கவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்

கவிதை

பாம்பாட்டி / நீலீசன்

காதல் என்னும் தீராநதியில் முங்கி எழாமல் கவிதைக் குளியல் நடப்பதேயில்லை.  .காமமும் மோகமும் கவிஞர்கள் பயன்படுத்தும் காமதேவனின் கையெறி பாணங்கள்.  இது  உடலின் அவசம். உயிரின் ஈர்ப்பு.  ஆன்மாவின் ஆலாபனை.  சரீரங்கள் வீணைகளாகும் சந்தியா ராகம்.

மண்குடத்தினுள் சாமத்தை எதிர்பார்த்து ஒளிந்து கிடக்கும் பாம்பு.  காமத்தை ஒரு பாம்பினைப் போல உருவகிக்கிறான் கவிஞன். பாம்பும் காமத்தைப் போல ஒளிந்து கொள்வது;  உயிரை இம்சிப்பது; பயத்தின் மிரட்சியைப் ஸ்பரிசிப்பது! அதன் நெளிதல் உயிரை அசைக்கிறது.  அதன் பளபளப்பு கண்களைக் கவ்வுகிறது.  நினைவில் கரியிலை பொதிந்த சுட்ட அயிலைக் கருவாட்டின் வாசம்.  மகிழ்வின் பெருங்கங்காக மனம் பூத்துக் கனல்கிறது.

“நினைவின் ஆலிங்கனத்தில் களியுண்ட காலம் மெல்ல

ஊர்ந்தது கருக்கல்வரை

விளக்கணைந்து இருளின் அம்பாரம் உயர கண் துலங்கியது

அவளுக்கு”

நினைவின் ஆலிங்கனத்தில் களியுண்ட காலம் மெல்ல ஊர்ந்தது கருக்கல்வரை. குதிரையை விட்டால் காமத்திற்குப் பாம்புதான் மிகவும் பொருத்தமான உருவகம்.  கட்டுக்கடங்காத குதிரை கட்டிலுக்கு அடங்காதது. கடிவாளமற்றக் குதிரை காட்டில் திரிவது. பாம்புதான் கருக்கல்வரை மெல்ல ஊர்ந்து செல்லும். கருக்கல்வரைக்கும் கலவி சுகம்.  இருளின் அம்பாரம் அவளின் மார்பின் மதர்ப்புகளாக உயருகின்றன. கண் துலங்கியும் காமம் விளங்குவதில்லை.

“கண்ணாடி வளையல்களோடு கொலுசும் மெல்லச்சுருண்டது

குடுவைக்குள்

கதவிடுக்கில் கசிந்து வழிந்தோடியது மண்குடம் பெண்மையின் வேட்கைசுமந்து

சீலாந்தி வேரணையில் நாணிச்சாய்ந்தவளை

இழுத்துப் போர்த்தியது

பந்தப்பாய்ச்சல் திரும்பிய

கிழக்குவாசல்

சுடலைமாடனின்

பனையேறி மணம்”

கண்ணாடி வளையல்களும் கொலுசும் பாம்புகளாக குடுவைக்குள் மெல்லச் சுருள்கின்றன.  பெண்மையின் வேட்கை பெரு வேட்கை.  அது வெள்ளமெனத் திரள்வதில்லை.  புது மண்குடத்தில் ஊற்றி வைத்த நீர் குடத்தின் வெளியில் முத்து முத்தாகக் கசிவது.  அவளது வேட்கைதான் வெட்கத்தின் வியர்வைகளாகும்.  காமத்தின் நெடி கள்வெறி போன்றது. மணம் மூக்கைத் துளைக்கும்.  மூச்சை அடைக்கும்.

