கவிதைச் சந்நதம் 17 | நா.வேஅருள்



நிறங்களின் விளையாட்டு

கவிதை

தேன்மொழி தாஸ் இன் “சமச்சீரற்ற சூத்திரம்”

நிறங்களை வைத்து ஒரு கவிதை விளையாட்டு. கவிதையை ஒரு பட்டியலிட்ட சூத்திரம்போல் படைத்திருக்கிறார் கவிஞர். நீருக்கு நிறமடிக்கும் வேலைதான் இந்தக் கவிதைக்குள் வார்த்தைகளைத் திணித்த வித்தை. இரவின் நிறத்தை இவரால் கரும் பச்சை என்று சொல்ல முடிந்ததுதான் இந்தக் கவிதையில் எனது ஈர்ப்பைக் கூட்டிய இடம். கரும் பச்சை பல குறியீடுகளைக் காட்டிவிட வல்லது. ஒரு வகையில் கரும் பச்சை கவிதையின் நிறம். கரும் பச்சையும் சரி, கவிதையும் சரி, இரண்டுமே பித்தம்தானே! கனவு என்பது குளவி குழப்பிச் செல்லும் மண். கண்கள் கறுப்பு வெள்ளைக் குளவிகள்.

மனசுக்கு நிறமுண்டா? அடிக்கடி இறந்து நீலம் பாரித்துவிடுவதால் நீல நிறமோ? கடலும் மனமும் ஒன்றுதான். அறிய முடியாத ஆழம். மனம் ஒருவரோடு மட்டுமெனில் உளவியல் நோய்; இருவருடன் சம்பந்தப்படுகிறபோது அதே மனம் நோய்க்கு மருந்தாகும் விசித்திரம்! சில நேரங்களில் மருந்தே நோயாகும் விநோதம்!

“ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல் வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு” என்பது வள்ளுவரின் வாய்மொழி.

இருக்கலாம்…. நினைவெல்லாம் நிறைந்துவிடுகிற நெற்றி வியர்வையின் உப்புச் சுவை! மனம் ஒரு தேனீதானே? ஆனால் அது கட்டும் தேன்கூடு அதற்கே சிதை; ஆயிரம் கண் சிதை.

காதல் சொல்ல முடியாத சொல்லின் சூட்சுமக் குறியீடு? காதலில் அகம் சிவந்துவிடும்; பொய் மலர்ந்துவிடும். இதய மின்சாரத்தை உருவாக்கும் கதிரியக்கத் தனிமம்தான் காதல். ஆனாலும் இனிப்புச் சுவை. காதல் ஒரு கடவுள். கண்டடையும் கடவுச் சொல் பொய்.

காய்ந்த ஆவாரம் பூச்சருகை வைத்துத்தான் பகலுக்கு நிறம் தருகிறார் கவிஞர். எதனால் இந்த நிறம் துவர்க்கிறது. அந்த நிறம் பிசாசுகளின் சட்டைகளாலானது.

உலகில் மரணத்தைப் போல வேறெதுவும் கனப்பதில்லை. அந்தப் புளிப்புச் சுவைதான் உயிர்க் குருதியை உறைய வைத்துவிடுகிறது. மரணம் என்பதென்ன? இலை சருகாவதுதானே?

காமம்தான் காதலிக்கு ஆரத்தி எடுக்க வைக்கிறது. கற்பூர ஆரத்தி! ஒரு மனிதனைக் கூட விட்டுவைப்பதில்லை. இது தன் நெருப்பு வளையத்திற்குள் நிறுத்திவைத்துவிடுகிறது. குதிரையின் ‘ஹார்ஸ் பவர்’ என்பது காமத்திற்கான ‘காப்பிரைட்!’ அந்த இளஞ்சிவப்பில்தான் இதயத்தின் நாவில் எச்சில் ஊருகிறது. எவ்வளவுதான் கரந்து வைத்தாலும் நடந்துவிடுகிறது மேனி முழுவதற்குமான மின்சாரப் பாய்ச்சல்.

உண்மை சுடும். பொய்களைச் சுட்டெரித்துவிடும். இறகுகளைப் போலிருக்கும் உண்மைக்கு எரிமலையின் கனபரிமாணம்! வார்த்தைகளின் மௌனமாக இருக்கும் உண்மை பேசா நாக்கின் பேச்சாகவும் இருப்பதுதான் அதன் முரண்.

தனிமையின் நிறம் வெள்ளை. விதவையின் தனிமைக்கு விலை என்ன? தனிமையின் துயரம் வானத்தைப்போல விரிந்தது. கவிஞர் தண்ணீரின் ருசி என்கிறார். எனக்கென்னவோ…. அது கண்ணீரின் ருசி. அதிலிருந்து பீறிடுவதுதான் இதயத்தின் இசை. அரையாக வகிர்ந்த அர்த்த நாரீஸ்வரம் சமச்சீரற்ற சூத்திரம்தானே?

இனிக் கவிதையைப் படியுங்கள்…..

சமச்சீரற்ற சூத்திரம்

~~~~~~~~~~~~~~~~~~

இரவின் நிறம் கரும்பச்சை
முதுகினால் தாங்கமுடியாத கனம்
பித்தச் சுவை
கனவு என்பது குளவி குழப்பிச்செல்லும் மண்

 

மனதின் நிறம் நீலம்
கடலில் கனம்
உப்பின் சுவை
அலையும் தேனீயின் இசை
சிறு குமிழின் உருவம்
நாள் என்பது வெடிக்கும்மனதின் அழுத்தம்

 

காதலின் நிறம் அகச்சிவப்பு
காலத்தின் கனம்
கதிரியக்கத் தனிமம்
இனிப்புச் சுவை
இக்கடவுளை கண்டடைய கடவுச் சொல் பொய்

 

பகலின் நிறம் மஞ்சள்
காய்ந்த ஆவாரம் பூச்சருகின் கனம்
துவர்ப்புச் சுவை
இளக்கி
சம்பவங்கள் பிசாசுகளின் சட்டை

 

வறுமையின் நிறம் சாம்பல்
மரணத்தின் கனம்
புளிப்புச் சுவை
உடல் உண்மையில் இலை
தாய்நீர்மம்

 

காமத்தின் நிறம் இளஞ்சிவப்பு
கற்பூர வில்லையின் கனம்
முப்பத்து முக்கோடிச் சுவை
முப்பிறவி தேடும் புரவி
மின் வலுவளவு

 

உண்மையின் நிறம் கறுப்பு
உள் நாக்கின் கனம்
கரியமிலச் சுவை
வெப்ப நிலை நிறுத்தி
அதன் ஆழம் எரிமலையின் உள்வட்ட நிலப்பரப்பு

 

தனிமையின் நிறம் வெள்ளை
வானின் கனம்
இதயத்தின் இசை
தண்ணீரின் ருசி
சமச்சீரற்ற சூத்திரம்

— தேன்மொழி தாஸ்