பலியாடுகள்
கவிதை – சந்துரு
ஜீ டிவி தொடர் புரட்சியாளர் அம்பேத்கர் இல் சிறுவன் பீம் ராவ் கேட்கிற கேள்விகளை ஒவ்வொரு சிறுவனையும் கேட்க அனுமதித்தால் சமூகம் மேலும் நாகரிகமடையும். அதற்கு வாய்ப்புகள் இல்லாத கல்வி முறையை அமுல்படுத்தத் துடிக்கும் அரசுகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். கல்விமுறை தோல்வியுறும் இடத்தில் கவிதை வெற்றிபெற்றுவிடுகிறது. கவிதைகள் கோடிட்ட இடங்களை நிரப்பிவிடுகின்றன. கவிஞனுக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது. அந்தக் கேள்வி கேட்கும் மனோபாவம்தான் சமூகத்தின் ஜீவநாடி.
கவிஞன் கவிதையை வெகு இயல்பாக நகர்த்துகிறான். எதார்த்தத்தை நம் கண்முன்னே வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறான். நாமும் அவன் எதிர்பார்க்கிற விடைகளுடன் மனதுக்குள் தலையாட்டி விடுகிறோம். இதுதான் கவிஞனின் வெற்றி. இது கலையனுபூதியில் கவிதையின் வெற்றி.
காமதேனு பசுவைச் சொல்லிச் சொல்லி இன்னும் எத்தனைக் காலத்துக்குக் கதையளக்கப் போகிறோம்? இன்னுமா பால் கறந்து கொண்டிருக்கும்? இது ஆவின் பாலகத்தின் அ புராண காலம். தவ பலத்தால் சாகாவரம் பெற்ற முனிவர்கள் இறந்தார்களா ? இல்லையா? இல்லையெனில் அவர்கள் எங்கிருக்கிறார்கள்?
கோயில் குளங்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் நிறைந்த காலத்தில் அமுதசுரபியை யாரேனும் பார்த்திருக்கிறோமா? இருக்கிறது எனில், எந்த மணிமேகலையிடம் இருக்கிறது?
ஊருக்கு ஊர் அய்யனார்களும், சுடலை மாடன்களும், மாரியம்மாள்களும் இருந்தாலும் இன்னும் அசுரர்கள் அக்கிரமங்களைச் செய்தபடியே இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் தெரிந்த அசுரர்கள். அதனால் அழிக்க முடிவதில்லை. இப்போதெல்லாம் ஏன் அவதாரங்கள் வதம் செய்வதில்லை என்பது ஒரு முக்கியமான கேள்வி.
தெய்வங்களில் ஆண் தெய்வங்களைவிட பெண் தெய்வங்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். சிவனைப் போல பார்வதி கால் தூக்கி நடனமாட முடிவதில்லை. அது என்ன? எப்போதும் தோல்வியின் தூண்டிலைப் பெண் மீன்களுக்கே போடுகிறார்கள்?
இந்தக் கேள்விகள் எல்லாம் எளிமையானவை. எல்லோருமே பதில் சொல்லக் கூடியவை. ஆனால் கேள்வி கேட்பதற்கோ அல்லது பதில் சொல்லுவதற்கோ கூட மனிதர்களை அலைக்கழிப்பது எது? அச்சம். அதைக் கவிஞன் அடையாளம் காட்டுகிறான். சட்டங்கள் மூலம் சங்கிலியிடப்படுகிறது என்கிறான் கவிஞன். நிறுவனங்கள் மூலம் நிஜங்கள் நிர்மூலமாகின்றன. விளைவு?
“ஓடிக்கொண்டிருக்கிறோம்
பலிகொடுப்பவன்
நீட்டும் தழைகளுக்காக
ஓடுபவர்களுடன்
சேர்ந்து…!”
நாம் அனைவரும் பலியாடுகள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தழை. ஆனால் எல்லோரது கழுத்திலும் மாலைகள் எல்லோரது முகத்திலும் மஞ்சள் குங்குமம். வேண்டாம் என்று தலையாட்டினாலும் வெட்டி விடுகிறார்கள். இனிக் கவிதையைப் படியுங்கள்.
வற்றாமல் சுரந்துகொண்டிருந்த
காமதேனுவுக்கு
எப்போது
மடி வற்றியிருக்கும்…
தவ பலத்தால்
சாகா வரம்பெற்ற முனிவர்கள்
எப்போதுதான்
மரித்திருப்பார்கள்…
அள்ளக் குறையாத
அமுத சுரபி இப்போது
யார் வசமிருக்கக்கூடும்…
நீட்டிக்கப்பட்டிருக்குமா
கடவுளுடன் இருக்கும்
விலங்குகளின் ஆயுள்…
மக்களை ஏமாற்றி
அநீதி செய்வோரை
இப்போதெல்லாம்
ஏன் வதம் செய்வதேயில்லை
அவதாரங்கள்…!
ஒப்பிட்டளவில்
ஆண் தெய்வங்களிடம் மட்டும்
அதீத அதிகாரங்களெதற்கு…
எழுகின்ற கேள்விகள் யாவற்றுக்கும்
பதில்கள் கிடைத்தும் கிடைக்காதவாறு
அச்சத்துக்குள் அடைக்கப்பட்டு
சட்டங்கள் மூலம்
மூளைக்கு சங்கிலியிடப்பட்டது
சற்றும் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
பலிகொடுப்பவன்
நீட்டும் தழைகளுக்காக
ஓடுபவர்களுடன்
சேர்ந்து…!
சந்துரு…
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர்3ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-3-indrajalam-na-ve-arul/
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
https://bookday.in/poetry-sannatham-6-na-ve-arul-2/
தொடர் 7ஐ வாசிக்க
தொடர் 8ஐ வாசிக்க
தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 10ஐ வாசிக்க
தொடர் 11ஐ வாசிக்க
தொடர் 12ஐ வாசிக்க
தொடர் 13ஐ வாசிக்க
Leave a Reply
View Comments