இன்குலாப் ஜிந்தாபாத்
ஓர் அரசு
காணிகளின் விளைச்சலை
கார்ப்பரேட் பத்தாயங்களில்
கொட்ட நினைக்கும்
கொடுங்கோண்மையைப் பார்த்தபிறகும்
வீதிக்கு வருவதன்றி
வேறுயேதும் வழியுண்டோ
விவசாயத் தோழனுக்கு?
புழுதிபடிந்த ஏழைகளின்
போராட்டத்தைக் கலைக்க
நீரைப் பாய்ச்சும் நிர்மூடர்கள்
அதே தண்ணீரில் தங்கள்
ஆணவ அழுக்குகளைக்
கழுவிக்கொள்ளலாம்
புகை குண்டெறிந்து
பகை வளர்க்கும் பாசிசப் பட்சிகள்
தம்முடைய ஈன இறக்கைகள்
அறுந்துவிழும் அவலக்காட்சியை
ஒரே ஒரு கணம்
உற்று நோக்கலாம்
என்னென்னப் பள்ளங்களைத் தோண்டி
எளியவர்களைத் தடுக்க நினைக்கிறார்களோ
அதே பள்ளங்கள் நாளை
ஆதிக்க அதிபதிகளின்
சமாதியாகலாம்
பேசித்தீர்ப்பது ஒருவழி
பேசும் முன்னமே தீர்க்க எண்ணுவது
அரசாங்கக் கூலிகளின்
அட்டூழிய நடவடிக்கை
அதிகபட்சம் அவர்களால்
நம்மைக் கொல்லமுடியும்
வெல்ல முடியாது.
