நினைவுகளை எரித்தல்
*****************************
‘’ஒரு மனிதன் இறந்த பிறகு என்ன மிச்சமாகிறது?…” கவிஞன் கணக்கெழுதுகிறான். சுடுகாட்டில் சில எலும்புத் துண்டுகளும்… சில உதடுகளின் உச்சுக் கொட்டுதல்களும்! அவ்வளவுதான். கனவுகள் கடலைவிடப் பெரிதாக விரிந்து கிடந்தன…. கடைசியில் பரந்து விரிந்த கடலுக்குள் அடையாளமே இல்லாத அஸ்தியாகக் கரைந்துவிடுகின்றன.

வாழ்க்கை முழுவதும் பேசிய வக்கணையான பேச்சு கடைசியில் விக்குள் மேல்வந்து நாக்கு விழுந்துவிடுகிறபோது வெளியில் வர முடியாமல் பிணத்திற்குள்ளேயே புதைந்துவிடுகிறது. நினைத்தால் கூட தருமம் செய்ய முடியாத நேரம் அது. நினைத்ததைக் கூடச் சொல்ல முடியாத நெருக்கடியான நிலைமை அது. இதற்கு வள்ளுவத்தை விடச் சிறந்த வாக்குமூலம் ஏது?
“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும்.” (குறள் 335)

இறந்து போனவர் படுத்திருந்த இரும்புக் கட்டிலில் படுக்கக் கூட பயமாயிருக்கிறது. அவர் உபயோகித்த பொருள்களைக் கூட பழைய இரும்பு சாமான்காரரிடம் எடைக்குப் போட்டு மரண பயத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது மனம். சுடுகாட்டில் கிடக்கும் மெத்தையும் தலையணையும் பிச்சைக்காரர்களுக்குக் கூடப் பிரயோசனப் படுவதில்லை. இறந்து போனவரின் உடைகள் இருப்பவர்களின் மனசுக்குப் பொருந்துவதில்லை.

“மரணித்துப்போன மனிதனின்
இரும்புக் கட்டில்
முற்றத்து வேம்போரம் சாய்ந்து கிடக்கிறது
பழைய இரும்பு வியாபாரியின்
வருகைக்காக.

எரிக்கக் கொண்டுபோன மின்மயான
வாசல் குப்பைத் தொட்டியில்
மெத்தையும் தலையணையும்.

உபயோகித்த துணிகள் மூட்டையாக
வேட்டி சட்டைகள் சலவையாளுக்குக்
கொடுப்பதற்காக வேலியோரமாய்க்
கிடக்கிறது.”

எப்போதேனும் ஒரு முறை போல அவர் பயன்படுத்திய வெற்றிலைப் பெட்டியைப் பாடையிலேயே பத்திரமாக வைத்து அனுப்புகிறோம். எப்பொழுதும் விரலிலேயே போட்டிருந்த மோதிரத்தை மறக்காமல் கழற்றிக் கொள்கிறோம். அவரிருந்த வீட்டில் இப்போது படத்திற்கு மட்டும்தான் அனுமதி. அது கூட பூஜையறையில் அல்ல… கூடத்தில் ஆணி அறைந்து மாட்டிவைக்கப்படுகிறது அவரது நிழற்படச் சிலுவை!

அவர் தன் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்து சேர்த்துவைத்த அத்தனை சொத்துகளையும் ஒரு தாளில் பொதிந்து காட்ரெஜ் பீரோவில் கவனமாகப் பூட்டி வைத்தபின்புதான் அவரை வழிகூட்டி அனுப்புகிறோம். அவர் போனவுடனே அவர் எண்ணி எண்ணிப் பார்த்த பணத்தாள்கள் செல்லாமல் போய்விடுவதில்லை.

“வெற்றிலைப் பெட்டியும்
கண் கண்ணாடியும்
அவருக்குப் பிரியமான மூக்குப்பொடி டப்பாவும் பாடையுடன் கொண்டு போக

இடதுகை மோதிரமும்
வெள்ளி அரைஞாணும் சாமி மாடத்தில்.

