கவிதையுழத்தி..!
—————————— —–
பண்படாத சொல் நிலத்திலும்
நீ புண்பட்டு உழுத எண்ணப் பயிர்களினால்
எங்ஙனம் எவ்விதம் பயனுறுவாய்
என்றழுது புலம்பாதே.
விண் விட்டுப் பாய்ந்த
மழை சுமந்தவர்கள்..
மண் தொட்டு வேய்ந்த
மனம் புரிந்தவர்கள்..
இம்மட்டும் நீ புனைந்த
வேர்த்திரளின் கண்பட்டு
கடவுளானவர்கள்..
இலக்கிய இலக்கணத்தால்
உன் தலைக்கணம் உடைத்தவர்கள்
என்பவர்கள் உடனிருக்க..
இக்கணம் வரை நீ
எப்பொழுதும் போல்
எழுத்து நிலம் நோக்கி
கழுத்தை நுழை..!
பற்கள் மென்று விழுங்காத
சொற்களையும்
படைத்தவனே அறியாத
அவனின் பிரபஞ்சத்தையும்
உத்தரவிட்டு அழை..!
மிருகம் கடவுளாயும்
கடவுள் மனிதனாயும்
உடை மாற்றும் வரை
மடை மாற்று கவிதைகளை.
எழுதாத வரை மூச்சையிறுத்தி
உயிரின் உள் வரை பயணம் கொள்..
மெதுவாய் மெதுவாய்
சொற்களை வெளியேற்று.
மனக்குடம் தாளாமல்
பிறப்பிடம் நோக்கிப் பாயும்
கவிதையென்பது தான்..
உடற்பிழைத் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்ட
உயிர்மெய் அகண்டம்.
ஜே.ஜே.அனிட்டா

