கவிதை – சுகிர்தராணி
உக்கிரமான கவிதை; உரக்கப் பேசுகிறது; உண்மையைப் பேசுகிறது. குரல் அற்றவர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும். கையறுநிலையில் இருப்பவனின் குரல்… கார்காலத்து இடிமுழக்கம். அடிக்கிறபோது அலங்காரமாக அழமுடியாது. வலிக்கிறவன் வாய்விட்டுக் கதறுகிறபோது வர்ணனையின் வாய்பாடு செல்லுபடியாகாது.
கண்ணீர்த் துளிகள் வெப்ப மூச்சுகளாக வெளிப்படுகின்றன. அவை விழுந்த செவிகளில் வீறிட்ட அலறல்கள்; அவை உறைந்த இதயங்கள் உடைந்து சிதறுகின்றன. வேறுவிதமாகச் சொன்னால், ஒரு பனிமலையில் செருகப்பட்ட உயிருள்ள உடல்போல கவிதை விறைத்துப்போய்க் கிடக்கிறது.
எங்கள் சமையல் வேண்டாமெனில் வேறு வழியென்ன? சாப்பிடாமலே செத்துப்போ. எங்கள் மருத்துவம் வேண்டாமெனில் வேறென்ன? மருந்துண்ணாமலே மரித்துப்போ. எங்கள் செவிலியர் தொட்டுப் பிரசவம் பார்த்தால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமெனில் நீயே பிரசவம் பார்த்துப் பெற்றெடுத்துக் கொள். இப்படி ஒவ்வொரு தொழிலிலும் தீட்டுப் பார்ப்பவனுக்கு எதிராகத் தீப்பந்தம் ஏந்துகிற கவிதை.
தன் மலத்தைத் தானே அள்ள முடியாதவன் அடுத்தவன் மலத்தை அள்ளச் சொல்லி ஆணையிடுகிறான். ஒரு மணல் வீடு கட்டப் பவிசு இல்லாதவன்தான் அடுத்தவன் வீட்டுக் கூரையைக் கொளுத்துகிறான். நாறிவிடக் கூடாதே என்று உனது பிணத்தை எரிப்பவர்களைப் பிணத்தைப் போல வெறித்துப் பார்க்கிறாய்….எரியூட்டப்படாத பிணமாகத் திமிரில் விறைத்துத் திரிகிறாய்.
கடைசியில் கவிதை இப்படி முடிகிறது….
“நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதியவராக இருக்கிறோம்
இதுவும் உனக்கு வேண்டாமெனில்
தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.”
என்ன செய்வது சட்டம் இயற்றியவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். சட்டத்தை அவமதிப்பவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஒரு தேசத்துக்கு இதைவிட பெரிய தண்டனை வேறென்ன இருக்கமுடியும்?
இனி முழுக் கவிதை….
தயவுசெய்து தற்கொலை செய்துகொள்
நாங்கள்
சமையலராக இருக்கிறோம்
நாங்கள் சமைத்த உணவு
உனக்கு வேண்டாமெனில்…
நாங்கள்
மருத்துவராக இருக்கிறோம்
உனக்கு நீயே வைத்தியம் செய்துகொள்
செவிலியராக இருக்கிறோம்
உன் பிரசவத்தை
நீயே பார்த்துக் கொள்
பிணத்தை எரிப்பவராக இருக்கிறோம்
உன் பிணத்தை
நீயே எரித்துக் கொள்
பொறியாளராக இருக்கிறோம்
உன் கட்டடத்தை நீயே கட்டிக் கொள்.
வழக்கறிஞராக இருக்கிறோம்
உனக்கு நீயே வாதாடிக் கொள்
முடி வெட்டுபவராக இருக்கிறோம்
உன் மயிரை
நீயே வெட்டிக் கொள்
ஆசிரியராக இருக்கிறோம்
உன் பிள்ளைகளுக்கு
நீயே சொல்லிக்கொடு
ஓட்டுநராக இருக்கிறோம்
உன் போக்குவரத்தை
நீயே பார்த்துக் கொள்
கூலிகளாய் இருக்கிறோம்
உன் சுமைகளை நீயே தூக்கிக் கொள்
மலம் அள்ளுபவராக இருக்கிறோம்
உன் மலத்தை நீயே அள்ளிக் கொள்
சாக்கடை வாருபவராக இருக்கிறோம்
உன் சாக்கடையை நீயே வாரிக் கொள்
கலப்புமணம் புரிந்தவராக
இருக்கிறோம்
உன்னையே நீ புணர்ந்துகொள்
நாங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தை
எழுதியவராக இருக்கிறோம்
இதுவும் உனக்கு வேண்டாமெனில்
தயவுசெய்து தற்கொலை செய்துகொள்.
-சுகிர்தராணி
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-6-na-ve-arul-2/
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க
தொடர் 12ஐ வாசிக்க
Leave a Reply
View Comments