தனிச் சுடராய்க்
குத்துவிளக்கெரிய புகைப்படம்

தவிர சுவடற்றுப் போன மனிதரின் விலைமதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் வங்கிப்புத்தகமும் பணத்தாள்களும்
உறங்குகிற அறை கவனமாகப்
பூட்டிக்கிடக்கிறது.”

தெருவில் இறைந்துகிடக்கும் ரோசாப் பூக்கள், சில சில்லறைக் காசுகளைப் போல அவரது நினைவுகள் சுழன்றாலும் கொஞ்ச நேரத்தில் தெருவாசிகள் பெருக்கி வாரிவிடுவதைப்போல மனசும் கொஞ்ச நாளில் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்கிறது. நகரங்களிலோ அப்படியான அவசியம் கூட இல்லாமல் அத்தனையும் காற்றில் அடித்துப் போய்விடுகின்றன.

இறந்து போனவர்களைப் புகழ்வது போல அவர்களின் தடங்களை அழித்துவிடுவதாகப் புகார் செய்கிறான் கவிஞன். புகழ்வது கூட இல்லையாம்… புகழ்வதான பாவனைகளாம்… தெருவைச் சுத்தம் செய்கிற தெருவாசிகளின் துடைப்பங்கள் அழிப்பான்கள் போலத் தோற்றம் தருகின்றன. பெருக்கித் தள்ளுவதைச் சுவடுகளை அழிப்பதற்கானக் குறியீடாகப் பயன்படுத்துகிறான் கவிஞன். இறந்து போனவர்கள் கொஞ்ச நாளில் மறந்து போனவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்!

“பிணவூர்தி கடந்ததும்
பொரியும் சாமந்திப்பூக்களும்
சில்லறைக் காசுகளும்
இறைந்து கிடக்கிற தெருவைத் துடைப்பங்களால் துப்புரவு செய்து
நீர் தெளித்துக் கழுவிவிடுகிற
தெருவாசிகள்

நினைவுகூர்வதான, புகழ்வதான பாவனைகளுடனே
சகஉயிர் வாழ்ந்த தடயங்களை
சுவடின்றி அழிப்பதில்
குற்றவுணர்வேதும் கொள்வதேயில்லை
குரூர மனிதர்கள்.”

// கையொழித்தல் //

மரணித்துப்போன மனிதனின்
இரும்புக் கட்டில்
முற்றத்து வேம்போரம் சாய்ந்து கிடக்கிறது
பழைய இரும்பு வியாபாரியின்
வருகைக்காக.

எரிக்கக் கொண்டுபோன மின்மயான
வாசல் குப்பைத் தொட்டியில்
மெத்தையும் தலையணையும்.

உபயோகித்த துணிகள் மூட்டையாக
வேட்டி சட்டைகள் சலவையாளுக்குக்
கொடுப்பதற்காக வேலியோரமாய்க்
கிடக்கிறது.

வெற்றிலைப் பெட்டியும்
கண் கண்ணாடியும்
அவருக்குப் பிரியமான மூக்குப்பொடி டப்பாவும் பாடையுடன் கொண்டு போக

இடதுகை மோதிரமும்
வெள்ளி அரைஞாணும் சாமி மாடத்தில்.

தனிச் சுடராய்க்
குத்துவிளக்கெரிய புகைப்படம்

தவிர சுவடற்றுப் போன மனிதரின் விலைமதிப்புள்ள சொத்துப் பத்திரங்களும் வங்கிப்புத்தகமும் பணத்தாள்களும்
உறங்குகிற அறை கவனமாகப்
பூட்டிக்கிடக்கிறது.

பிணவூர்தி கடந்ததும்
பொரியும் சாமந்திப்பூக்களும்
சில்லறைக் காசுகளும்
இறைந்து கிடக்கிற தெருவைத் துடைப்பங்களால் துப்புரவு செய்து
நீர் தெளித்துக் கழுவிவிடுகிற
தெருவாசிகள்

நினைவுகூர்வதான, புகழ்வதான பாவனைகளுடனே
சகஉயிர் வாழ்ந்த தடயங்களை
சுவடின்றி அழிப்பதில்
குற்றவுணர்வேதும் கொள்வதேயில்லை
குரூர மனிதர்கள்.

ஜெயாபுதீன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *