கவிதை: வாக்குமூலம் – ப.செல்வகுமார்வாக்குமூலம்
அவன் மரணத்துக்கு முன்
பேசிய இரண்டொரு வார்த்தைகள்
என்னிடம் தான் இருக்கின்றன
பெரும்பீதியுடனான
இமைமூடுவற்கு முந்தைய பார்வையோடும்
அவனது இறுதி மூச்சின் வெப்பத்தோடும்
தொண்டைக் குழியில்
மேலும் கீழுமாய்  உருட்டியபடியிருக்கிறேன்
கைமாற்றிவிட்டுப் போனவனின்
கடைசி சொற்கள்
உயிர்குமிழியென வடிவெடுத்து
பந்தினைப் போல்
மேலெழுந்து வந்து மிதக்கின்றன
துப்பவியலா உள்நாக்காய் வழிமறிக்கிறது வார்த்தைகளை
கவிழ்ந்த தலையையும்
மிதந்த விழிகளையும்
நினைவூட்டுகிற அவனது சொற்கள்
பிதுங்கிக் கொண்டு வெளியேறுமோவென்ற அச்சம்
நாவறளச் செய்கிறது
வழிதப்பிய குருதியோட்டமென
பீறிட்டலைகிறது
நதிமேல் தக்கையாய் மோதிமோதி
பிளவுகளால்
தாண்மையின் சுவருடைக்கிறது
பிஸ்டல் கெந்திய ரவைகளாய்
அசந்தர்ப்பமொன்றில்
என்னிலிருந்து வெளியேறிய
அந்த சொற்கள்
சொல்லி முடித்த கணத்தில்
செத்துப் போயிருந்தன.
   — ப.செல்வகுமார்