கவிதைச் சந்நதம் 15 – நா.வே.அருள்



வாழ்க்கையின் சங்கீதம்

கவிதை அமுதன் மகேஷ்வர்மா

வாழ்வதற்காகத்தான் வருகிறார்கள் மனிதர்கள்.  ஆனால் இறந்து போகிறார்கள்.  சிலர் வாழ்ந்து இறக்கிறார்கள்.  சிலர் வாழாமலேயே இறக்கிறார்கள்.  சிலர் இறந்தும் வாழ்கிறார்கள்.  சிலர் வாழும்போதே இறந்துகொண்டேயிருக்கிறார்கள்.

வாழ்க்கை என்னவென்று புரிந்துகொள்வதற்கு முன்பே வாழ்க்கை முடிந்து போகிறது.  வாழ்க்கையை வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதில் ஏன் இந்த மனிதர்களுக்கு இத்தனை ஆவலோ தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை.  இந்த நேரத்தில் நகுலன் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

“இருப்பதற்காகத்தான் வருகிறோம். 

இல்லாமல் போகிறோம்”

இறந்துவிட்டவரைப் பற்றிச் சொந்த பந்தங்கள் இறந்ததாகப் பேசிச் செல்கிறார்கள்.  கவிஞன் தனது பேனாவைத் திறக்க ஆரம்பிக்கிறான்.  அவனது மைத்துளிகள் சிதறுகின்றன….

இறந்து போனவர் வீட்டில் எட்டிப்பார்க்கிறான் கவிஞன்.  இப்போதுதான் இறந்து போனார் என்பதை மனம் நம்ப மறுக்கிறது.

“இருபது வருடங்கள் முன்னாடி ., அவர்

மனைவி இறந்த பிறகு சாப்பிட்டாயா .,

என்று யாரும் கேட்காத நேரத்தில் .,

அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை”

கவிஞனின் மைத்துளிகளில் கண்ணீரின் கசிவு.  இருக்கின்றபோதே புறக்கணிக்கப்பட்டவன் பிணத்துக்குச் சமமாகிவிடுகிறான்.  அவன் வசிக்கிற வீட்டில் கல்லறை வாசம்!  வாழ்கின்றபோதே இறந்துவிடுகிற மனிதர்களின் வலி அதிகம். புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையின் வலி மரணத்தைவிடக் கொடியதாகிறது.  மளமளவென சரிந்த மனிதனின் பிம்பம் சோகத்தைப் பிழிகிறது.

மரணம் ஒரு மனிதனை ஒரேயடியாக வீழ்த்திவிடுகிறது.  ஆனால் வாழ்க்கை அப்படியல்ல. ஒரு மனிதன் ஒரு முறை இறந்தும் யாரும் ஒத்துக்கொள்ளாதபோது மீண்டும் சாகடிக்க முயற்சி செய்கிறது.  மறுபடியும் வீழ்த்த வெறிகொள்கிறது.

“பொண்டாட்டி போனதுமே போய்த்

தொலைய வேண்டியதுதானே என்று

காதுபட மருமகள் பேசிய போது

அவர் இறந்திருந்தார் .

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை”.

இரண்டாம் முறை இறந்துபோகிறபோது அவருக்கு மரணம் மரத்துப் போகிறது.  என்ன செய்வது? மீண்டும் இறப்பதற்காக வாழ்ந்தாக வேண்டுமே! இங்கே வாழ்க்கை என்பது மூச்சு விட்டுக் கொண்டிருப்பதற்கான முயற்சி…. அவ்வளவுதான்.

“காசு இங்கே மரத்திலேயா காய்க்குது

என்று மகன் அமிலவார்த்தையை வீசிய

போது .,

அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க

வில்லை ”.

இப்போது அவர் மீண்டும் மீண்டும் இறப்பதற்காக உயிர் பிழைத்திருக்கிறார். உயிர் வைத்திருப்பவன் கண்ணீர் அமிலமாகிறபோது கவிஞன் தன் பேனாவில் முள்ளைச் செருகி எழுதுகிறான்.  கவிஞனின் வார்த்தைகள் கவிதையைச் சுட்டெரிக்கின்றன.  மீண்டும் மீண்டும் சாகடிப்பதற்காகவா வாழ்க்கை மனிதனை உயிருடுன் ஊசலாட விட்டிருக்கிறது?



கவிஞன் வெறுமனே வேடிக்கை பார்ப்பவன் அல்லன்.  அவன் வினையாற்றுபவன். யார் கண்ணிலும் இப்படியொரு பிணம் தட்டுப்படக் கூடாது என்று நினைக்கிறான். மரணகீதம் இசைக்கும் பியானோ அல்லது வயலின் போல கவிதையின் கடைசி வரிகள் இதயத்தைக் கீறிவிடுகின்றன.

“நீங்கள் செல்லும் வழியில் இப்படி

யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டு

செல்லுங்கள்.

……..வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல.

வாழ வைப்பதும்தான் .”

நம்மால் முடியாதா என்ன?  நாமும் யாரையாவது வாழ வைக்கலாம் அல்லவா?

 

அமுதன் மகேஷ்வர்மா Amudhan maheshvarma .கவிதை

அவர் இறந்து விட்டார் . அடக்கம்

செய்யணும் . என்று சொல்லி கொண்டே

சென்றார்கள் சொந்த பந்தங்கள் .

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை

ஆனால் இப்போது தான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை .,

இருபது வருடங்கள் முன்னாடி ., அவர்

மனைவி இறந்த பிறகு சாப்பிட்டாயா .,

என்று யாரும் கேட்காத நேரத்தில் .,

அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க

வில்லை .

பொண்டாட்டி போனதுமே போய்த்

தொலைய வேண்டியதுதானே என்று

காதுபட மருமகள் பேசிய போது

அவர் இறந்திருந்தார் .

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் என்று வாழ்ந்த போது ..,

அவர் இறந்திருந்தார் .

யாருமே கவனிக்க வில்லை .

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது

என்று மகன் அமிலவார்த்தையை வீசிய

போது .,

அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க

வில்லை .

என்னங்க, ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு தலை

முழுகிட்டு வந்திடுங்க ., என்று காதிலே

விழுந்த போதும் ..,

அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க

வில்லை .

உனக்கென்னப்பா .,பொண்டாட்டி

தொல்லை இல்லை என்று வாழ்த்துவது

போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர்

இறந்திருந்தார் .

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

.

இப்போது தான் இறந்தாராம்

என்கிறார்கள் .எப்படி நான் நம்புவது .

நீங்கள் செல்லும் வழியில் இப்படி

யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டு

செல்லுங்கள்.

இல்லையேல் . உங்கள் அருகிலேயே

இறந்து கொண்டிருப்பார்கள் . புரிந்து

கொள்ளுங்கள் ..

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல.

வாழ வைப்பதும்தான் .

Amudhan maheshvarma .