புலம்பெயர் தொழிலாளர்களின் வலியை உணர்த்தும் கவிஞர் இளம்பிறையின் கவிதைகள்…!

 

துயரச் சாலை

*******************

Yogi Adityanath bans migrants returning to UP on foot, says govt ...

அடுக்ககங்களை உருவாக்கி
அவற்றிற்கு
உயிரைப் பணயமிட்டு
தொங்கிக் கொண்டே
வண்ணந் தீட்டியவர்கள்

மேம்பாலங்கள் கட்டியவர்கள்
எலிகளைப்போல் பூமிக்குள் வளைகளிட்டு
பெருநகர விரைவு ரயில்
தடம் போட்டுத் தந்தவர்கள்

நீங்கள் வசதியாக உட்கார்ந்து
வாய்ப்பந்தல் போடும்
அத்தனைக் கான்கிரேட் கூரைகளையும்
அந்தரத்தில் நின்றுழைத்து
அமைத்துக் கொடுத்தவர்கள்

சாலைகள் போட
வேகாத வெயிலில்
வெந்து தணிந்தவர்கள்
சுமைவண்டி இழுத்தவர்கள்

முதுகெலும்பு வளைய வளைய
விதைத்தவர்கள்
நீரூற்றியவர்கள்
காவல் காத்தவர்கள்
அறுவடை செய்து
உங்கள் கிடங்குகளை
நிறைத்துவிட்டு
பஞ்சம் பிழைக்க
சொந்த தேசத்தில்
அகதிகளாய் பிரிந்தவர்கள்

இன்னும்கூட
அவர்கள் உங்களின்
நினைவிற்கு எட்டவில்லையெனில்
கனவுக்காட்சி போல்
மங்கலாக வேணும்
மறக்கமுடியாத நினைவாக
அன்றொரு நாளில்
வரிசை வரிசையாய் நின்று
உங்களுக்கு
வாக்குப் பிச்சை போட்டார்களே
அவர்களே தான்

தலைகொள்ளாச் சுமையோடு
பற்றியெரியும் பாதைகளில்
செருப்புக்கும் கதியற்று
நடந்து கொண்டிருக்கிறார்கள்

நிழலுக்கு நிழல் ஓடி
நின்றுத் தவிக்கும் பிள்ளைகளின்
தாகத்திலும் பசியிலும்
நீண்டுக்கொண்டே இருக்கும்
பெருந்துயரச் சாலையை
எப்படியும் கடந்து விடலாமென
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்

பாதி வழியில்
தண்டவாளத்தில் நசுங்கியவர்கள்
விபத்தில் நொறுங்கியவர்கள்
ஜீவனில்லாமல்
செத்துப் போனவர்களுக்கெல்லாம்
என்ன கனவுகள்
இருந்திருக்கக்கூடும்

செத்தாலும்
சொந்த ஊரில் போய்
சாகவேண்டும்
என்பதைத் தவிர…

பசி

****** 

Among those who finally got on board a train: Man who lost one-yr ...

கட்டுப்பாடற்றவர்கள
என்னவந்தாலும்
இவர்களைத் திருத்தவே முடியாதென
தடைசெய்யப்பட்ட
சாலைகளில் வந்து நிற்கும்
ஏழைகள் பற்றி
இழித்துப்பேசும்
உங்களுக்கு
உத்திரவாதமிருக்கிறது
மூன்றுவேளை உணவிற்கு

ஒருநாளாவது போராடிப் பாருங்கள்
பசியுணர்வோடு

அவர்கள் எவ்வளவு
பொறுமைக் காத்திருக்கிறார்கள்
என்பது புரியும்.

மன்னித்து விடு

********************** 

Veeru Murugappan on Twitter: "The impact of #COVIDー19 has left ...

ஆயுதக் கிடங்குகளும்
போர் விமானங்களும்
அர்த்தமற்றக்
குப்பைகளாகின.
மரண ஓலங்களில்
மயங்கித் திரியும்
கண்ணுக்குப் புலப்படா
வைரஸின் முன்

அசைவற்றுக் கிடக்கும்
இரையுண்ட மலைப்பாம்புகள் போன்ற
பயண வழிப்பாதைகளில்
தன்னந்தனியாக
காய்ந்து கிடக்கின்றன
கதிரும் நிலவும்.
மனித ஒலியற்ற அச்சத்தில்
மவுனித்திருக்கிறது காற்றும்.

வானூர்திகளின்
இரைச்சலற்றவெளியை
குழப்பத்துடனேயே கடக்கின்றன
கூடடையும் பறவைகள்.

நடுங்கிக் கொண்டிருக்கிறது
உயிர்க்கோளத்தின் ஆன்மா
தனித்துச் சிக்கிய
பனிமலைப் போர்வீரனாக.
தாங்க முடியவில்லை
கனவிலும் நினையாத
மானுட குலத்தின்
ஊன் உயிர் வாதைகள்

எம் கீழ்த்தரமான சூழ்ச்சிகளையும்
தந்திரங்களையும்
மன்னித்துப் போய்விடு
மரண கொரோனாவே

கடவுள்களைக்
காப்பாற்றுவதற்கேனும்
மனிதர்கள் வேண்டும்.
குழந்தைகளை
விளையாட விடு
வாசல்களில் .