அக்குறுநகரின் சிறு வீதிகள் இணைகின்ற
பிரதான சாலையில்
பலமுறை பயணித்திருந்த போதிலும்
அச்சிறுவீதியொன்றில் நுழைந்தது
அன்று அதுவே முதல் முறை
அவ்வீதியின் ஆரம்பத்தில் நின்றிருந்தவரிடம்
விசாரித்த போது
எச்சலசலப்புமின்றி தெருமுனை வீட்டை
அடையாளம் காட்டினார்
சற்றே நீண்ட இரும்பு கேட்டின்
கால்முனை மடக்கி உள்நுழைந்து அழைத்த போது
என் குரல் கேட்டு முற்றத்திற்கு வந்துவிட்டிருந்தார்
பரஸ்பர சம்பாஷணைகளுக்குப் பிறகு
ஹாலில் போடப்பட்டிருந்த
இரண்டு பேர் அமரக்கூடிய
பிரம்பு நாற்காலியின் இடது பக்கத்தில்
நானமர்ந்து கொள்ள ஒருவர் மட்டுமே அமரக்கூடிய
இன்னொரு பிரம்பு நாற்காலியில்
அவரமர்ந்து கொண்டார்
மர்ஃபிலாவின் காதலைப் போன்று
வெகு இயல்பாகவே தொடங்கிற்று
எங்களுக்கிடையேயான உரையாடல்
ஒரு கணத்தில் நிஜத்தின் பரபரப்பு
மனதினுள் பிரகாசமாய் விரிய ஆரம்பிக்க
நாற்காலி மீதிருந்த ரிமோட்டை
முதலில் கையிலெடுத்துக் கொண்டேன்
பின் கடந்த தருணங்களில்
எஸ்.ரா.வின் ‘ குறத்தி முடுக்கின் கனவுகளை’
புரட்டிக் கொண்டேன்
முன்னொரு நாளொன்றில் அவரெழுதி
அவருக்கு பிடித்தமானதாக இருந்த
கதையொன்றைப் பற்றி
ஒருமுறை நான் அலைபேசியில்
அவரோடு உரையாடியதைப் பற்றி
குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும்
அவரது பார்வை ஹாலின்
நடுமையத்தில் நிலைகுத்தியிருந்தது
அதே நிலை தான் எனக்கும்
என்னை நெகிழ வைத்திருந்த
அவரது நான்கைந்து கதைகள் பற்றி
குறிப்பிட்டு பேசும் போது
அவருக்கு பின்புறமிருந்த சுவரின்
மேல்பகுதியில் மாட்டப்பட்டிருந்த
அவரது மகனின் திருமண போட்டோவில்
என் பார்வை பதிந்திருந்தது
அவரை சந்திக்க வருவதற்கு முன்பு
பேச நினைத்த விஷயங்களில்
ஏதாவதொன்றை மறந்து விட்டோமா என
உரையாடலின் சில கணநொடி
மெளன இடைவெளியின் இடையில்
சிக்க முனைந்த போது
தொலைக்காட்சிப் பெட்டியின் மேலமர்ந்திருந்த
புத்தர் கண்ணில் பட்டார்
அவரெழுதி இருந்த புத்தரைப் பற்றிய கவிதை
அந்த புத்தர் அவர் வீட்டிற்கு வந்த
பிறகு தான் எழுதப்பட்டதா என
கேட்க நினைத்த போது
அவர் மடிக்கணிணியில் மின்னஞ்சலை
தேடிக் கொண்டிருந்தார்
அவரது வீட்டைப் பற்றி
பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த
தொலைக்காட்சி பெட்டிக்கு மேல்புறம்
வெற்றிடமாக காட்சியளித்த
அந்த இடத்தை அவருடைய ஒவியம்
நிரப்பப் போகிறதோ என
மற்றொரு ஆவலான கேள்வி எனக்குள் எழ
புத்தர் கவிதைப் பற்றிய எண்ணத்தை
கொஞ்சம் புறந்தள்ளி வைத்து விட்டு
அந்தக் கேள்வியை கேட்டும் விட்டேன்
‘ அநேகமா நான் வரையப் போற
தைல ஓவியமாகத் தான் இருக்கும் …’
ஒருவிதமான புன்முறுவலுடனே சொன்னார்.
‘ உறவினர்கள் வரலைன்னா
இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட
பேசிக்கிட்டிருப்பேன் … ‘
என விடைபெறும் தருணத்தில்
அவர் சொன்ன வார்த்தைக்கு
பின்னால் வைக்கப்பட்ட மூன்று புள்ளிகள்
முற்றுப் பெறாத உரையாடலின் நீட்சியாக
பிறகொரு நாளொன்றில்
நிகழவிருக்கின்ற எங்களது உரையாடலின்
தொடக்கப் புள்ளிகளாக இருக்கும்…
வே .முத்துக்குமார்
திருநெல்வேலி