கவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்



தெருமழைத் திருவிளையாடல்கள்

கவிதை – கார்குழலி ஸ்ரீதர்

எளிய கவிதை; ஆனால், மனதில் உட்கார்ந்து மழை பெய்கிறது! எல்லோருக்கும் வசப்படும் எளிய காட்சிகள்தாம்.  எனினும், மனசை வசியம் செய்துவிடுகிற மழைக் காட்சிகள்!

தூறத் தொடங்கியதும் தெருவில் காணும் திருவிளையாடல்கள்  ஆனால் இங்கே இந்தக் கவிதையில் தட்டுப்படுவது காட்சிக்கு எளியவர்களின் கால்களின் மிரட்சிகள்.  ஒரு சாலையோர மூதாட்டியைச் சடுகுடு ஆடவைக்கிற இயற்கையின் விசித்திர விளையாட்டு.  சக்தியற்றவளாக இருந்தாலும் இந்த ஆட்டத்தை அவள் ஆடித்தான் ஆகவேண்டும்.

கண்களை ஈர்க்கும் கணினி விளையாட்டுகள்!  அவை கணினி விளையாட்டுகள் அல்ல, கைவிலங்குகள் சின்னஞ் சிறுவர்களின் கண்கட்டு வித்தைகள். சித்தப் பிரமை பிடிக்கவைக்கும் சிறைச்சாலைகள்!  தொழில்நுட்பத் துரத்தல்களை மீறி இன்னும் தெருவில்  சைக்கிள் டயர்களை உருட்டி விளையாடுகிற சிறுவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மழை பெய்யத் தொடங்கியதும் உருட்டிச் செல்லும் சிறுவர்கள் தங்கள் வேகத்தைக் கூட்டுகிறார்கள்.  சிறுவர்களின் குச்சிக்கால்களை இறக்கைகளாக மாற்றிவிடுகிற மாயத்தைச் செய்துவிடுகிறது மழை!

சட்டென்று எதிரில் ஒரு சைக்கிள் ரிக்ஷா!  சொல்லப் போனால்,  சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் நமது வழிப்பயணத்தில் தவறவிட்ட வழிப்போக்கர்கள்.  பலரது பட்டியலில் அவர்கள் மனிதர்களே அல்ல! ஆனால் கவிதைக்குக் கண் அவிந்துபோவதில்லை.  கவிதையும் மழையும் ஒன்றுதானே?  தூறலிலிருந்து தப்பிக்க அவசரமாக மிதிக்கிறார்கள். அவர்களின் கெண்டைக்கால் தசைகளின் நரம்புப் புடைத்தல்களை அடையாளம் காட்டிவிடுகிறது பெய்யத் தொடங்கும் பிரியமான மழை.



கான்கிரீட் கட்டடங்களில் கேட்காத மழையின் தாளம் வேறெங்கு கேட்கும்?

“ஓலைக் குடிசைகளின்

கூரையில் சொருகப்பட்டிருக்கும்

வண்ணப் பிளாஸ்டிக் ” கூரைகளில்தான்!  வேறெங்கு கேட்கும்?  ஆனால் மழையின் தாளத்தை நனைபவர்கள் கேட்க முடியுமா?  தொப்பைக் கட்டையாய் நனைந்தவன் டூயட் பாடுவது சினிமாவில் மட்டுமே சாத்தியம்! ஒழுகும் இடங்களில் எல்லாம் பாத்திரங்கள் வைப்பதற்கே நேரம் போதாதபோது மழையின் தாளம் ரசனைக்காகுமா?