“மார்புகள் மஞ்ஞணம் சாத்தி சிவந்த கணம்

திருட்டுக் கள்ளும் சுட்ட கருவாடும்

சுவையூறிக்களித்து

தீரா இன்பம் கழுவிய வியர்வை நெளிய

சீறியாடின பிணைந்த நாகங்கள்”

திருட்டுக் கள்ளும் என்கிற வார்த்தைகளால் கவிஞன் களவின்பமெனச் சுட்டிவிடுகிறான்.  மார்புகள் மஞ்ஞணம் சாத்தி சிவந்த கணம் என்பதில் உடல் நாகங்களின் பின்னிப் பிணையும் ஆலிங்கனங்களைக் கணக்கிடுகிறான் கவிஞன்.  தீரா இன்பம் கழுவிய வியர்வை நெளிய…. வியர்வை நெளிகிறது என்கிற பதப் பிரயோகம் முக்கியமானது.  நாகங்களின் பிணைவில் வியர்வைகளும் நாகங்களாக நெளிகின்றன.  சீறியாடின பிணைந்த நாகங்கள்!  கவிதை இங்கேயே முடிந்து விடுகிறது.  கலவி முடிந்தாலும் சுகங்கள் சொட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?  அப்படி இதற்கு மேலும் சில வரிகள் குட்டி நாகங்களாக நெளிந்தபடி இருக்கின்றன.

இதழ்: மகுடி கேட்டு ஆடல் ஏனோ!

இனி முழுக் கவிதையையும் படியுங்கள்….

பாம்பாட்டி/ நீலீசன்

மண்குடத்தினுள் சாமத்தை எதிர்பார்த்து ஒளிந்து கிடந்தது

கரியிலை பொதிந்த சுட்ட அயிலைக்கருவாடு

வாசத்தின் வாய்பொத்தி மகிழ்வின் பெருங்கங்கு

பூத்துக்கனன்றது மனதில்

நினைவின் ஆலிங்கனத்தில் களியுண்ட காலம் மெல்ல

ஊர்ந்தது கருக்கல்வரை

விளக்கணைந்து இருளின் அம்பாரம் உயர கண் துலங்கியது

அவளுக்கு

கண்ணாடி வளையல்களோடு கொலுசும் மெல்லச்சுருண்டது

குடுவைக்குள்

கதவிடுக்கில் கசிந்து வழிந்தோடியது மண்குடம் பெண்மையின் வேட்கைசுமந்து

சீலாந்தி வேரணையில் நாணிச்சாய்ந்தவளை

இழுத்துப் போர்த்தியது

பந்தப்பாய்ச்சல் திரும்பிய

கிழக்குவாசல்

சுடலைமாடனின்

பனையேறி மணம்

மார்புகள் மஞ்ஞணம் சாத்தி சிவந்த கணம்

திருட்டுக் கள்ளும் சுட்ட கருவாடும்

சுவையூறிக்களித்து

தீரா இன்பம் கழுவிய வியர்வை நெளிய

சீறியாடின பிணைந்த நாகங்கள்

அது கடித்ததா அவள் கடித்ததா

அவளுக்குப் பிடித்த பாம்பா அவளைப் பிடித்த பாம்பா

அச்சமுணர்ந்தவன் காடதிர வெடித்துச் சிரிக்கிறான்

குளிரின் வேரில் கட்டிப் பிடித்தபடி

இருள் அலைய இன்னும் கேட்கிறது அவன் சிரிப்பொலி

வளர்ந்த வம்சத்தின் நிழலமர்ந்து யோசிக்கிறாள்

மனதில் பிணைந்தாடும் அவன் பாம்பாட்டத்தை நிறுத்த.

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/kavidhai-sannadham-by-nave-arul/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kavithai-sannadham-2/

தொடர்3ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-4-na-ve-arul-2/

தொடர் 5ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-5-na-ve-arul-2/

தொடர் 6ஐ வாசிக்க 

https://bookday.in/poetry-sannatham-6-na-ve-arul-2/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-7-na-ve-arul/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-8-na-ve-arul/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/poetry-sannatham-9-na-ve-arul/