கவிதை: விவசாயிகள் போராட்டம் – மு.பாலசுப்பிரமணியன்உழுது விதைத்து அறுத்தவன் இன்று
அழுது போராட வைப்பதா -அட
தொழுது கிடந்திட துயரம் அடைந்திட
பழுதுகள் இப்படி நடப்பதா
தலைநகர் சாலைகள் தலைகளின் காட்சி
நிலைமையோ மோசம் பாரடா -அவர்
இலையெனில் இங்கே இல்லை சோறுதான்
உலையெங்கே கொதிக்கும் கூறடா
கார்ப்பரேட் காரன் கம்பெனிக் கெல்லாம்
கார்க் கதவு திறப்பது மானமா -அட
தார்ச்சாலை நீளும் உழவரின் பயணம்
தலைநகர் தாங்குமா சொல்லடா
மண்ணை நம்பி மழையை நம்பி
மாடாய் உழைக்கிறான் விவசாயி
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும்
வக்கில்லை அவனா சுகவாசி ?
பொன்னை பொருளை சேர்த்திடவா? புகழை அணிந்து மகிழ்ந்திடவா?-இல்லை
கொன்று வறுமை ஒழித்திட தானே  குனிந்து  உழைக்கிறான்  அதையோசி
காய்ந்த தலையும் கசங்கிய துணியும்
காணொலி காட்டும் போராட்டம்
பாய்ந்து உழவர் பாடும் முழக்கம்
பாரே அதிரும் ஆர்ப்பாட்டம்
வயலை வழுதிடும் வண்டிகள் எல்லாம்
வரிசையில் சாலை அணிவகுப்பு
புயலை கிளப்பிய புழுதியில் தலைநகர்
புறப்படு புறப்படு சனியுனக்கு
கூட்டுப் பண்ணை விவசாயம் செழித்தது
குருவிக் கூட்டை கலைப்பதா?
ஓட்டுப் பெற்று உயரே சென்றதும்
ஏற்றிய ஏணியை உதைப்பதா ?
அதிகாரம் உந்தன் கண்ணை மறைக்குது
ஆணவம் வேண்டாம் முடிவெடு
அதிரும் உழவரின் இடிகுரல் மதித்து
அவசர சட்டத்துக்கு விடைகொடு
உருவம் கண்டு எள்ளுதல் வேண்டாம்
உடனே விரைந்து செயல்படு
கர்வம் கொண்டு காலம் தாழ்த்தாதே
கடனே சட்டத்தை திரும்ப்பெறு
ஏரைப் பிடிப்பவன் வீதிக்கு வருவது
ஏளனம் இல்லை அவமானம்
தேரில் செல்பவன் வேடிக்கைப் பார்ப்பது
நேர்மை இல்லை  பலவீனம்
மக்கள் எழுச்சி தோற்றது இல்லை
மாற்றம் நிச்சயம் தோழர்களே!
சிக்கல் தீரும் வரையினில் தொடர்வோம்
சத்தியம்  விடியல் தோழர்களே!
மு.பாலசுப்பிரமணியன்
புதுச்சேரி