மழையைக் கொண்டாடும் கவிதைகள் ஏராளம்.  ஆனால், வறிய மனிதர்களின் வாழ்க்கையை அழிச்சாட்டியம் செய்வதும் மழைதான்.  அதைத்தான் சொல்வார்கள்…. “மழை எங்க பொழைப்புல பெய்யுது”.  உண்மைதானே?  எத்தனை பேர் நடைமுறைகளைச் சிதைத்துவிடுகிறது.  “பொழப்புல’ மண்ணைப் போட்டுவிடுகிறது!  இவை,  ஒரு நகரம் சார்ந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக கவிதை நடத்தும்  கண்டுபிடிப்புகள்.  பொதுவாக ஒரு கவிஞருக்கு மழைதரும் மனவெழுச்சி கவிதையில் அடங்காதது.  ஆனால் ஒரு தெரு வாழ்க்கையில் அது நடத்தும் திருவிளையாடல்கள் விபரீதமானவை.

சாதாரணமாக நகரும் கவிதைக் கேமரா சட்டென்று ஒரு இடத்தில் கண்கள் குத்திட்டு நின்றுவிடுகிறது….

“…தகரக் கூரைகளின்

பொத்தல்களின் வழியே

சரசரவென வழிந்து

கந்தல் மூட்டையையும்

நைந்த ஒற்றைப் பாயையும் நனைத்து

இரவுத் தூக்கத்தையும்

தொடரும் பகல்நேரப் பணியையும்

நமத்துப் போன விறகாக்குகிறது.”

மிகச் சரியான இடத்தில் கேமரா நிலைக்குத்தி நின்றுவிடுகிறது.  அதற்குமேல் நமது மனமும் நகர்வதாயில்லை.  இந்த எளிய நிகழ்வுதான் இந்தக் கவிதையை உன்னதமான இடத்திற்கு உயர்த்திவிடுகிறது.  கந்தல் மூட்டை நம் கண்ணுக்குத் தெரிகிறது.  நைந்த ஒற்றைப்பாயில் தூக்கமின்றிப் புரள்கிறோம்.  பகல்நேரப் பணி பாழாகிவிடுகிறது.  மொத்தத்தில் நாம் இப்போது நமத்துப் போன விறகென சொத சொதத்துப் போகிறோம்.  எரிமலைக்குள் போட்டாலும் எரிந்தடங்கப் போவதில்லை கவிதையின் கடைசிக் காட்சியால் சில்லிட்டுப்போன நம் மனம்!



இனி கார்குழலியின் கவிதை…..

திடீரென வானம் இருட்டி

வறியவரின் வசிப்பிடத்தில்

பெய்யும் மழை…

 

…சாலை ஓரத்தில்

கடை விரித்திருக்கும் முதியவளின்

கைத்தடிப் பிடியாக வளைந்த உடலும்

வெடித்த பருத்தித் தலையும் நனைய

உருப்படிகளை வீடுசேர்ப்பதற்காக

மண்ணில் பதிக்கும்

வலுவற்ற வளைந்த கால்களுக்கு

வேகம் கூட்டுகிறது.

 

…நிலம்தொட்டு உருளும்

சைக்கிள் டயர்களின் பின்னே

தரையில் பாவாமல் ஓடும்

குழந்தைகளின் குச்சிக் கால்களில்

பறவையைப்போல பறந்துசெல்லும்

மந்திர இறக்கைகளை ஒட்டுகிறது.

 

…இலக்கைச் சென்றடையும் துடிப்பில்

சைக்கிள் ரிக்சாவின் மிதிகட்டைகளை

எம்பியும் தள்ளியும் மிதிக்கும்

வறண்ட சோர்வுற்ற பாதங்களுக்கு

விசையைச் சேர்க்கிறது.

 

…ஓலைக் குடிசைகளின்

கூரையில் சொருகப்பட்டிருக்கும்

வண்ணப் பிளாஸ்டிக் தாள்களைக்

காற்றில் படபடக்க வைத்துத்

தனக்குக் கட்டியம்

ஒலிக்கச் செய்கிறது.

 

…தகரக் கூரைகளின்

பொத்தல்களின் வழியே

சரசரவென வழிந்து

கந்தல் மூட்டையையும்

நைந்த ஒற்றைப் பாயையும் நனைத்து

இரவுத் தூக்கத்தையும்

தொடரும் பகல்நேரப் பணியையும்

நமத்துப் போன விறகாக்குகிறது.

கார்குழலி