலையில் நின்ற அவலத்தை இறுதியாக எடுத்துரைத்து முடிவடைகிறது கவிதை.

தமிழில் கவிதை உருவான காலத்திலேயே அடித்தட்டு மக்களின் அவலக்காட்சிகள் பதிவாகத் தொடங்கிவிட்டன. கையது கொண்டு மெய்யது பொத்தி பேழையுள் இருக்கும் பாம்பென வாழ்ந்தபடி நாரையைத் தூதாக அனுப்பிய சத்திமுத்தப்புலவரின் வரிகள் கல்மீது பொறிக்கப்பட்ட எழுத்துகளாக உள்ளன. மீனாட்சியின் கதராடை அப்பா அந்த வரிசையில் வைக்கத்தக்க ஒரு கவிதை.

(மூங்கில் கண்ணாடி. இரா.மீனாட்சி. கபிலன் பதிப்பகம், 321, மூன்றாவது முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி- 605008. விலை. ரூ. 150)



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *