கவிதை: வடிவங்கள் – அகவி

கவிதை: வடிவங்கள் – அகவி

உலக உருண்டையின் நீட்சி
வடிவங்களாய்
எங்கெங்கும் தெரிகின்றன
முட்டையிலிருந்து பிறக்கும்
உயிரினங்கள்
முட்டை வடிவத்தை
வாழ்ந்து விட்டே
வெளிவருகிறது
நான் கூட அம்மாவின்
கருவறையில்
வட்டமாய் சுருண்டு அமர்ந்து
வட்டத்தை வாழ்வாக்கிப் பார்த்து தான்
வந்துள்ளேன்
வட்டம் கைகட்டிய காட்சி
சதுரம்
முக்கோணம் வடிவங்களின் வணக்கம்
வடிவங்களின் ஆதித்தாய்
வட்டம் ,
வட்டத்தின் சொற்களாகிய
எழுத்துகளை
வாசிக்கத் தெரிந்தவர்கள்
ஓவியமாகின்றனர்
உலகின் மிளிர் ஓவியம் ஒவ்வொன்றும்
வட்டத்தின் இசைப் பாடல்
சுற்றும் வட்டத் தட்டை
கூர் ஊசிமுத்தமிட்டால்
ஒரு காலத்தில்
காதெல்லாம் இசையாறு
வட்ட வாய் ஒலிப்பெருக்கிகள்
மரக்கிளையில் இருந்து
பாடும் காலம் மாறி விட்டது.
முட்டையைச் சமமாய் அறுப்பது போல்
இப்பூமியை
அறுத்தால்
சூரியனும் சந்திரனும்
இருபாதி இருக்கும்
வட்டம் தியானம்
செய்யும் போதெல்லாம்
முட்டைகள் பிறக்கின்றன
வட்டத்தில் தொடங்கி
வடிவங்களை
இறுதி செய்யும் தையலன்
உருண்டையில்
தொடங்கி
வடிவங்களை இறுதி செய்யும் மகாசிற்பி
இவர்கள் கழித்துத் தள்ளிய
துகள் வடிவங்களே
காடுகள்
மலைகள்
ஆறுகள்
சமவெளிகள்
அதில் வாழ் உயிரினங்கள்.
……………………………………….
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *